அந்தகன் படத்தை நான் ஏன் இயக்கினேன் - தியாகராஜன் ஓப்பன் டாக்!
ஸ்டார் மூவிஸ் சார்பில் சாந்தி தியாகராஜன் தயாரிப்பில், நடிகரும், இயக்குநருமான தியாகராஜன் இயக்கத்தில், 'டாப் ஸ்டார்' பிரசாந்த் நடிப்பில் ஆகஸ்ட் ஒன்பதாம் தேதி வெளியான 'அந்தகன்' திரைப்படம் - வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. இதற்காக ஊடகத்தினருக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் விழா ஒன்றினை படக்குழுவினர் ஒருங்கிணைத்திருந்தார்கள். இந்த நிகழ்வு சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இதில் இயக்குநர் தியாகராஜன், இயக்குநரும், நடிகருமான கே. எஸ். ரவிக்குமார், 'டாப் ஸ்டார்' பிரசாந்த், நடிகைகள் சிம்ரன், வனிதா விஜயகுமார், பிரியா ஆனந்த், செம்மலர் அன்னம், நடிகர் பெசன்ட் ரவி, கலை இயக்குநர் செந்தில் ராகவன், சண்டை பயிற்சி இயக்குநர் ராம்குமார், இயக்குநர் பிரவீண் காந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இயக்குநர் பிரவீண் காந்த் பேசுகையில், '''அந்தகன்' படத்தின் வெற்றிக்கு அப்படத்தின் 'கரிஸ்மா' தான் காரணம். தியாகராஜன் சார் தன்னுடைய மகனுக்காக இந்த படத்தை உருவாக்கியிருக்கிறார். தன் நடிப்பை நிறுத்திக் கொண்டு பிரசாந்தின் வளர்ச்சிக்காக அரும் பாடுபட்டு வருகிறார். அவருடைய நடிப்புத் திறனுக்கு இன்றைக்கு அவர் ஒரு பான் இந்தியா ஸ்டார். தன் மகனை மீண்டும் டாப் ஸ்டார் ஆக்குவதற்காக கடினமாக உழைத்து உருவாக்கிய படம் தான் 'அந்தகன்'. இன்றைய இளம் தலைமுறை ரசிகர்கள் எதை விரும்புவார்களோ அதை வழங்கி வெற்றியை ருசித்திருக்கிறார். இந்தப் படத்தில் நடித்த பிரசாந்த், இடைவெளியை உணர வைக்காமல் நன்றாக நடித்திருக்கிறார். 'ஜோடி', 'கண்ணெதிரே தோன்றினாள்', 'ஜீன்ஸ்' போன்ற படங்களில் திரையில் தோன்றிய பத்தாவது நிமிடத்திலே நம் மனதில் பதிந்த பிரசாந்தை இந்த படத்தில் காண முடிகிறது. இதற்கு அவருடைய கடின உழைப்புதான் காரணம். இன்றளவிலும் தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறார். தமிழ் சினிமாவில் எம்ஜிஆருக்கு பிறகு எந்த கெட்ட பழக்கமும் இல்லாத ஒரே நடிகர் பிரசாந்த் தான் என சொல்லலாம். தியாகராஜன்- பிரசாந்த் ஆகியோரைப் போல் திரையுலகில் அனைவரும் இருக்க வேண்டும் என விரும்புகிறேன். பிரசாந்த்திற்கு மீண்டும் ஒரு வெற்றியை கொடுத்த தியாகராஜனுக்கு வாழ்த்துகள்,'' என்றார்.
