For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

அஞ்சாமை பட பிரஸ்மீட் ஹைலைட்ஸ்!

02:04 PM Jun 01, 2024 IST | admin
அஞ்சாமை பட பிரஸ்மீட் ஹைலைட்ஸ்
Advertisement

ல்வேறு வெற்றி படங்களை தயாரித்த ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம், முழுமையாக ஒரு படத்தினை வாங்கி வெளியிடும் படம் ‘அஞ்சாமை’. இதனை திருச்சித்ரம் சார்பில் டாக்டர் திருநாவுக்கரசு தயாரித்துள்ளார். மோகன் ராஜா, லிங்குசாமி உள்ளிட்டோரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த எஸ்.பி.சுப்புராமன் இதனை இயக்கியுள்ளார். விதார்த், வாணி போஜன், ரகுமான், கிருத்திக் மோகன், பாலசந்திரன் ஐஏஎஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப்படத்திற்கு கார்த்திக் ஒளிப்பதிவு செய்ய, பாடல்களுக்கு ராகவ் பிரசாத் இசையமைக்க, கலா சரண் பின்னணி இசையமைத்துள்ளார். வரும் ஜூன்-7ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இதனை முன்னிட்டு அஞ்சாமை படக்குழுவினர் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துக் கொண்டனர்.

Advertisement

இந்த நிகழ்வில் பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா பேசும்போது, “இந்தப் படத்தில் பேசக்கூடிய விஷயம் இப்போதும் கூட நம் சமூகத்தில் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது என்பதால் நிச்சயம் ஒரு பேசு பொருளாக இருக்கும். தந்தை மகனுக்கு இடையே இருக்கக்கூடிய பேருறவை பிரதிபலிக்கக் கூடிய உணர்வுபூர்வமான பாடலை நான் எழுதியுள்ளேன். சங்க இலக்கியங்களில் எப்படி நாட்டுப்புற மனிதர்களின் உளவியலை, உணர்வுகளை செவ்வியல் வெளிப்பாடாக ஒரு செந்தமிழில் வெளிப்படுத்தியதோ அதே மாதிரி ஒரு பாடலைத் தான் இதில் எழுதியுள்ளேன்.தன்னுடைய முதல் படத்தில் என்னை மறக்காமல் அழைத்து இந்த வாய்ப்பைக் கொடுத்த இயக்குநர் சுப்பு அண்ணனுக்கு நன்றி. இந்த படம் கல்வியை குறித்து பேசுகிறது. ஒரு தனி மனித கடமையாக இருந்த கல்வி, பின்னர் இந்த சமூகத்தின் மேம்பாட்டிற்காக, சமூகத்தில் இயங்கக்கூடிய தனி மனிதனின் அக முதிர்வுக்காகவும் வளர்ச்சிக்காகவும் கல்வி இருந்தது. ஆனால் இன்றைய காலகட்டத்தில் கல்வி என்பது ஒரு அரசியல் உரிமையாக இருக்க வேண்டும் என்கிற கட்டத்தில் நாம் இருக்கிறோம். அதை ஒருத்தர் மட்டுமே எடுத்துச் செல்லக்கூடாது என்பதை காத்திரமாக பேசக்கூடிய படம் தான் அஞ்சாமை. எதற்கு அஞ்ச வேண்டுமோ அதற்கு அஞ்ச வேண்டும்.. எதற்கு அஞ்சக் கூடாதோ அதற்கு அஞ்ச கூடாது என்பதற்கு தமிழில் நிறைய பாடல்கள் இருக்கிறது. இந்த படம் நாம் எதற்கு அஞ்ச கூடாது என்பதை சொல்லும் படம்” என்று கூறினார்.

Advertisement

நடிகர் கிருத்திக் மோகன் பேசும்போது, “இயக்குநர் சுப்புராமன் சார் எனக்கு வாய்ப்பு கொடுத்தார் என்பதை விட இந்த கதாபாத்திரத்தில் என்னை முழுதாக நம்பினார் என்று சொல்வேன். விதார்த் சார் படப்பிடிப்பிலும் சரி, வெளியேயும் சரி நிறைய ஆலோசனைகள் கூறினார். ரகுமான் சாரின் அனுபவம் அளவிற்கு கூட என் வயது இல்லை. அவர் சொன்ன அறிவுரைகள் அனைத்துமே மனதில் இருக்கிறது. அதை நிச்சயம் கடைபிடிப்பேன். இப்படி ஒரு பெரிய படத்தில் நடித்ததே எனக்கு ட்ரீம் ஆக இருக்கும்போது, ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ்சே அந்த படத்தை வெளியிடுவது இன்னும் மிகப்பெரிய சந்தோசம்” என்றார்.

