அண்ணா பல்கலைக் கொடுமை-சில சந்தேகங்கள்!
அண்ணா பல்கலை வளாகத்தில் நடந்த கொடுமைக்கு ஆளும் கட்சி மட்டுமல்ல; நாம் அனைவருமே வெட்கித் தலைகுனிய வேண்டும். எங்கோவொரு வனாந்திரத்தில் நடந்ததல்ல; புகழ்பெற்றதொரு பல்கலை வளாகத்திற்குள் நடந்திருக்கிறது. அந்தக் கொடுமையைவிட இன்னொரு கொடுமை என்ன தெரியுமா? அது பற்றி சேனல்களில் நடந்த விவாதங்கள். அனைத்துக் கட்சியினரும் வரிந்து கட்டிக் கொண்டு பேசினார்கள். என்ன பேசினார்கள்? எதிர்க் கட்சியினர் ஆளுங்கட்சியைக் குறை சொல்வதிலேயே குறியாக இருந்தார்கள். ஆளுங்கட்சியைச் சார்ந்தவர்களோ, தங்களைத் தற்காத்துக் கொள்வதில்தான் குறியாக இருந்தார்கள். இருதரப்பினருமே நடந்த கொடுமைக்கான காரணங்களை ஆராய்வதில் அக்கறை காட்டவேயில்லை. அனைவரும் 2026 தேர்தலைக் குறிவைத்தே பேசினார்கள். அது, எருதின் புண்ணைக் காகங்கள் கொத்திக் கிளறும் சாட்சியைத்தான் நினைவூட்டியது.
நடந்த கொடுமையை யோசித்துப் பார்க்கும்போது, நமது சிற்றறிவுக்கு எட்டிய வரையில் சில சந்தேகங்கள் எழுகின்றன. கைது செய்யப்பட்டிருக்கும் குற்றவாளி, சாலையோரக் கடை போட்டு பிரியாணி விற்பவர் என்கிறார்கள். அப்படிப் பட்ட நபருக்கு, பல்கலை வளாகத்திற்குள் என்ன வேலை? அதுவும் முன்னிரவு நேரத்தில்? அவர் மாணவரைப் போலவும் இல்லை. ஆசிரியரைப் போலவும் இல்லை. அப்படிப்பட்டவரை வாயிற்காப்பாளர்கள் எப்படி உள்ளே அனுமதித்தார்கள்? அவர் நேர் வழியாகச் செல்லாமல், சுவர் ஏறிக் குதித்துத்தான் சென்றார் என்பது உண்மையானால், அந்த முன்னிரவு நேரத்தில், எதை எதிர்பார்த்துப் பல்கலை வளாகத்திற்குள் சென்றார்? திருடுவதற்காகச் சென்றாரென்றால், பல்கலையில் எதைத் திருடச் சென்றார்? ஒரு திருடர் (எதற்கும் மரியாதை கொடுத்து வைப்போம். எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்குமோ யார் கண்டது?) ஒரு வீட்டுக்குள் சுவரேறிக் குதித்துச் செல்வதைப் புரிந்து கொள்ள முடியும். திருடும் நோக்கமுடையவர் பல்கலை வளாகத்திற்குள் எதற்குச் செல்லப் போகிறார்?
ஆக, இந்த வழக்கில் குற்றம் சாட்டப் பட்டவர், வளாகத்திற்குப் பதியவரல்லர் என்பதும் அங்குள்ளவர்களுக்கு அறிமுகமானவராகத்தான் இருக்க வேண்டுமென்பதும் தெளிவாகத் தெரிகிறது. அதனால், அன்று நடந்த குற்றம், சம்பந்தப் பட்டவரால் திட்டம் போட்டுத்தான் நடந்திருக்க வேண்டும் என்றும் அனுமானிக்க முடிகிறது. இந்நிலையில், இது அங்கு நடந்த முதல் குற்றம்தானா என்பதையும் ஆராய வேண்டியிருக்கிறது. இக்கொடுமையில், இன்னொரு முக்கியமான சந்தேகத்தையும் தவிர்க்க முடியவில்லை. பல்கலையில் படிக்கும் ஒரு மாணவர். ஒரு மாணவி. அவர்கள் நண்பர்களா, காதலர்களா என்பதெல்லாம் இங்கே தேவையில்லாத விஷயம். அவர்கள் வளாகத்திலுள்ள, ஒதுக்குப்புறமானதோர் இடத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களை அப்படி முதல்முறையாகப் பார்க்கும் ஒருவருக்கு, உடனடியாகப் பாலியல் வெறி தூண்டப்பட்டு விடுமா? அப்படியே தூண்டப்பட்டாலும் - தனிமையான இடமென்றாலும் - அவர்கள் இருவர். குற்றவாளி ஒருவர். இருவரை ஒருவரால், அத்தனை சுலபமாக ஜெயிக்க முடியுமா?
எந்த மனிதனும் தனக்கு ஆபத்து நேரும்போது, தன்னையறியாமல் கூச்சலிடுவதுதான் இயல்பு. அந்த மாணவரும் மாணவியும் அந்த நேரத்தில் கூச்சலிட்டார்களா? அது சுற்று வட்டாரத்தில் யாருக்குமே கேட்கவில்லையா? சரி, இவையெல்லாம் போகட்டும். சம்பந்தப்பட்ட குற்றவாளி, எப்படியோ தனது பலத்தால், அந்த மாணவரைத் தாக்கியோ, கத்தியைக் காட்டி பயமுறுத்தியோ விரட்டி விட்டாரென்றே வைத்துக் கொள்வோம். தான் விரட்டப்பட்டதற்கான காரணம் என்னவென்று அந்த மாணவருக்குத் தெரிந்திருக்காதா?
இந்நிலையில் அவர் என்ன செய்திருக்க வேண்டும்? அரக்கப் பரக்க ஓடிவந்து, சக மாணவர்களிடம் நடந்ததைக்கூறி, அவர்களையும் அழைத்துச் சென்றிருந்தால், நடந்த கொடுமை தடுக்கப் பட்டிருக்கவும் வாய்ப்பிருக்கிறதே. ஏன் செய்யவில்லை? தனது சக மாணவிக்காக எதுவுமே செய்யாத அந்த மாணவரால், அன்றிரவு எப்படித் தூங்க முடிந்தது? அந்தக் கொடுமை நடந்த பிறகு - அன்றிரவு முழுவதிலும் அந்த மாணவராலும் மாணவியாலும் எப்படி அமைதியாக இருக்க முடிந்தது? மறுநாளும் அந்த மாணவியிடம் கண்ட வித்தியாசத்தை வைத்துத்தான் சக மாணவிகள் கண்டு பிடித்துப் புகார் கொடுக்க வைத்திருக்கிறார்களென்றால், இடையில் உண்டான மெளனத்திற்கான காரணம் என்ன? இதற்கான விடையை நேர்மையான முறையில் விசாரித்தால்தான் கண்டுபிடிக்க முடியும். பார்ப்போம்.
செ. இளங்கோவன்