நடிகர் பெசன்ட் ரவி பேசுகையில், ''மகிழ்ச்சியாக இருக்கிறது. பிரசாந்துடன் நிறைய படங்களில் நடித்திருந்தாலும் அந்தகன் எனக்கு ஸ்பெஷல். படத்தினை விளம்பரப்படுத்துவதற்காக அவருடன் தமிழக முழுவதும் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டேன். தியாகராஜன் மீது எனக்கு அளவு கடந்த நம்பிக்கை இருக்கிறது. இருந்தாலும் படத்தைப் பற்றிய சிறிய சந்தேகம் எனக்குள் இருந்து கொண்டே இருந்தது. இந்த படத்திற்காக பிரசாந்த் உடன் சுற்றுப் பயணத்தில் இருக்கும் வரை இந்த படத்தை நான் பார்க்கவில்லை. பிரசாந்த் - தியாகராஜன் ஆகியோர் மீது இருந்த நம்பிக்கையின் காரணமாக அவர்களுடன் பயணித்தேன். அதன் பிறகு ஒரு நாள் தியாகராஜன் என்னை அழைத்து படத்தை காண்பித்தார். அதிர்ச்சியில் உறைந்தே போனேன். படம் மிக அழகாக இருந்தது. நேர்த்தியாக இருந்தது. படம் வெற்றி பெறும் என்பதை அப்போது உறுதி செய்தேன். இருந்தாலும் இந்த படத்தின் வெற்றி மீது எனக்கு சின்ன சந்தேகம் இருந்து கொண்டே இருந்தது. இருந்தாலும் படம் வெளியான முதல் நாள் முதல் காட்சி ரசிகர்களுடன் நான், பிரசாந்த், சிம்ரன் ஆகியோர் படத்தை பார்த்துக் கொண்டிருந்தோம். பொதுவாக ஒரு படம் பிடிக்கவில்லை என்றால் தூக்கம் வந்துவிடும். ஆனால் இந்த படம் கண்ணை மூடி கண்ணை திறப்பதற்குள் முடிவடைந்து விட்டது. அதனால் இந்தப் படம் சிறப்பாக இருக்கிறது என்று மனித உளவியலே சொல்லிவிட்டது. ஏனெனில் ஏற்கனவே பார்த்த திரைப்படத்தை மீண்டும் திரையில் பார்க்கும்போது ஏதேனும் ஒரு வகையில் இடையூறு ஏற்படும். ஆனால் அந்தகன் படத்தை திரையரங்கத்தில் பார்க்கும்போது யாருக்கும் எந்த இடையூறையும் ஏற்படுத்தவில்லை. அனைவரும் படத்தை ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தனர். அந்த வகையில் இது போன்ற வெற்றி படத்தை வழங்கிய தியாகராஜனுக்கு நன்றி நன்றி,'' என்றார்.
நடிகை வனிதா விஜயகுமார் பேசுகையில், ''அந்தகன் படம் வெற்றி பெறுவதற்கு மனதார வாழ்த்திய ஊடகங்களுக்கும், திரையரங்கத்திற்கு வருகை தந்து வெற்றி பெற செய்த ரசிகர்களுக்கும் முதலில் நன்றியை தெரிவிக்க விரும்புகிறேன். '90ஸ் கிட்ஸ்' என்ற வார்த்தையை கேட்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இதற்காக பிரசாந்த்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். '90ஸ் ஸ்டார்ஸ் கம் பேக்'. இதற்காக சிம்ரனுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படத்திற்காக இணையதளத்தில் வெளியிடப்பட்ட பொதுமக்களின் கருத்தில் ஒரு முக்கியமான விஷயம் இடம் பிடித்திருந்ததை கவனித்தேன். படம் பார்க்கும்போது தியேட்டரில் யாரும் செல்போனை பார்க்கவில்லை என குறிப்பிட்டிருந்தனர். நானும் இந்த திரைப்படத்தை மூன்று முறை ரசிகர்களின் வரவேற்பினை காண்பதற்காக திரையரங்கத்திற்கு சென்றேன். அந்த தருணத்திலும் யாரும் செல்போனை பார்க்கவில்லை. அனைவரும் படத்தினை சீரியசாக பார்த்தனர். 90களில் ஒரு திரைப்படத்தை திரையரங்கத்திற்கு சென்று பார்க்கும் போது எம் மாதிரியான வரவேற்பு கிடைத்ததோ..! அது போன்றதொரு வரவேற்பு அந்தகன் படத்திற்கு கிடைத்தது. இதற்காக அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார்.