பாலச்சந்திரன் ஐஏஎஸ் பேசும்போது, “தமிழ் திரைப்படம் ஒவ்வொரு காலகட்டத்திலும் வெவ்வேறு விதமாக வளர்ந்து வந்திருக்கிறது. முன்பெல்லாம் செவிக்கு இனிய 64 பாடல்கள் என்று இருந்தால் தான் படம் பார்ப்பதற்கே செல்வார்கள் என்கிற ஒரு காலம் இருந்தது. அதன் பிறகு சிவாஜி கணேசனின் வசனங்கள் அடங்கிய படங்கள் ஆதிக்கம் செலுத்தின. இன்று இளைஞர்களின் காலம். இந்த படம் சட்டத்திற்கும் நியாயத்திற்கும் இடையில் நடக்கும் போராட்டத்தை சொல்கிறது.. சட்டம், நியாயத்தை பரிந்துரைக்கவில்லை என்றால் நியாயத்தின் பக்கம் நிற்கவில்லை என்றால் சமுதாயத்தில் என்ன நடக்கும் என்கிற வற்றாத, சமகால பிரச்சனையைப் பற்றி பேசுகிறது. இந்த படத்தில் நடித்தவர்கள் எல்லாமே இளைஞர்கள் என்பதால் படப்பிடிப்பில் நானும் ஒரு இளைஞனாகவே உணர்ந்தேன். இயக்குநர் சுப்புராமன் ஒரு எம்டன். கடைசி வரை என்னிடம் முழு கதையை சொல்லவே இல்லை. அந்த அளவிற்கு சொல்ல வேண்டியதை மட்டும் சொல்லி மற்ற விஷயங்களை ரகசியமாகவே வைத்திருந்தார். இன்றைக்கு அது தேவையான ஒன்றுதான்” என்றார்.

இயக்குநர் சுப்புராமன் பேசும்போது, “இந்தப் படம் நடந்ததே காலத்தின் கட்டாயம் என்று தான் நினைக்கிறேன். படத்தின் தயாரிப்பாளர் திருநாவுக்கரசு ஒரு டாக்டர் மட்டுமல்ல.. மன நல மருத்துவர், பேராசிரியர், எழுத்தாளர், பேச்சாளர், சமூக சிந்தனையாளர், தமிழ் ஆர்வலர் என பல பரிமாணங்களில் இருப்பவர். அவரை எல்லாம் எளிதாக திருப்திப்படுத்தவே முடியாது. அப்படிப்பட்டவரிடம் இருந்து நான் பாஸ்மார்க் வாங்கி இருக்கிறேன் என்றால் அதை பெரிய சந்தோஷமாக நினைக்கிறேன். அவருடைய சிந்தனையும் என்னுடைய சிந்தனையும் ஏதோ ஒரு இடத்தில் இணைந்ததால் தான் இந்த படம் நடந்திருக்கிறது.

ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனத்தில் படம் இயக்க வேண்டும் என்பது பல பேருக்கு ஒரு ட்ரீம் ஆகவே இருக்கிறது. அவர்கள் எந்த விஷயத்தையும் சாதாரணமாக ஒத்துக் கொள்ள மாட்டார்கள். அவர்கள் இந்த படத்தை கையில் எடுத்ததே அஞ்சாமைக்கு கிடைத்த முதல் வெற்றி என நினைக்கிறேன். சட்டம் போடும் அதிகாரத்தில் இருக்கும் ஒருவர், அதனால் ஒரு சாதாரண மனிதன் எந்த விதத்தில் பாதிக்கப்படுவான் என்று தான் பார்க்க வேண்டும். அப்படி பாதிக்கப்படும் ஒரு சாமானியனின் கதை தான் இது. எல்லா பெற்றோரும் தனது குழந்தை ஒரு சான்றோனாக இருக்க வேண்டும் என்று தான் ஆசைப்படுவார்கள். அப்படி சான்றோன் ஆக்குவதற்கு கல்வி ரொம்ப முக்கியம். அந்த கல்வி தற்போது எந்த நிலையில் இருக்கிறது, அதற்காக பெற்றோர் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்பதைத்தான் வாழ்வியலுடன் கலந்து ரத்தமும் சதையுமாக இந்த படம் பேசி இருக்கிறது.

