தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

கோட்டையில் தேசியக்கொடி ஏற்றிய முதல்வர் வெளியிட்ட அறிவிப்புகள்!

01:13 PM Aug 15, 2024 IST | admin
Advertisement

ம் நாட்டின் 78-வது சுதந்திர தின விழா தமிழ்நாடு அரசின் சார்பில் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் கொண்டாடப்பட்டது. இதன்படி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் செயின்ட் ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில், காலை 9 மணிக்கு மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்தார். பின்னர், விழாவில் பேசிய முதலமைச்சர் சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு நன்றி கூறியதோடு தமிழக சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகங்களை நினைவுக்கூர்ந்தார். அதனைத் தொடர்ந்து பல்வேறு அறிவிப்புகளையும் முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டார்.

Advertisement

முன்னதாக, காவல் துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார் முதல்வர் ஸ்டாலின். கொடி வணக்கம் செலுத்திய பின்னர் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். பாரதியாரின் ‘தாயின் மணிக்கொடி பாரீர் - அதைத் தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்’ என மேற்கோள் காட்டி தந்து உரையை தொடங்கினார். இந்த நிகழ்வில் தமிழக அமைச்சர்கள், எம்எல்ஏ-க்கள், எம்பி-க்கள், அதிகாரிகள் மற்றும் திரளான மக்கள் பங்கேற்றனர்.

Advertisement

முதலமைச்சர் ஸ்டாலின் உரையும் வெளியிட்ட அறிவிப்புகளும்

“நாட்டு மக்கள் அனைவருக்கும் விடுதலை நாள் வாழ்த்துகள். சுதந்திரத்துக்காக போராடியவர்களின் நோக்கத்தை நிறைவேற்ற உறுதி ஏற்போம். நம் நாட்டின் நீண்ட விடுதலை போராட்டத்தில் பங்கு கொண்ட விடுதலை போராட்ட தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்துவோம். அவர்களை இந்த அரசு போற்றுகிறது. பன்முகத்தன்மையின் அடையாளம் தேசியக் கொடி.இந்தியாவில் பிற மாநிலங்களை காட்டிலும் தியாகிகளை போற்றுவதில் தமிழகம் சிறந்து விளங்குகிறது. முதல்வர்கள் கொடியேற்றும் அதிகாரத்தை பெற்றுத் தந்தவர் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி. சமூக மாற்றத்தை நோக்கி திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது. அதன்படி சமூக வளர்ச்சித் திட்டங்களுக்கு இந்த அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது.

முதல்வர் மருந்தகம் திட்டம்

ஏழை, எளிய, நடுத்தர மக்களின் தேவைகளை உணர்ந்து, அவர்கள் கேட்பதற்கு முன்னதாகவே அவற்றை நிறைவேற்றித் தரும் அரசாக விளங்கி வருகிறது. நான் தொடர்ந்து மேற்கொண்டு வரும் கள ஆய்வுகள் மற்றும் மக்களிடம் இருந்து பெறப்பட்ட கருத்துகள் ஆகியவற்றின் அடிப்படையில், உங்களது திராவிட மாடல் அரசின் சார்பாக இந்த வீர விடுதலைத் திருநாளில் சில அறிவிப்புகளை வெளியிடுவதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். அரசு மருத்துவமனைகளை நாடி வரும் ஏழை எளியோருக்கு, சிறப்பான சிகிச்சைகளும் தரமான மருந்துகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நடுத்தரக் குடும்பங்கள் தங்களுக்குத் தேவையான மருந்துகளை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியுள்ளது.நீரிழிவு, இரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்குத் தொடர்ந்து மருந்துகளை வாங்க வேண்டியுள்ளதால், இவர்களுக்கு அதிக செலவுகள் ஏற்படுகின்றன. இதற்குத் தீர்வாக, பொதுப்பெயர் வகை (ஜெனரிக்) மருந்துகளையும், பிற மருந்துகளையும் குறைந்த விலையில் இவர்களுக்குக் கிடைக்கச் செய்யும் வகையில், முதல்வர் மருந்தகம் என்ற புதிய திட்டத்தை இந்த அரசு செயல்படுத்தும். வரும் பொங்கல் திருநாள் முதல் செயல்படுத்தப்படவுள்ள இந்தத் திட்டத்தின்கீழ், முதற்கட்டமாக 1000 முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்படும். இந்தத் திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்திட, மருந்தாளுநர்களுக்கும், கூட்டுறவு அமைப்புகளுக்கும் தேவையான கடனுதவியோடு மூன்று லட்சம் ரூபாய் மானிய உதவியாக அரசால் வழங்கப்படும்.

ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுக்கு மானிய கடன் உதவி

தாய்நாட்டிற்காகத் தங்களது இளம் வயதை இராணுவப் பணியில் கழித்து பணிக்காலம் நிறைவு பெற்ற, ஓய்வுபெற்ற முன்னாள் படைவீரர்களது பாதுகாப்பான வாழ்க்கையை உறுதி செய்திடவும். வாழ்வாதாரத்தை மேம்படுத்திடவும், ‘முதல்வரின் காக்கும் கரங்கள்’ என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும். இத்திட்டத்தின்கீழ், முன்னாள் படைவீரர்கள் தொழில் தொடங்க ஒரு கோடி ரூபாய் வரை வங்கிகள் மூலம் கடன் பெறுவதற்கு வழிவகை செய்யப்படும். இத்திட்டத்தின் மூலம் தொடங்கப்படும் தொழில்களுக்கு வழங்கப்படும் கடன் தொகையில், 30 விழுக்காடு மூலதன மானியமும். 3 விழுக்காடு வட்டி மானியமும் வழங்கப்படும். இவர்களுக்குத் திறன் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சி போன்ற தேவையான பயிற்சிகளும் அரசால் வழங்கப்படும். இராணுவப் பணியின்போது உயிரிழந்த படைவீரர்களின் குடும்பத்தினரும் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறலாம். அடுத்த இரண்டு ஆண்டுகளில் 400 முன்னாள் இராணுவத்தினர் பயன்பெறும் வகையில், 400 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு ஏறத்தாழ 120 கோடி ரூபாய் முதலீட்டு மானியம் மற்றும் 3 விழுக்காடு வட்டி மானியம் சேர்த்து வழங்கப்படும்.

தியாகிகள் ஓய்வூதியம் உயர்வு

மாநில அரசு, விடுதலைப் போராட்ட வீரர்களுக்குத் தற்போது வழங்கிவரும் மாதாந்திர ஓய்வூதியம் 20 ஆயிரம் ரூபாய் என்பது 21 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். விடுதலைப் போராட்டத் தியாகிகளின் குடும்பங்களுக்குத் தமிழ்நாடு அரசு தற்போது வழங்கிவரும் மாதாந்திரக் குடும்ப ஓய்வூதியமான 11 ஆயிரம் ரூபாய், 11 ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.வீரபாண்டிய கட்டபொம்மன், சிவகங்கை மருது சகோதரர்கள், இராமநாதபுரம் மன்னர் முத்துராமலிங்க விஜய ரகுநாத சேதுபதி, வ.உ. சிதம்பரனார் ஆகியோரின் வழித்தோன்றல்கள் பெற்றுவரும் மாதாந்திரச் சிறப்பு ஓய்வூதியமான 10 ஆயிரம் ரூபாய் என்பது இனி 10 ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

இயற்கை இடர்பாடுகளை ஆய்வு செய்ய குழு

சமீப காலமாக, நாம் பெரிதும் எதிர்கொள்ளும் பிரச்சினையாகக் காலநிலை மாற்றம் உருவாகியுள்ளது இதனால் ஏற்படும் இயற்கைச் சீற்றங்களால் பெரும் பாதிப்புகள் உண்டாகின்றன. அண்மையில் கூட, நமது சகோதர மாநிலமான கேரளத்தில் பெய்த பெருமழை காரணமாக வயநாட்டில் மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த பாதிப்புகளில் இருந்து கேரளம் மீள்வதற்கான அனைத்து உதவிகளையும் நாம் வழங்கியுள்ளோம்.தமிழ்நாட்டிலும் நீலகிரி மற்றும் வால்பாறை மலைப்பகுதி. கொடைக்கானல் போன்ற மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகள், ஏற்காடு மற்றும் ஏலகிரியை உள்ளடக்கிய மலைப்பகுதிகள் என மலை நிலப் பகுதிகள் அதிகம் உள்ளன. அங்குப் பெரு மழைக் காலங்களில் ஏற்படக்கூடிய இயற்கை இடர்பாடுகள் குறித்து முறையாக ஆய்வு செய்யத் தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.

வனத்துறை, புவிசார் அறிவியல் துறை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை உள்ளிட்ட பல்துறை வல்லுநர்களைக் கொண்ட ஒரு குழுவினால், அறிவியல் அடிப்படையிலான ஒரு விரிவான ஆய்வு, மாநிலப் பேரிடர் மேலாண்மைத் துறையின் மூலமாக இந்தப் பகுதிகளில் மேற்கொள்ளப்படும். மேலும், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் மற்றும் இடர்பாடுகளை முன்னதாக அறிவதற்கும், தவிர்ப்பதற்கும், தணிப்பதற்கும், நீண்டகால அடிப்படையில் ஆபத்துகளைக் குறைப்பதற்கும் அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இந்தக் குழு ஆய்வு செய்து, தனது பரிந்துரைகளை வழங்கும். அந்தப் பரிந்துரைகளின் மீது. தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

திமுக அரசு கடந்த மூன்று ஆண்டுகளில் 77 லட்சம் வேலைவாய்ப்புகளை இந்த அரசு ஏற்படுத்தி தந்துள்ளது. 65 ஆயிரம் இளைஞர்களுக்கு அரசுப் பணி கிடைத்துள்ளது. 2026 ஜனவரிக்குள் 75 ஆயிரம் அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படும்” என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். அதன் பின்னர் பல்வேறு விருதுகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

Tags :
Announcementschief ministerFortINDEPENDENCE DAY EVENT IN CHENNAI முதல்வர் மருந்தகம் திட்டம் INDEPENDENCE DAY CELEBRATIONMK StalinMKStalinIndependenceDaySpeechStalin national flag
Advertisement
Next Article