நடிகை ப்ரியா ஆனந்த் பேசுகையில், ''இந்தப் படம் எனக்கு மிகவும் ஸ்பெஷல். இந்தப் படத்தின் பணிகள் தொடங்கும் போது மிகவும் பாசிட்டிவாக இருந்தது. படம் வெளியான பிறகும் ரசிகர்களிடமிருந்தும் விமர்சகர்களிடமிருந்தும் பாசிட்டிவான விஷயங்கள் வந்து கொண்டே இருக்கிறது. அனைத்தும் ஒருமித்த விஷயமாக இருப்பதால் எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. 90ஸ் ஸ்டார் பிரசாந்த்- சிம்ரன் என்று சொல்லலாம். இப்போதும் அவர்கள் அப்படியே தான் இருக்கிறார்கள். இவர்கள் தொடர்ந்து படங்களில் நடிக்க வேண்டும் என விரும்புகிறேன். படப் பிடிப்பு தளத்தில் இயல்பாகவும், அமைதியாகவும் இருப்பவர் இயக்குநர் தியாகராஜன். அவர் தொடர்ந்து படங்களை இயக்க வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன். அதிலும் குறிப்பாக இன்றைய இளம் தலைமுறைக்கு ஏற்ற வகையில் காதல் கதைகளை அவர் இயக்க வேண்டும். அந்தகன் போன்ற மிகப்பெரிய வெற்றி படத்தில் ஒரு பகுதியாக இருந்ததற்கு பெருமிதம் அடைகிறேன். இந்தப் படத்தை வெற்றி பெற செய்த பிரசாந்தின் ரசிகர்களுக்கும், மக்களுக்கும் நன்றி," என்றார்.
நடிகை சிம்ரன் பேசுகையில், ''திரையுலகப் பயணத்தில 29 வருடங்களை நிறைவு செய்து விட்டேன். இந்த முப்பதாவது ஆண்டில் 'அந்தகன்' சூப்பர் ஹிட் படமாக அமைந்திருக்கிறது. இதற்காக நான் இயக்குநர் தியாகராஜனுக்கு தான் நன்றி சொல்வேன். அவர்தான் இந்த படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை அளித்தார். படப்பிடிப்பு தளத்தில் தியாகராஜன் அமைதியாக இருப்பார். படப்பிடிப்பு தளமும் அமைதியாக இருக்கும். பணிகள் மட்டும் சுறுசுறுப்பாக நடைபெறும். பிரசாந்த் - என்னுடைய ராசியான ஜோடி. இதற்காக அவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ப்ரியா ஆனந்த் - படத்தில் அழகாகவும், ரியலிஸ்டிக்காகவும் நடித்திருந்தார். பான் இந்திய நட்சத்திரமாக அவர் உயர வேண்டும் என வாழ்த்துகிறேன். கே. எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் நான் நடித்திருக்கிறேன். உண்மையில் அவர்தான் எனக்கு குரு. நான் இன்று தமிழில் இந்த அளவிற்கு பேசுகிறேன் என்றால் அதற்கு அவரும் ஒரு காரணம். அவருடைய படப்பிடிப்பு தளத்தில் ஒழுக்கமும், நேர்மையும் நிறைவாக இருக்கும். அவர் மிகவும் அன்பானவர், உதவும் குணம் உள்ளவர். இந்தப் படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பு எனக்கு மிகப்பெரிய பரிசை போன்றது. இந்த படத்தில் நடித்த அனைவருக்கும் நன்றி," என்றார்.