விதார்த் சிறந்த நடிகர் என்பது தெரியும். அவரிடம் இருந்து இன்னும் ஆழமாக தோண்டி கொஞ்சம் தங்கத்தை எடுத்துள்ளோம். வாணி போஜன் ஒரு பொம்மை போல அல்லாமல் இந்த படத்தில் வேறு ஒரு பரிணாமத்தில் நடித்துள்ளார். அதற்கு உண்மையிலேயே தைரியம் வேண்டும். இது பெரும்பாலும் மலையாளம், வங்காளத்தில் உள்ள நாடகக் கலைஞர்கள் தான் செய்வார்கள். அந்த அளவிற்கு அவருக்குள் இருக்கும் தாகம் இந்தப் படத்தின் மூலம் அவரை வேற லெவலுக்கு எடுத்துச் செல்லும். இந்த சமயத்தில் மம்முட்டி சாரிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.. அவரை ஹைதராபாத்தில் சந்தித்து இந்த கதையை சொன்னபோது அவரும் நடிக்க சம்மதித்தார். அதே சமயம் அவருடைய தேதிகள் கிடைக்க இரண்டு மாதம் தாமதமாகும் என்பதாலும் நாங்கள் உடனடியாக படப்பிடிப்பு நடத்த கிளம்பி விட்டதாலும் அவரை இந்த படத்தில் மிஸ் பண்ணி விட்டோம். அவருக்கு அடுத்ததாக தான் ரகுமான் சார் அந்த இடத்திற்கு வந்தார். அவருக்கு தமிழ் டியூசன் எல்லாம் வைத்து மிகச்சிறந்த நடிப்பை கொடுத்திருக்கிறார்.இந்தப் படத்தில் கிருத்திக் நடித்த கதாபாத்திரத்திற்காக பல பேரை ஆடிஷன் செய்தோம். ஆனால் மிகக் குறைந்த நேரத்திலேயே வசனங்களை மனப்பாடம் செய்து சிறப்பாக நடித்து எங்களை வியக்க வைத்தார் கிருத்திக். அவருக்கு மிகப்பெரிய எதிர்காலம் இருக்கிறது. தயாரிப்பாளரின் நண்பர் என்றாலும் கூட பாலச்சந்திரன் சாரை ஆடிசன் வைத்து தான் தேர்வு செய்தோம். தமிழ் சினிமாவுக்கு அடுத்த திலகன் ரெடி ஆகிவிட்டார் என மிரண்டு போனோம். எடிட்டர் ராம் சுதர்சன் கமல் சாரிடமிருந்து சுமார் தயாராகி 18 படங்களில் பணியாற்றி இருந்தாலும் இதுதான் முதல் படம் போலவே வேலை பார்த்தார். கார்த்திக் நேத்தா, அறிவுமதி ஆகியோருடன் நானும் இந்த படத்தில் ஒரு பாடல் எழுதியுள்ளேன். மணி சர்மாவுடன் கிட்டத்தட்ட 300 படங்களில் இணைந்து பணியாற்றியுள்ள அவரது சகோதரர் மகன் ராகவ் பிரசாத் இந்த படத்தில் இசையமைத்திருக்கிறார். இந்த படத்திற்கு முதல் பாதியில் எந்த இடத்திலும் வெஸ்டர்ன் இசை வந்துவிடக் கூடாது என உறுதியாக இருந்தோம். வலியை சொல்லும் அழகான மெலடி பாடல் ஒன்றை வழக்கமான பார்மெட்டில் இருந்து உடைத்து புதுவிதமாக கொடுத்திருக்கிறார். இந்தப் படம் பெற்றோருக்கான, மாணவருக்கான, நமக்கான படம்.. யாருக்கும் எதிரான படம் அல்ல,, மக்களுடைய வலியை சொல்லி இருக்கிறோம்” என்றார்.

