அசிங்கப்பட்டான் ஆனந்த விகடன்!
பாலிவுட்டில் புதிதாக எடுக்கப்படும் 'ராமாயணம்' படத்தில் நடிக்கும் சாய் பல்லவி படம் முடியும் வரை அசைவ உணவு உண்ண மாட்டார் என்ற புரட்டான செய்தியை விகடன் ஊடகம் வெளியிட்டிருக்கிறது. சாய் பல்லவிக்கு ஒரு ஹோம்லியான மிடில் கிளாஸ் இமேஜ் இருப்பதால் இப்படியான 'புனிதப்படுத்தும்' புனைவுகளை அவர் கண்டும் காணாமல் போய்விடுவார் என்று சிலர் நினைத்திருக்கலாம் .சொல்லப்போனால் பலர் விரும்பி இந்த 'இமேஜை' ஏற்றிருப்பார்கள் .
நாம் இங்கு ஃபேஸ்புக்கில் எதுவும் எழுதலாம் , மீறிப்போனால் சில வசைகள் வரும் அல்லது நட்பு நீக்கம் நடக்கும் .ஆனால் செலிபிரட்டிகள் அப்படி சட்டென்று எதையும் சொல்லிவிட மாட்டார்கள். ஒரு கருத்தை, அது உண்மையாக இருந்தாலும், சில சமயம் பொதுவில் சொல்வது அவர்களுக்கு பெரும் இழப்பில் முடியலாம் . அது சர்ச்சையானால் நிகழ்க்கூடிய வருமான இழப்பு , வாய்ப்பு இழப்பு , புகழ் இழப்பு என்று ரொம்ப ரிஸ்க்கான சமாச்சாரம் .
அதனாலேயே பலர் முக்கியமான மறுப்பு அல்லது விளக்கம் தெரிவிக்க வேண்டிய சமயத்தில் கூட பலாப்பழத்தை விழுங்கியது போல அமைதி காப்பார்கள் . மீறிப் பேசினால் வழவழ கொழகொழா வென்று குன்ஸாக எதையாவது சொல்லி வைப்பார்கள் . இல்லையென்றால் யாராவது PR ஆட்கள் எழுதிக்கொடுக்க கையெழுத்து மட்டும் போடுவார்கள்.
உணவு பழக்கத்தைக் கொண்டு ஒருவரை எடை போடும், புறக்கணிக்கும், அசிங்கமான மனநிலையை நாம் இங்கு மீண்டும் மீண்டும் பார்க்கிறோம் , அது மிக வெற்றிகரமான அரசியலாகவும் ஆக்கப்பட்டு விட்டது. இத்தகைய சூழலில் சாய் பல்லவி விகடன் செய்தியை மறுத்து அளித்த விளக்கம் வெகுவாக பாராட்டத்தக்கது. இதற்கும் பிற சினிமா கிசுகிசு வகையான செய்திகளுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை அவர் புரிந்து கொண்டிருக்கிறார் .
இது குறித்து சாய் பல்லவி “நான் எப்போதும் வதந்திகளுக்கும் தவறான அறிக்கைகளையும் கண்டு கொள்வதில்லை. அது கடவுளுக்கு தெரியும். ஆனால் வதந்திகள் குறித்து பேச வேண்டிய நேரம் வந்துவிட்டது. குறிப்பாக எனது படம் வெளியாகும் போதும், அறிவிப்பு வெளியாகும் போதும் இது போன்ற வந்ததிகள் பரப்பப்படுகிறது. அடுத்த முறை ஒரு நம்பிக்கைக்குரிய ஊடகம் அல்லது சமூக ஊடக பக்கங்கள், இது போன்ற தவறான செய்தி, வதந்தியை பரப்பினால் எனது சார்பில் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்” என கூறியுள்ளார். சாய் பல்லவியின் பதிவு சமூக வலைதள பக்கத்தில் பேசு பொருளாகியுள்ளது
சாய் பல்லவி தன்னை ஆக்டிவிஸ்ட் என்று முன்வைப்பவர் எல்ல . ஆனாலும் ஏற்கனவே பலவேறு விஷயங்களில் தைரியமாக கருத்து சொன்னதற்கு இவரை வடக்கில் கூட்டமாக சேர்ந்து கடித்து வைத்திருக்கிறார்கள் .இது பாலிவுட் படம் என்பதால் எதிர்ப்பு இன்னுமே கடுமையாக இருக்கும் . அழுத்தமும் இருக்கும்.
அவர் அளித்த மறுப்பு நியாயமானது, அவசியமானது . This is a positive behaviour , other actors should take a leaf out of this book .