இயக்குநர் கே. எஸ். ரவிக்குமார் பேசுகையில், ''அந்தகன் படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் இந்த விழாவிற்கு வருகை தந்திருக்கும் ஏராளமான ஊடகங்களை வரவேற்கிறேன். ஊடகங்களின் வளர்ச்சி அதிகரித்திருப்பதை காண்கிறேன். இது ஆரோக்கியமானது. தற்போது திரைப்படங்களை உருவாக்குவது எளிது. அதை வெளியிடுவது கடினம். அதன் பிறகு அந்த திரைப்படம் வெற்றி பெறுவது அதைவிட கடினம். நல்ல படத்திற்கு கூட மக்கள் திரையரங்கத்திற்கு வருகை தருவதில்லை. பைரசியிலோ, ஓ டி டி யிலோ வந்து விடும். அதில் பார்க்கலாம் என்கிறார்கள். நட்சத்திர நடிகர்கள் நடித்திருக்கிறார்கள் என்றால் மட்டுமே அவர்களுடைய ரசிகர்கள் திரையரங்கத்திற்கு சென்று பார்க்கிறார்கள். இதையெல்லாம் மீறி அந்தகன் படம் வெற்றி பெற்று இருக்கிறது என்றால் அதுதான் நிஜமான வெற்றி. படத்தைப் பற்றி வெளியான விமர்சனங்கள் அனைத்தும் சிறப்பானதாக இருந்தன .இந்தப்படம் திரையிட்ட திரையரங்குகளில் இரவு காட்சிகளில் கூட ரசிகர்கள் அதிகமாக இருக்கிறார்கள் என்பதை கேள்விப்பட்டு மகிழ்ச்சி அடைந்தேன். அதனால் இந்த படக் குழுவினர் வெற்றி விழா கொண்டாடுவதில் ஒரு நியாயம் இருக்கிறது. ஏனெனில் அந்தகன் படம் ஒரு உண்மையான வெற்றியை பெற்றிருக்கிறது. படப்பிடிப்பு தளத்தில் இயக்குநர் தியாகராஜனின் சிரிப்பில் பல அர்த்தங்கள் இருக்கும். ஆனால் அவருடைய கவனம் எல்லாம் இயக்கத்தில் தான் இருக்கும். நடிகர்கள் சிறப்பாக நடித்தால் உடனடியாக பாராட்டை தெரிவித்து விடுவார். படத்தில் பிரசாந்தின் நடிப்பு மிகச் சிறப்பாக இருந்தது. கண் பார்வை தெரியும். ஆனால் கண் பார்வை தெரியாதது போல் நடிக்க வேண்டும். பிறகு கண்பார்வை நிஜமாகவே தெரியாது. அது போல் நடிக்க வேண்டும். இந்த வேடத்தில் சரியான அளவுகோலில் நடிக்க வேண்டும். கொஞ்சம் மீறினாலும் மிகை நடிப்பு வெளிப்பட்டு விடும். இந்த வேடத்தில் சிறப்பாக நடித்த பிரசாந்துக்கு என்னுடைய வாழ்த்துக்கள். மேலும் பல திரைப்படங்களில் நடித்து வெற்றி பெற வேண்டும். திரையுலகில் மீண்டும் வலம் வர வேண்டும் என இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
சிம்ரனை 'தர்மசக்கரம்' எனும் படத்தில் நடிக்க வைப்பதற்காக மும்பை சென்று அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினேன். ஆனால் அர்ஜுன் நடித்த 'கொண்டாட்டம்' படத்தில் தான் அவருடன் இணைந்து பணியாற்றினேன். ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் படமாக்கப்பட்ட முதல் தமிழ் படம் 'கொண்டாட்டம்' தான். அந்தத் தருணத்தில் சிம்ரனுக்கு தமிழ் சுத்தமாக தெரியாது. நான் உடல் மொழியுடன் பிராம்ப்ட்டிங் செய்வதை பார்த்துக் கொண்டு நடித்து அசத்தினார். அவர் திரையுலகத்திற்கு வருகை தந்து 29 ஆண்டுகள் நிறைவடைந்து இருக்கிறதாம். இன்னும் 30 ஆண்டுகள் திரை உலகில் நடிக்க வேண்டும் என்று தன் ஆசையை தெரிவித்துள்ளார். ஒரு எல்லைக்கு பிறகு ஒரு கலைஞருக்கு நடிப்பு நன்றாக வரும் என்றால் சினிமா அவர்களை விடாது. நீங்கள் சினிமாவை விட்டு விலக நினைத்தாலும் சினிமா உங்களை விடாது. நாகேஷ் இறுதி காலகட்டம் வரை நடித்துக் கொண்டே இருந்தார். அவர் நடித்த கடைசி படம் 'தசாவதாரம்'. அப்போது கூட அவருக்கு கண் பார்வையில் சிறிய தடுமாற்றம் இருந்ததால் தான் நடிப்பதை குறைத்துக் கொண்டார். நானும் அந்த வகையான நடிகன் தான் என நினைக்கிறேன். இயக்குநர் தியாகராஜனுக்கு நன்றிகள் எவ்வளவு சொன்னாலும் போதாது. இந்தப் படம் சற்று தாமதம் ஆனாலும் சரியான நேரத்தில் வெளியாகி வெற்றியை பெற்றிருக்கிறது. இதற்காக படத்தில் நடித்த அனைத்து நட்சத்திர நடிகர்களுக்கும், நடிகைகளுக்கும், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,'' என்றார்.
