பாரிஸ் ஒலிம்பிக்கில் இடம் பிடித்த அன்டிம்!
போதும் பொண்ணு என்று நம் ஊரில் பெயர் வைக்கும் வழக்கம் உண்டு. ஆண் குழந்தையை எதிர்பார்த்து நிறைய பெண் குழந்தைகளைப் பெற்றுக் கொள்வோர் வைக்கும் பெயர். தன் பெற்றோருக்கு நான்காவது மகளாகப் பிறந்த அன்டிம் பங்கல் பெயர் காரணமும் அதுதான். கடைசி என்று பொருள். அந்த அன்டிம், தற்போது பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியா சார்பாகக் கலந்து கொள்கிறார்.
ஹரியானா மாநிலத்தின் பகானா கிராமத்தைச் சேர்ந்தவர் அன்டிம். அவர் அக்கா சரிதா, கபடிப் போட்டியில் கலந்து கொள்பவர். அவர் தூண்டுதலின் பேரில் மல்யுத்த விளையாட்டில் ஆர்வம் செலுத்தினார் அன்டிம். பயிற்சிக்காக இருவரும் இருபது கிலோமீட்டர்கள் பயணம் செய்ய வேண்டும். பயிற்சியாளர் ரோஷினி தொடர்ந்து வலியுறுத்தியதில் மனம் மாறினார் இந்தச் சகோதரிகளின் அப்பா. மகள்களுக்காக நகரத்துக்கு இடம் பெயர்ந்தார். சத்தான பாலுக்காக எருமை மாடுகளையும் சேர்த்தே கூட்டி வந்தார்.
வியாபாரம், மகள்களின் விளையாட்டு வாழ்க்கை, இரண்டுமே நன்றாக வேகமெடுத்தது. பதினைந்து வயதுக்குட்பட்டோர் பிரிவில் 2018ல் தேசிய சாம்பியன் ஆனார் அன்டிம். ஆசிய அளவில் வெண்கலம் வென்றார். பதினேழு வயதுக்குட்பட்டோர் பிரிவில் அடுத்ததாக தேசிய பதக்கம் வென்றார். 2022 காமன்வெல்த் போட்டியில் இவர் உறுதியாக இடம்பிடித்து வினேஷ் போகத் போட்டியிட இடம் கிடைக்குமா என்ற நிலை இருந்தது. ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் 2023ல் வெள்ளி வென்றார். இருபது வயதுக்குட்பட்டோர் பிரிவில் வெற்றி பெற்ற முதல் இந்தியப் பெண் அன்டிம். இப்படி அடுத்தடுத்து வெற்றிகளைக் குவித்தார்.
அதனால் கிடைத்த இடஒதுக்கீட்டில் ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளும் இந்திய வீரர்கள் பட்டியலில் இருக்கிறார்.“போதும்”, இதுவே “கடைசி” என்று சொல்ல இடம் தராமல் இந்தியாவுக்காக மேலும் பல பதக்கங்களை வெல்வார் என எதிர்பார்க்கலாம்.