நாயகி வாணி போஜன் பேசும்போது, “அஞ்சாமை எனக்கு ரொம்பவே முக்கியமான படம். நமக்கு ரொம்பவே நெருக்கமான, உயிருக்கு உயிரானவர்களை பற்றி அடிக்கடி விசாரிப்போம். அப்படி ஒரு உயிருக்கு உயிரான படம்தான் அஞ்சாமை. இந்த படத்தை ரொம்பவே நேசித்திருக்கிறேன். எந்த படத்தில் வேலை பார்க்கச் சென்றாலும் இந்த படம் பற்றிய ஞாபகம் வந்துவிடும். அந்த அளவிற்கு உயிரைக் கொடுத்து வேலை பார்த்திருக்கிறோம். இரண்டு குழந்தைக்கு அம்மாவாக நடித்திருக்கிறீர்களே என்று பலரும் கேட்டார்கள். அப்படி ஒரு கதாபாத்திரத்தை நான் பண்ணவில்லை என நினைத்தால் நான் நடிகையாக இருப்பதற்கு அர்த்தமே இல்லை என நினைக்கிறேன். எனக்கு இப்படி ஒரு படம் கிடைத்தது ரொம்ப ரொம்ப சந்தோசமான விஷயம். எனக்கு நடிக்க தெரியும் என இயக்குநரிடம் கூறினாலும் உங்களிடமிருந்து எங்களுக்கு என்ன கிடைக்கும் என நாங்கள் ஒரு ஆடிஷன் செய்து கொள்கிறோம் என இயக்குநர் கூறினார். அப்போதே இது ஒரு நல்ல படமாக இருக்கும் என எனக்கு தோன்றியது.

ஒரு நடிகையாக, ஒரு சமூக பொறுப்புணர்வு உள்ள ஒரு மனிதராக, இந்த படத்தில் நடிக்க மாட்டேன் என சொல்ல மாட்டார்கள்.. 100% என்னுடைய உழைப்பை கொடுத்திருக்கிறேன் என நம்புகிறேன். நம் பக்கத்து வீட்டு மனிதரைப் போலவே இயல்பாக நடிப்பை வெளிப்படுத்தும் வெகு சில நடிகர்களில் விதார்த்தும் ஒருவர். நான் சினிமாவிற்கு வருவதற்கு முன்பிருந்தே ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் படங்கள் வெளியாகிறது என்றால் தவிர்க்காமல் பார்த்து விடுவேன். அந்த அளவிற்கு ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். எத்தனை டாக்டர்களுக்கு இப்படி ஒரு கதையை படமாக எடுக்க வேண்டும் என தோன்றி இருக்கும் என தெரியாது. இதை மக்களுக்கு சொல்ல வேண்டும் என எண்ணத்தில் படமாக தயாரித்த தயாரிப்பாளர் டாக்டர் திருநாவுக்கரசுக்கு நன்றி.

இயக்குநர் சுப்புராமன் மனதில் என்ன வலி இருக்கிறதோ, கஷ்டம் இருக்கிறதோ, அதை எத்தனை பேர் வெளியே சொல்வார்களோ தெரியாது. ஆனால் அவர் பட்ட கஷ்டத்தை வலியை நான் உணர்ந்தேன். (இந்த இடத்தில் கண்கலங்கினார்). ஒரு படம் எடுத்து ரிலீஸ் பண்ணுவது எவ்வளவு கஷ்டம் என்பது சத்தியமாக எனக்கு தெரியாது. காரணம் அடுத்தடுத்த படங்களில் நடித்து போய்க்கொண்டே இருப்போம். சம்பாதிப்போம்.. சம்பளத்தை உயர்த்துவோம்.. ஆனால் மொத்த உயிரையும் கொடுத்து கனவு ,ஆசை எல்லாவற்றையும் போட்டு ஒரு படத்தை மிக அற்புதமாக கொடுத்திருக்கிறார். அவர் இதற்காக என்னென்ன கஷ்டங்கள் பட்டிருக்கிறார், எவ்வளவு துயரங்களை அனுபவித்து இருக்கிறார் என ஒவ்வொரு முறையும் நான் கேள்விப்படும்போது ரொம்ப கஷ்டமாக இருந்தது. அவருடைய படத்தில் நானும் இருக்கிறேன் என்பது சந்தோஷமாக இருக்கிறது. எத்தனையோ முறை இதை மேடையில் நான் இன்று பேசி இருந்தாலும் இந்த தருணம் எனக்கு ரொம்பவே மனநிறைவாக இருக்கிறது. அஞ்சாமை குழுவினரை இப்படி பார்ப்பதற்கு நான் ரொம்பவே கொடுத்து வைத்திருக்கிறேன். இந்த நாள் எனக்கு ரொம்பவே சந்தோஷமான நாள்” என்று கூறினார்.