இயக்குநர் தியாகராஜன் பேசுகையில், ''அந்தகன் படத்தை மக்களிடம் நல்ல முறையில் சென்றடைய செய்த அனைத்து ஊடகத்தினருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படம் வெளியான பிறகு ஊடகத்திடமிருந்து வெளியான விமர்சனங்கள் மக்களை சென்றடைந்து படத்தை வெற்றி பெற வைத்திருக்கிறது. இந்தப் படத்தில் நடித்த நடிகர்களுக்கும் நடிகைகளுக்கும் மிகப்பெரிய அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. இந்தப் படத்தில் சிறிய வேடத்திற்கு கூட திறமையான கலைஞர்களை தேர்வு செய்து நடிக்க வைத்தோம். திரையரங்குகளில் மறைந்த நடிகர் மனோபாலாவின் வசனங்களுக்கும், வனிதா விஜயகுமார் பேசும் வசனங்களுக்கும் கைத்தட்டல் கிடைக்கிறது என்றால் அதற்கு அவர்களுடைய கடுமையான உழைப்பும் ஒரு காரணம். பிரியா ஆனந்த் நடிப்பு ரியலிஸ்டிக்காக இருந்தது. அவருடைய அழகு - சிரிப்பு- டயலாக் டெலிவரி- என எல்லாம் சிறப்பாக இருந்தது.
இந்தத் திரைப்படத்தில் பிரசாந்த் நாயகனாக இருந்தாலும் அனைத்து கேரக்டருக்கும் சமமான வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன்.. முதலில் இந்த திரைப்படத்தை ஜெயம் ராஜா இயக்குவதாக இருந்தது. அவருடன் மூன்று மாதம் இணைந்து பயணித்தோம். இந்த மூன்று மாத காலத்திற்குள் அவர் லண்டனில் உள்ள வெளிநாட்டு நடிகை ஒருவர் இந்த கதாபாத்திரத்தில் நடித்தால் சிறப்பாக இருக்கும் என்று சொன்னார். அவருடனும் பேச்சு வார்த்தை நடத்தினோம். அவர் கேட்ட சம்பளத்தையும் கொடுப்பதற்கு ஒப்புக்கொண்டோம். மூன்று மாதத்திற்கு பிறகு ஜெயம் ராஜாவிற்கு சிரஞ்சீவி நடிக்கும் படம் ஒன்றை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது அந்தப் படத்தை இயக்கி நிறைவு செய்த பிறகு இந்த படத்தில் பணியாற்றுகிறேன் என ஜெயம் ராஜா சொன்னார். நான் நன்றி என்று சொல்லிவிட்டு, உங்களுடைய பயணத்தை வெற்றிகரமாக தொடருங்கள் என்றேன். அதன் பிறகு நான் இயக்க தீர்மானித்தேன். அந்த கதாபாத்திரத்திற்கு யாரை நடிக்க வைப்பது என்பது குறித்து யோசிக்க தொடங்கினோம். அப்போது சிம்ரனை தவிர வேறு யாரும் என் எண்ணத்தில் வரவில்லை. அவரும் நடிக்க ஒப்புக்கொண்டு பெரிய அளவில் பேராதரவை வழங்கினார். அவர் மேடையில் தமிழில் பேசியதை மிகவும் ரசித்தேன். இயக்குநர் கே எஸ் ரவிக்குமார்- அவர் ஏற்கனவே பிரசாந்த் நடித்த 'தமிழ்' என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அவரிடம் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று சொன்னவுடன் உடனடியாக ஒப்புக்கொண்டார். படப்பிடிப்பு தளத்தில் அவருடைய ஈடுபாடு, ஒத்துழைப்பு பாராட்டும்படி இருந்தது.
