அன்னை தெரசா மறைந்த நாளின்று
ஆக்னஸ் கோன்ஜா போஜாஜியூ என்ற இயற்பெயர் கொண்ட அவர் அல்பேனியாவில் பிறந்து, துறவற சபையினில் சேர்ந்து ஒரு ஆசிரியையாக இந்தியா வந்தார், ஆனால் பள்ளிக்கு செல்லும் வழியில் சாலையோரம் கிடந்த நோயாளிகள், முதியவர்கள், பசியாளர்களை தாண்டிச் செல்லும்பொழுது அம்மக்களின் தேவைகளில் இயேசுவைக் கண்டார், அவர்களுக்கு உழைப்பதே இயேசுவிற்கு செய்யும் பணி என அதைச்செய்ய முன் வந்தார். மேலிடம் ஒழுங்காக பாடம் மட்டும் நடத்து என்றது. அவர் அசரவில்லை. மாறாக சபையினை விட்டே வெளியேறி சகோதரி தெரசா ஆனார். மாற்று உடை இல்லை, தங்க இடமில்லை, அடுத்த வேளைக்கு உத்திரவாதமில்லை கையில் இருந்ததோ 5 ரூபாய், அதோடு கிளம்பினார். அந்த நோயாளிகளை அரவணைத்தார், நல்ல செய்தி சொன்னார். நான் இருக்கின்றேன் உன் துயரம் போக்குவேன் என தாழ கிடப்பவனிடம் சொன்னதே நற்செய்தி. முதலில் ஓட அடித்தார்கள், அவமானப் படுத்தினார்கள், கொஞ்சமும் தளராமல் போராடினார் தெரசா. தன் அவமானத்தையும், கண்ணீரையும் எல்லாம் இயேசுவோடு மட்டும் பகிர்ந்துகொண்டார். அவர் சபையோ, இதர சபைகளோ அவரைக் கண்டு கொள்ளவில்லை. ஆனால் கடவுள் அவளை கண்காணித்துகொண்டே இருந்தார்: கூடவே கல்கத்தா மக்களும்.
யார் இவள்? எங்கிருந்தோ வந்தாள், நமது மக்களுக்கு பாடுபடுகின்றாள் என சிந்திக்க தொடங்கினர். தெரசாவிற்கு ஒரு அங்கிகாரம் கிடைத்தது. முதலில் பழைய பொருள், மீதி உணவு கொடுத்தனர். அதன் பின் கொஞ்ச கொஞ்சமாக உதவி கரங்கள் நீண்டன. தொழுநோயாளிகளை, சாக்கடை புழுக்களாக சாலையோரம் சுருண்டு கிடந்த மக்களை, மானிட நேயத்தில் அவர் தொட்டு அவரணைத்த பொழுது: கல்கத்தா நகரம் கண்ணீர் விட்டு அவரிடம் மண்டியிட்டது.
இப்படி தனி ஆளாகத்தான் வளர்ந்தார் தெரசா, பின்னாளில் உலகெல்லாம் அறியப்பட்டார்.
அவருக்கு முதல் சிக்கல், அப்பகுதி சங் பரிவார கும்பலிடம் இருந்து வந்தது. அவர் மதமாற்றம் செய்கிறார், அவரை நாடு கடத்துங்கள் என முழக்கமிட்டு நேரு முன்னால் வெடித்தது சர்ச்சை.இதையடுத்து நேரு மேற்படி தலைவர்களுடன் அன்னையின் ஆசிரமம் சென்றார், அங்கே நோயாளிகளுக்கு மருந்து இடுதல், முதியவருக்கு உணவூட்டுதல் போன்ற பணிகள் நடந்துகொண்டிருந்தன. இந்துக்கள் கீதையும் இஸ்லாமியர் குரானும் படித்துகொண்டிருந்தனர்
தெரசா அமைதியாகச் சொன்னார், மனிதர்களின் தேவையில் நான் என் இயேசுவை காண்கிறேன், அவருக்கு பணி செய்கிறேன். இவர்கள் எம்மதமோ, என்ன இனமோ எனக்கு பிரச்சினையே அல்ல. மனிதர்கள் அது போதும். இப்படித்தான் பரமன் இயேசு எங்களுக்கும் கற்பித்தார், அதனைத்தான் செய்கின்றோம், இந்த சேவைதான் கிறிஸ்தவ மதம், இப்படி தன்னலமற்ற சிலுவையினை சுமக்கத்தான் எங்களுக்கு கற்பிக்கபட்டிருக்கின்றது. சுமக்கின்றோம், எங்களோடு அச்சிலுவை சுமக்க வருபவர்களை சேர்க்கின்றோமே தவிர, வேறு ஒன்றுமல்ல. எங்கள் சபையில் இருக்கும் சகோதரிகள் எல்லாம் அச்சிலுவை சுமக்க வந்தோரே. எனக்கு தேவை மதமாற்றம் அல்ல, மாறாக நம் மனமாற்றம். இம்மானிடருக்கு, சக மனிதருக்கு மனிதனாய் உதவும் மனமாற்றம். மதங்களை தாண்டிய மானிட நேய மனமாற்றம்.
நேரு சொன்னார், இவள் அந்நிய நாட்டுக்காரி, ஆனால் சேவை செய்வது நம் மக்களுக்காக, உங்கள் வீட்டு பெண்கள் இதற்கு தயார் என்றால் இவளை அனுப்பிவிடலாம்.தலைகுனிந்த பரிவாரங்கள், அதன் பின் வம்பு வளர்க்கவே இல்லை. அந்த மனமாற்றம் அங்கே நடந்தது, அதன் பின் தெரசாவின் சேவைக்கு எல்லோரும் உதவினார்கள்.
உலகமே கொட்டி கொடுத்தது, அவருக்கு கிடைக்காத பரிசுகள் இல்லை, குவியாத காணிக்கை இல்லை. கிரிக்கெட் வீரர்கள் கூட கல்கத்தாவில் விளையாடினால் வெற்றி பணத்தில் ஒரு பங்கினை எடுத்து வைத்தார்கள்.
எப்படி அவ்வளவு பெரும் சேவை நிறுவனத்தை அவரால் இயக்க முடிந்தது? எளிதான விஷயம், பைபிளில் 5 ஆயிரம் ஏழைகளுக்கு உணவளித்தார் இயேசு, பல இடங்களில் அது காணக் கிடக்கின்றது, எத்தனையோ பேருக்கு நோய் தீர்த்தார் என்பதும் இருக்கின்றது..பிறருக்காக வாழ்ந்த புனிதர்கள் வரிசையில் தெரசாவும் வருவதில் ஆச்சரியமில்லை, புனிதர் எனும் வார்த்தைக்கு அன்றே திருவள்ளுவன் குறள் எழுதி வைத்தான்
இப்பேர்பட்ட அந்த அன்னையை ஆந்தையாரும் நேர்காணல் செய்திருக்கிறார் என்பதும் நினைவில் கொண்டு அன்னாரின் நினைவு நாளில் அஞ்சலி
வையத்தில் வாழ்வாங்கு வாழ்பவர் வானுறையும்
தெய்வத்தில் வைக்க படும்