நாயகன் விதாத் பேசும்போது, “நடிப்புத்துறைக்கு வந்ததில் இந்த படத்தை பண்ணியதற்காக நான் பெருமைப்படுகிறேன். இந்த கதையை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தான் கேட்க ஆரம்பித்தேன். ஆனால் கொஞ்ச நேரத்திலேயே அழ ஆரம்பித்து விட்டேன். இந்த படத்தில் நான்கு விதமான காலகட்டங்களில் நான்கு விதமான கெட்டப்புகளில் நடிக்க வேண்டி இருந்தது. அதனால் திண்டுக்கல்லில் இதன் படப்படிப்பையும் இடைவெளி விட்டுவிட்டு நடத்தினோம். படத்தின் புரொடக்ஷனிலும் உதவியாக இறங்கினேன். இதில் மம்முட்டியை நடிக்க வைப்பதற்காக அவரை பேரில் சென்று பார்த்து கதை சொல்லி அவருக்கும் பிடித்து போனது. ஆனால் தேதிகள் ஒத்து வராததால் அவரால் நடிக்க முடியவில்லை. அவருக்குப் அதற்கு பதிலாக அடுத்ததாக ரகுமான் சார் வந்தார். ரொம்பவே பிரமாதமாக பண்ணி உள்ளார். நான் நடித்ததிலேயே கொஞ்சம் அதிக பொருட்செலவு ஆன படம் இது. அதன் பிறகு ட்ரீம் வாரியர்ஸ் இந்த படத்தை பார்த்த அன்றே இதை தங்கள் வசம் எடுத்துக் கொண்டார்கள்.

நடிகராக இருப்பதற்கு நான் ஏன் பெருமைப்படுகிறேன் என்றால் மன்னரிடம் மக்கள் தங்கள் குறையை முதன்முதலாக நடனம், நாடகத்தின் மூலமாக தான் சொல்ல ஆரம்பித்தார்கள். நான் நடிக்க துவங்கியதே கூத்துப்பட்டறையில் தான். மக்களின் பிரச்சனைகளை நாடகங்களாக போட ஆரம்பித்தோம். சிறுவயதில் அம்மாவுடன் சென்று சாமி படங்களை பார்க்கும் போது மக்கள் சிலர் சாமி வந்து ஆடுவதை பார்க்க முடிந்தது. ஆரம்பத்தில் இசைக்காக ஆடுகிறார்கள் என்று நினைத்தேன். ஆனால் நாடகத் துறைக்கு வந்ததும் தான் சினிமா மக்களை ஒருங்கிணைக்கிறது என்பது தெரிய வந்தது. இந்தப் படம் பார்க்கும்போது அனைவருமே தங்களை இதனுடன் தொடர்புபடுத்தி கொள்வார்கள். இது இந்தியாவில் உள்ள அத்தனை மனிதர்களுக்குமான படம். அப்படி ஒரு பிரச்சனையை என் படம் மூலமாக சொல்ல எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இதுவரை நடித்த படங்களில் இந்த படத்தில் நடித்ததற்காக நான் ரொம்பவே பெருமைப்படுகிறேன். இந்த படத்தில் எனக்கு ஒரு அற்புதமான பாடல் கிடைத்திருக்கிறது.