சமுத்திரக்கனி- தெலுங்கில் பரபரப்பாக நடித்துக் கொண்டு இருக்கும் முன்னணி நடிகர். நான் கேட்டுக் கொண்டதன் பேரில் இந்த படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்தார் அவரை ஒரு காட்சியில் அரைகுறை உடையுடன் பாத்ரூமில் உட்கார சொன்னேன். எந்த தயக்கமும் இல்லாமல் அந்த காட்சியில் சிறப்பாக நடித்துக் கொடுத்தார். பிரசாந்த்- இந்தப் படத்தில் மட்டுமல்ல எந்த படத்திலும் இயக்குநர் என்ன சொல்கிறாரோ அதைத்தான் கேட்பார். அவர் சொன்னதைத்தான் செய்வார். இவராக எந்த கருத்தையும் பகிர்ந்து கொள்ள மாட்டார். அதேபோல் இந்தப் படத்தில் நான் என்ன சொன்னேனோ அதை மட்டுமே அவர் செய்தார். அவர் பியானோ வாசிப்பதாகட்டும், கண் தெரியாமல் நடிப்பதாகட்டும் என எல்லா காட்சியிலும். நேச்சுரலாக நடித்தார். இந்த திரைப்படத்தில் சண்டைக் காட்சி இல்லை, பாடல் காட்சி இல்லை, ஆனால் அந்த குறையை தன்னுடைய நேர்த்தியான நடிப்பால் மறக்கடிக்க செய்திருந்தார். அவருடைய நடிப்பாற்றலால் இந்த படத்தை வெற்றி பெற செய்திருக்கிறார். படத்தில் நடித்த அனைத்து நட்சத்திர நடிகர்களுக்கும், நடிகைகளுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இந்த திரைப்படத்தை வெளியிட்ட விநியோகஸ்தர்களுக்கும், திரையிட்ட திரையரங்க அதிபர்களுக்கும், வெற்றி பெற செய்த ரசிகர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,'' என்றார்.
'டாப் ஸ்டார்' பிரசாந்த் பேசுகையில், ''அந்தகன் படத்தை மிகப்பெரிய அளவில் வெற்றி பெறச் செய்த ஊடகத்தினருக்கும், ரசிகர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன். படம் வெளியான தருணத்திலிருந்து இப்படத்தைப் பற்றிய விமர்சனம் மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்தப் படத்தின் வெற்றிக்கு படத்தில் நடித்த கார்த்திக் போன்ற அனுபவமிக்க நட்சத்திரங்களும் மிக முக்கியமான காரணம். படப்பிடிப்பு தளத்தில் அவருடைய உற்சாகம் ஒட்டுமொத்த குழுவினருக்கும் உத்வேகத்தை அளித்தது.
