For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

அன்னபூரணி விவகாரம்: - இந்துக்களின் தோல்வி!

12:40 PM Jan 12, 2024 IST | admin
அன்னபூரணி விவகாரம்     இந்துக்களின் தோல்வி
Advertisement

யன்தாரா மற்றும் ஜெய் நடித்து சமீபத்தில் ஓடிடியில் வெளியாகி இருந்த தமிழ்ப் படம் 'அன்னபூரணி' சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது. மத நம்பிக்கைகளை புண்படுத்துகிறது என்று குறிப்பிட்டு அந்தப் படத்தை தடை செய்யக் கோரியும் நயன்தாரா மற்றும் இயக்குனர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்துத்துவ இயக்கங்கள் ஆங்காங்கே சிறிய அளவில் போராட்டங்களும் நடத்தி இருக்கிறார்கள். அவற்றின் விளைவாக அதன் தயாரிப்பு நிறுவனம் ஜீ எண்டர்டெயின்மெண்ட் மன்னிப்பு அறிக்கை வெளியிட்டிருக்கிறது. கூடவே அந்தப் படத்தை நெட்ஃபிளிக்ஸ்சில் இருந்து நீக்கியும் இருக்கிறார்கள்.

Advertisement

இதனை 'இந்துக்களுக்குக் கிடைத்த வெற்றி' என்று விஸ்வ இந்து பரிஷத்தின் ஊடக தொடர்பாளர் வினோத் பன்சல் பாராட்டி இருக்கிறார். இப்போது மதவாத வலதுசாரிகளின் ஆட்சி மத்தியில் நடக்கிறது. ராமர் கோயில் திறப்பு விழா வேறு கிட்டே வருகிறது. இந்த நேரத்தில் அனாவசிய சர்ச்சை வேண்டாம் என்று ஜீ எண்டர்டெயின்மெண்ட் நினைத்து மன்னிப்புக் கேட்டு பஞ்சாயத்தை முடித்துக் கொண்டிருக்கலாம். ஆனால் வழக்கு தொடரும் பட்சத்தில் நீதிமன்றத்தில் படத்துக்கு ஆதரவாகவே தீர்ப்பு வரும் என்று நம்புகிறேன்.

Advertisement

நிற்க. நான் அந்தப் படத்தை பார்க்கவில்லை. நெட்ஃபிளிக்ஸ்சில் இருந்து தூக்கி விட்டதால் இனிமேல் பார்க்கவும் இயலாது. எனவே டிரெய்லரை மட்டும் பார்த்தேன். அப்புறம் படம் பார்த்திருந்த ஒரு நண்பரிடம் கேட்டு மீதி விஷயங்களைப் புரிந்து கொண்டேன். திரைப்படம் அன்னபூரணி எனும் பிராமணப் பெண்ணைப் பற்றிப் பேசுகிறது. ஸ்ரீரங்கம் கோயில் மடப்பள்ளியில் பிரசாதம் சமைக்கும் வேலையில் இருக்கும் ஒருவரின் மகள் இவள். ஆனால் இந்தியாவின் ஆகச்சிறந்த செஃப் ஆக உயர்வதுதான் அவள் லட்சியம் மற்றும் கனவு எல்லாம். குடும்பத்தின் ஆச்சார சூழல் தன் கனவை அடைவதில் இருந்து தடுக்கிறது. குடும்பத்துக்கு தெரியாமல் கேட்டரிங் படிப்பில் சேர்கிறாள். அங்கே இறைச்சி உணவை சமைக்க வேண்டிய கட்டாயம் வருகிறது. சில பல தயக்கங்கள் தாண்டி அதையும் முயற்சிக்கிறாள்.

இதில் ஆட்சேபத்துக்குரிய விஷயங்களாக மனுதாரர் குறிப்பிட்டிருந்தது:

1. கிளைமாக்ஸ்சில் பிரியாணி சமைப்பதற்கு முன்பு அது சரியாக சமைக்கப்பட்ட வேண்டும் என்று அந்தப் பெண் நமாஸ் படிக்கிறாள்.