என்னுடன் நடித்திருக்கும் கிருத்திக்கை அடுத்த தலைமுறை நடிகராக பார்க்கிறேன். அவனுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. வாணி போஜன் சிறந்த நடிகை என்றாலும் இதுவரை பார்த்திராத அவரது நடிப்பை இதில் பார்க்கலாம். ரேவதிக்கு அடுத்ததாக அவரை சொல்லும் விதமாக தனது கதாபாத்திரத்தில் அப்படி ஒரு நடிப்பை கொடுத்துள்ளார். படத்தொகுப்பாளர் ராம் சுதர்சன் படத்தொகுப்பிலேயே சிம்பொனி செய்திருக்கிறார். பாலச்சந்திரன் ஐஏஎஸ் கோர்ட் காட்சிகளில் பிரமாதப்படுத்தியுள்ளார். இந்த படத்தில் நடித்ததை எனது கடமையாக நினைக்கிறேன். பணம் வாங்கிக்கொண்டு தான் நடித்தேன் என்றாலும் இந்த படத்தில் அனைத்து வேலைகளையும் இறங்கி பார்த்தேன். பல படங்களை இதற்காக நான் விட்டிருக்கிறேன். நான் நடிக்க வந்ததற்கான அர்த்தம் இந்த படம் நடித்தபோது கிடைத்தது. பயணிகள் கவனிக்கவும், இறுகப்பற்று படங்களை எந்த அளவிற்கு நீங்கள் பாராட்டுகிறீர்களோ அதே போன்ற ஒரு படத்தை இப்போது கொடுத்து இருக்கிறோம்” என்றார்.

தயாரிப்பாளர் டாக்டர் திருநாவுக்கரசு பேசும்போது, “நான் அடிப்படையில் ஒரு சைக்கியாட்ரிஸ்ட் டாக்டர். பொதுவாகவே சைக்கியாட்ரிஸ்ட்டுக்கு பேசத் தெரியாது. ஆனால் பேசினீர்கள் என்றால் கேட்கத் தெரியும். சமூகத்தில் இருக்கும் அவலங்களை தினசரி பார்த்து பார்த்து பழகியவர்கள் நாங்கள். அது போன்று சில விஷயங்கள் மனதை பாதிக்கும் போது இதற்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றிக் கொண்டே இருக்கும். என்னுடைய மகன்கள் இருவரும் பணம் மீதான ஆசை இல்லாதவர்கள். செலவே இல்லாமல் தங்களது படிப்பை முடித்தவர்கள். அந்த வகையில் அவர்களுக்கான பணம் என்னிடம் இருந்தது. அதை வைத்து நீங்கள் நினைத்ததை செய்யுங்கள் என்று உற்சாகப்படுத்தினார்கள். நான் வருடத்திற்கு ஒன்று இரண்டு புத்தகங்கள் எழுதுவேன். புத்தக கண்காட்சியில் எனக்கென தனி ஸ்டால் போடுவார்கள். உளவியல் சம்பந்தமான படங்களை எடுக்க விரும்பும் இயக்குநர்கள் பலர் என்னை வந்து சந்தித்து ஆலோசிப்பார்கள். அப்படி இரண்டு மூன்று முறை என்னை வந்து பார்த்தவர்தான் இயக்குநர் சுப்புராமன்.

அப்படி ஒரு நாள் காலையில் செய்தித்தாளில் நான் ஒரு செய்தியை பார்த்ததும் உடனடியாக சுப்புராமனை அழைத்து நாட்டில் இப்படி எல்லாம் நடக்கிறது. இதையெல்லாம் நீங்கள் படமாக எடுக்க மாட்டீர்களா என்று கேட்டேன். அவருக்கும் அதே அலைவரிசை இருந்தது. இந்த செய்தியை மட்டும் வைத்து கதை பண்ணுங்கள்.. உண்மையை மட்டும் சொல்லுங்கள்.. நான் படம் தயாரிக்கிறேன் என்று கூறினேன். நான் 50 வருட காலமாக மருத்துவக் கல்வியில் ஆசிரியராக இருந்திருக்கிறேன். இதில் மருத்துவ கல்வி எப்படி போய்க்கொண்டிருக்கிறது என மனம் நொந்த காலங்களும் உண்டு. பெருமை பட்ட காலங்களும் உண்டு. எனது மகன் கடந்த 2004லிலேயே அமெரிக்க தமிழ் சங்கத்தில் பேசும் போது நீட் குறித்து பேசியுள்ளார். அவர்கள் பேச்சை இயக்குனரிடம் ஒப்படைத்து இதன் அடிப்படையில் நீங்கள் வசனங்களை எழுதுங்கள் என்று கேட்டுக்கொண்டேன்.