சமுத்திரக்கனி, கே. எஸ். ரவிக்குமார், ஊர்வசி, யோகி பாபு போன்ற நட்சத்திர நடிகர்களுடன் இணைந்து நடித்த அனுபவமும் மறக்க முடியாதது. நான் ஏராளமான வெற்றி படங்களில் நடித்திருந்தாலும் இந்தப் படத்தில் நடிக்கும் போது எனக்கு கிடைத்த அனுபவம் வித்தியாசமானதாக இருந்தது. குறிப்பாக நான் இன்றும் மதிக்கும் இயக்குநரான கே. எஸ். ரவிக்குமார் , ஊர்வசி, யோகி பாபு இவர்களுடன் படப்பிடிப்பு தளத்தில் பணியாற்றிய போது ஒவ்வொரு நாளும் படமாக்கப்படும் காட்சியை முழுதாக புரிந்து கொண்டு அந்த காட்சியை எப்படி மேம்படுத்தலாம் என திட்டமிட்டு, அதற்கு ஒத்திகை பார்த்து நடித்தோம். 60களில் நடிகர்கள் எப்படி நடித்தார்கள், 70களில் நடிகர்கள் எப்படி நடித்தார்கள், 80களில் நடிகர்கள் எப்படி நடித்தார்கள் என்பதனை உடன் பணியாற்றிய கலைஞர்களுடன் பேசி விசயங்களை கேட்டு நடித்தோம். குறிப்பாக நாகேஷ், பானுமதி அம்மா, நம்பியார் போன்றவர்களின் நடிப்பு எப்படி இருந்தது என்பதனை அவர்களுடன் அருகில் இருந்து பணியாற்றிய உதவியாளர்களிடமிருந்து கேட்டு தெரிந்து கொண்டேன். இதுபோன்ற அனுபவம் எனக்கு மீண்டும் 'அந்தகன்' படத்தில் கிடைத்தது. இதனால் நான் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்.
தற்போது நம்மிடம் இல்லாத, இந்த படத்தில் நடித்த நடிகர் மனோபாலா உடன் நடித்த அனுபவமும் மறக்க முடியாது. அவர் என்னுடைய தந்தையார் இயக்கிய அனைத்து படத்திலும் நடித்திருந்தார். என்னுடனும் பல படங்களில் நடித்திருந்தார். இந்த படத்தின் வெற்றிக்கு அவருடைய ஆசியும் ஒரு காரணம். நானும், சிம்ரனும் நடித்த படங்கள் அனைத்தும் வெற்றி பெற்றிருக்கின்றன. அந்த வரிசையில் அந்தகனும் இடம் பிடித்திருக்கிறது. இதற்காக சிம்ரனுக்கு பிரத்யேகமாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். படப்பிடிப்பு தளத்திலும், படப்பிடிப்பை நிறைவு செய்த பிறகும் என் வளர்ச்சியின் மீது அக்கறை காட்டி வரும் நடிகை பிரியா ஆனந்திற்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
ரசிகர்களுக்கு பிடித்த அனைத்து நட்சத்திரங்களும் இணைந்து நடித்தது தான் இப்படத்தின் வெற்றிக்கு காரணம் என்றும் சொல்லலாம். அடுத்ததாக இயக்குநர். என் தந்தையாக இருந்தாலும் அவர் படப்பிடிப்பு தளத்தில் கதைக்கு என்ன தேவையோ அதற்கு முக்கியத்துவம் கொடுத்தார். அவருக்கு பக்கபலமாக திறமை வாய்ந்த தொழில்நுட்ப கலைஞர்களும் பணியாற்றினர்.
படத்தை நிறைவு செய்த பிறகு விளம்பரப்படுத்துவதற்காக ப்ரோமோ பாடல் ஒன்றையும் தயார் செய்தோம். இதற்காக ஒத்துழைப்பு அளித்த 'ராக் ஸ்டார்' அனிருத், 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி, பிரபுதேவா, சாண்டி மாஸ்டர் என அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.இந்தப் படத்தின் வெற்றி என் திரையுலக பயணத்தில் ஒரு தொடக்கம் தான். தொடர்ந்து பல படங்களில் நடிக்க வேண்டும். ரசிகர்களின் அன்பை தொடர்ந்து சம்பாதிக்க வேண்டும். என் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், சக நட்சத்திர நடிகர்கள், நடிகைகள் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மகிழ்ச்சியான தருணத்தில் தேசிய விருதினை வென்றிருக்கும் இயக்குநர் மணிரத்னம், இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் மற்றும் தேசிய விருதை வென்ற அனைத்து கலைஞர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்,'' என்றார்.