2. இறைச்சி உணவை சரியாக சமைக்க வேண்டுமெனில் அதை உண்டு பார்க்க வேண்டும் என்று அவள் வகுப்புத் தோழன் பர்ஃகான் அவளை ஊக்குவிக்கிறான். அதை நியாயப்படுத்த ஸ்ரீராமனே இறைச்சி உணவை உண்டிருக்கிறான் என்று சொல்லி நியாயப்படுத்துகிறான்.

3. அவள் இறைச்சி உணவை முயற்சிக்கும் காட்சியும் அவள் தந்தை வீட்டில் சந்தியாவந்தனம் செய்யும் காட்சியும் மாற்றி மாற்றி காட்டப்படுகிறது.

4. அந்த பர்ஃகானுடன் அவளுக்கு காதல் மலர்கிறது; எனவே படம் லவ் ஜிகாத்தை ஊக்குவிக்கிறது.

படத்தில் பர்ஃகானுடன் காதல் மலர்ந்து அவர்கள் இணைவதாகவெல்லாம் காட்டப்படவில்லை. வெறுமனே நெருங்கிய நட்பு என்ற லெவலில் மட்டுமே அது முடிகிறது. (காதல் மலர்ந்திருந்தாலும் அதில் தவறு காண இடமில்லை என்பது தனி மேட்டர்.) எனவே இந்த லவ் ஜிகாத் ஜல்லியடியை எல்லாம் ஒதுக்கி வைத்து விடுவோம்.

இறைச்சி உணவை முயற்சிக்கும் காட்சியில் அவள் வீட்டு நிலவரத்தை கட் பண்ணி காட்டுவது ஒரு நாடகத்தனமான உத்தி (A dramatic effect). எப்படிப்பட்ட வீட்டில் இருந்து வந்த ஒரு பெண் என்ன செய்கிறாள் பார் என்று உணர்வுகளை ஏற்றிக் காட்டும் முயற்சி. எல்லா இயக்குனர்களும் இந்த உத்தியை பல முறை வெவ்வேறு படங்களில் செய்ததுதான்.

பிராமணப் பெண்கள் மற்றும் ஆண்கள் அசைவம் சாப்பிடுவது அதிர்ச்சியான விஷயமாக இல்லாமல் போய் பல பத்தாண்டுகள் ஆகின்றன. நானும் அவர்களில் ஒருவன். என் நட்பு வட்டத்தில் இருக்கும் சில பிராமணப் பெண்களும் சாப்பிடுவது வழக்கமாக இருக்கிறது. அதற்காக அனைத்து பிராமணர்களும் இப்படித்தான் என்று சொல்ல மாட்டேன். ஆனால் இதெல்லாம் விதிவிலக்காக, பெரிய dramaticகாக காட்ட வேண்டிய அவசியமே இல்லாமல் அதை பிராமணர்கள் சகஜமாக கடக்கத் துவங்கி விட்டார்கள்.

அடுத்ததாக ஸ்ரீராமர் பற்றி. அவர் இறைச்சி உண்டிருக்கிறார் என்பதில் என்ன சர்ச்சை என்று தெரியவில்லை. வால்மீகி ராமாயணத்தில் அப்படித்தான் சித்தரிக்கப்படுகிறது. ++ ராமனைப் போற்றுவதாக சொல்லிக் கொள்ளும் அந்த மனுதாரர் ராமாயண டிவி சீரியலை மட்டுமே பார்த்திருக்கிறார் என்று நினைக்கிறேன். முக்கால்வாசி இந்தியர்கள் இப்படித்தான் இருக்கிறார்கள். சீரியலில் வருவது மட்டுமே ராமாயணம் என்று நம்புகிறார்கள். பாஜகவுக்கு அவர்கள்தான் மூலதனம்.
அந்தப் பெண் பிரியாணி சமைக்கும் முன் நமாஸ் செய்வது போன்ற காட்சி பொதுப் பிம்பத்தை அனுசரித்து செய்ததாக இருக்கும் என்று நினைக்கிறேன். காரணம், பிரியாணி என்றாலே முஸ்லிம்கள்தான் என்று பிம்பப்படுத்தி விட்டார்கள். இப்படிப்பட்ட பொதுப்பிம்பம் எல்லாத்தரப்பிலும் இருக்கிறது.