புதியவர்கள் என்றாலும் எனர்ஜிடிக்கான டீம் இது. பெரும்பாலும் நான் படப்பிடிப்பு தளத்திற்கு சென்று பார்த்தது கிடையாது. ஆனால் அதற்குண்டான கஷ்டத்தையும் அனுபவித்தேன். பலனையும் அனுபவித்தேன். ஆனால் நல்ல படைப்பாக கையில் கொடுத்தார்கள். நாயகன் விதார்த் மூலமாக எஸ்.ஆர் பிரபுவிடம் சில நிமிடங்கள் மட்டுமே பேசினேன். இந்த படத்தை வெளியிட அவர் தான் சரியான நபர் என அவரிடம் ஒப்படைத்து விட்டு அமெரிக்கா கிளம்பி சென்று விட்டேன். நீட்டை எதிர்த்தோ, ஆதரித்தோ இந்த படத்தில் சொல்லவில்லை. நீட்டில் உள்ள உண்மைகளை இதில் சொல்லி இருக்கிறோம். நான் படித்த காலகட்டத்தில் எந்த மருத்துவக் கல்லூரியில் படித்தேன் என்று என் தந்தைக்கு கூட தெரியாது. ஆனால் இன்று எட்டாம் வகுப்பு படிக்கும் ஒரு பிள்ளை வீட்டில் இருந்தாலே பெற்றோர்கள் அவர்களது படிப்பு குறித்து மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். கஷ்டப்பட்டு படிக்க வைத்தேன் என்று சொல்கின்ற வார்த்தை எனக்கு பிடிக்கவே பிடிக்காது. முடியாத அல்லது பிடிக்காத ஒரு விஷயத்தை எதற்காக கஷ்டப்பட்டு பிடிக்க வேண்டும்.?

ஒரு சட்டம் இயற்றும்போது அது மக்களுக்கு நல்லது என்று தான் செய்கிறார்கள். ஆனால் அது மக்களுக்கு எவ்வளவு பிரச்சனையை கொடுக்கிறது என்பதை அந்த மட்டத்தில் இருப்பவர்களால் உணர முடிவதில்லை. ஆனால் என்னை போன்றவர்களால் அதை எளிதில் உணர முடிகிறது. அதை வெளியே சொல்ல வேண்டும் என்பதற்காகத்தான் இந்த படத்தை எடுத்தோம்.என்னிடம் வரும் மாணவர்கள் அனைவரிடமும் எப்போது ஒரு நோயாளியை முதலாளியாக நினைக்கிறீர்களோ அப்போதுதான் நீங்கள் ஒரு முழுமையான டாக்டர் ஆவீர்கள் என்று சொல்வேன். அந்த வகையில் இந்த படத்திற்கு நான் முதலாளி இல்லை.. மக்கள்தான்.. அவர்கள் கொண்டு வந்து கொடுக்கும் நூறு ரூபாயில் தான் நாம் சம்பாதிக்கிறோம். அதனால் அதை புரிந்துகொண்டு அவர்களுக்கு உண்மையாக படம் எடுங்கள்” என்று கூறினார்.

தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபு பேசும்போது, “அருவி, ஜோக்கர் போன்ற படங்களை வெளியிட்ட போது நல்ல படங்களாக தேர்வு செய்து வாங்குகிறீர்களே என பலரும் கூறினார்கள். நாம் படங்களை தயாரித்து வெளியிட்டு நமக்கான ஒரு ஆதரவு வட்டத்தை உருவாக்கி வைத்திருக்கிறோம். அதனால் வேறு நல்ல படங்கள் வரும்போது அந்த ஆதரவை நாம் அந்த படங்களுக்கு பகிர்ந்து கொடுக்கலாம் என நினைத்தோம். அதன் மூலமாக நமக்கு வருமானம் வருகிறது என்பது மட்டுமில்லாமல் ஒரு நல்ல படம் சரியான இடத்திற்கு சென்று சேர வேண்டும் என்கிற எண்ணம் தான் முக்கிய காரணம். படம் எப்படி தயாரிக்க வேண்டும் என என்னிடம் கேட்கும் பலரிடமும் மக்களுக்கு பிடிக்கும் விதமாக படம் எடுங்கள், அது எப்படியாவது அவர்களை சென்று அடைந்து விடும் என்பேன்.

நம் வாழ்க்கையில் ஒரு கட்டத்தில் குழந்தைகளுக்காகவே வாழ ஆரம்பிப்போம். அவர்களது பள்ளிப்படிப்பு முடிந்து கல்லூரி படிப்பு ஆரம்பிக்கும்போது பல பெற்றோர்கள் நினைப்பது என்னுடைய பையன் டாக்டராக வேண்டும் என்பதுதான். அப்படிப்பட்ட மருத்துவத்தில் இப்போது ஒரு புதிய முறை மாறும் போது. மக்கள் அந்த மாற்றத்தை எப்படி அணுகுகிறார்கள் என்பதை இந்த படத்தில் அழகாக சொல்லி இருக்கிறார்கள். படத்தின் இயக்குனர் சுப்புராமன் ரியாலிட்டி, ஃபேண்டஸி இரண்டையும் அழகாக கலந்து இந்த படத்தில் கொடுத்திருக்கிறார். இந்த படத்தில் விதார்த் நடித்துள்ள கதாபாத்திரத்தை எடுத்து நடிக்கவே பல பேர் யோசிப்பார்கள். ஆனால் விதார்த் தைரியமாக பண்ணியிருக்கிறார். சினிமா பற்றிய அனுபவம் இல்லாமல் ஒரு புதிய டீமை வைத்து ஒரு படத்தை தயாரித்து, அதை நல்லபடியாக வெளியிடுங்கள் என தயாரிப்பாளர் டாக்டர் திருநாவுக்கரசு என்னிடம் பொறுப்பை ஒப்படைத்ததை பெருமையாக நினைக்கிறேன்” என்று கூறினார்.

பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதில் அளித்து இயக்குநர் சுப்புராமன் பேசும்போது, “இந்த படம் நீட்டுக்கு ஆதரவா எதிர்ப்பா என்பதெல்லாம் விஷயம் இல்லை. மக்கள் படும் வலியை இந்த படத்தில் கூறி இருக்கிறோம். படம் பார்த்துவிட்டு ஆதரவா, இல்லையா என்பதை நீங்கள் முடிவு செய்யுங்கள். நீட் குறித்த படம் என்பதால் சென்சாரில் நாங்கள் இந்த படத்தை எடுத்ததற்கான புள்ளி விவரங்கள், தரவுகளை கேட்டார்கள். அதை பக்காவாக நாங்கள் கொடுத்தோம். அவையெல்லாம் சரியாக இருந்ததால் சென்சாரில் எங்களுக்கு எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை. இதுவரை அரசியல்வாதிகள், பெற்றோர்களின் பார்வையில் தான் நீட் பற்றி பேசப்பட்டு வரும் நிலையில் ஒரு பள்ளி மாணவனின் மூலமாக அந்த வலியை சொல்ல வைத்திருக்கிறோம்” என்றார்.

தயாரிப்பாளர் டாக்டர் திருநாவுக்கரசிடம், நீங்கள் சந்திக்கும் உங்களது நோயாளிகளிடமிருந்து ஏராளமான கதைகள் உங்களுக்கு கிடைக்க வாய்ப்பு இருக்கும்போது எதற்காக செய்தித்தாளில் வந்த சம்பவத்தை மையமாக வைத்து கதையை உருவாக்க சொன்னீர்கள் என்று கேட்கப்பட்ட போது, “இன்று செய்தித்தாள்களில் தான் அவ்வளவு அவலங்கள் இருக்கின்றன. நான் சிறு வயது பையனாக இருந்தபோது என்னுடைய அண்ணன் என்னை செய்தித்தாள்களில் வந்த விஷயங்களை படிக்க சொல்லி கேட்பார். ஆனால் இன்று என் பேத்தியை இந்த செய்திகளை படிக்க சொல்லி கேட்க முடியுமா ? படிக்க படிக்க அவலங்கள் தான் இருக்கின்றன. நல்ல படங்களை மக்களிடம் கொண்டு செல்வதற்கு கூவி கூவி தான் அழைக்க வேண்டி இருக்கிறது. மோசமான விஷயங்கள் இன்பத்தை தரும்.. நல்ல விஷயங்கள் மகிழ்ச்சியை தரும்.. மகிழ்ச்சியை தருவதற்கு நிறைய சிரமப்பட வேண்டும்” என்றார்.

Tags :
Advertisement