ஐயங்கார்கள் போல வேறு யாரும் புளியோதரை சமைக்க முடியாது என்று இருக்கிறது. எனவே நல்ல பிரியாணி சமைக்க முஸ்லிமாகவே நடந்து கொள்ள வேண்டும் என்று படத்தில் சொன்னார்களா என்று தெரியாது. இந்தக் காட்சி சில இந்துக்களை சங்கடப்படுத்தி இருக்கலாம் என்பதை மட்டும் இப்போதைக்கு புரிந்து கொள்ள முடிகிறது.ஆனால் இதில் எதிலுமே தடை செய்யும் தேவை இல்லை என்பதுதான் என் நிலைப்பாடு. அன்னபூரணி திரைப்படம் குறித்து நான் பார்த்த வேறு ஒரு பதிவில் இதே படத்தை அந்தப் பெண் முஸ்லிம் என்று மாற்றி அமைத்திருந்தால் படம் எப்படி அணுகப்பட்டிருக்கும் என்று அந்தப் பதிவர் கேட்டிருக்கிறார். அந்தப் பெண் ஒரு முஸ்லிம்; செஃப்புக்கான இறுதிப் போட்டியில் பன்றிக்கறி சமைக்க வேண்டிய கட்டாயம் வருகிறது. அதற்காக அவள் அதை சுவைத்துப் பார்க்க வேண்டும். அவள் நெருங்கிய நண்பன் - ஒரு இந்து - அவளை சாப்பிட சொல்லி ஊக்குவிக்கிறான். அவள் அதை சுவைக்கும் காட்சியும் அவள் தந்தை நமாஸ் படிக்கும் காட்சியும் intercut செய்யப்பட்டு காட்டப்படுகிறது.

இப்படி ஒரு படம் கண்டிப்பாக கடும் எதிர்வினைகளை உருவாக்கி இருந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆங்காங்கே கலவரங்கள் கூட துவங்கி இருந்திருக்கலாம்.
ஆனால் இங்கே இந்துத்துவர்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன்: இந்துத்துவர்களுக்கு இஸ்லாம் எதிரி என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் இஸ்லாம்தான் உங்களுக்கு ரோல் மாடலா? அவர்கள் செய்வதை எல்லாம் நீங்களும் செய்வீர்களா? அப்படி எனில் இஸ்லாத்தை விமர்சிக்கும் தகுதி உங்களுக்குப் போய் விடுகிறது அல்லவா? இங்கிலாந்தில் ஜிம்மி கார் மற்றும் ரிக்கி ஜெர்வேஸ் போன்ற ஸ்டாண்ட் அப் நகைச்சுவையாளர்கள் மேடைகளில் இயேசுவை, மேரி மாதாவை மற்றும் பைபிளை எல்லாம் கழுவி கழுவி ஊற்றுவார்கள். அங்கே எந்த போதகரும் 'இதே மாதிரி குர்-ஆனை மற்றும் நபிகளை கழுவி ஊத்திப் பாரேன்!' என்று கேட்பதில்லை. காரணம், தங்கள் சமூகம் சுதந்திரமயமாதலை மட்டுமே குறிக்கோளாக வைத்து அவர்கள் செயல்படுகிறார்கள்.

மத அவமதிப்புகளை இஸ்லாம் மிக மிகத் தீவிரமாக, நிறைய நேரம் வன்முறையுடன் அணுகுகிறது என்பதுதான் நடைமுறை உண்மை. அது இஸ்லாமிய சமூகத்துக்குத் தொடரும் அவமானம். நான் முன்பே குறிப்பிட்டது போல இஸ்லாமாஃபோபியா என்று (தவறாக) குறிப்பிடப்படும் இஸ்லாம் மீதான பயத்துக்கு முக்கிய காரணிகளில் ஒன்று அவர்களின் இந்த அணுகுமுறை. மத அவமதிப்புகளை சகஜமாக கடக்க முஸ்லிம் சமூகம் கற்றுக் கொண்டு விட்டால் 75% இஸ்லாமாஃபோபியா நீங்கி விடும் என்பது என் வாதம்.

எனவே அவர்களை இங்கே ரோல் மாடலாக காட்டுவது அவலமான அணுகுமுறை. ஒரு பக்கம் இஸ்லாத்தை விமர்சிப்போம், எதிர்த்து நிற்போம். இந்து மதம் மட்டுமே சீர்திருத்தங்களை ஏற்றுக் கொண்டு முன்னேறும் சமூகம், என்று உருட்டுவோம். மறு பக்கம் இஸ்லாமிய சமூகங்கள் போலவே நாங்களும் சென்ஸிட்டிவ்வாக மாற முயற்சிப்போம் என்பது போங்காட்டம். ஏதாவது ஒரு பக்கமா நின்னு உருட்டுங்க பாஸ்.

இந்தப் படம் என்றில்லை. கருத்துரிமையை நசுக்கும் எந்த சமூகமும் நீண்ட கால அடிப்படையில் உருப்பட்டதாக தகவலில்லை. சொல்லப் போனால் முஸ்லிம் சமூகங்கள் பலவும் எதிர்கொண்டு வரும் இருத்தலியல் சிக்கலுக்கு இருக்கும் பல்வேறு காரணிகளில் முக்கியமானது 'கருத்துரிமை என்றால் கிலோ என்ன விலை?' என்று அவர்கள் கேட்பதுதான். அவர்களை உதாரணம் காட்டி நாமும் அப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது நம்மையும் அதே போன்ற இருத்தலியல் சிக்கல்களில்தான் கொண்டு போய் விடும்.

அப்படிப்பட்ட சமூக சிக்கலை நோக்கி இந்து சமூகங்களைக் கொண்டு போகும் முயற்சிகளில் இந்துத்துவர்கள் தொடர் வெற்றி பெற்று வருகிறார்கள். இந்தப் படம் நீக்கப்பட்டது அவர்களுக்குக் கிடைத்திருக்கும் சமீபத்திய வெற்றி.ஆனால் விஹெச்பி சொல்வது போல இது இந்துக்களின் வெற்றி அல்ல. இந்துக்களின் தோல்வி.

++

तौ तत्र हत्वा चतुरः महा मृगान् |
वराहम् ऋश्यम् पृषतम् महा रुरुम् |
आदाय मेध्यम् त्वरितम् बुभुक्षितौ|
वासाय काले ययतुर् वनः पतिम् || 2-52-102

Having hunted there four deer, namely Varaaha, Rishya, Prisata; and Mahaaruru (the four principal species of deer) and taking quickly the portions that were pure, being hungry as they were, Rama and Lakshmana reached a tree to take rest in the evening.

तां तथा दर्शयित्वा तु मैथिलीं गिरिनिम्नगाम् |
निषसाद गिरिप्रस्थे सीतां मांसेन चन्दयन् || 2-96-1
इदं मेध्यमिदं स्वादु निष्टप्तमिदमग्निना |
एवमास्ते स धर्मात्मा सीतया सह राघवः || 2-96-2

Having shown Mandakini River in that manner to Seetha, the daughter of Mithila, Rama set on the hill-side in order to gratify her appetite with a piece of flesh. Rama, whose mind was devoted to righteousness stayed there with Seetha, saying; "This meat is fresh, this is savoury and roasted in the fire."

(From Valmiki Ramayana)

- ஸ்ரீதர் சுப்ரமணியம்

Tags :
Advertisement