இந்தியாவின் டாப் 100 கலைக் கல்லூரிகளில் 37 கல்லூரிகள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவை!
என்.ஐ.ஆர்.எப். தரவரிசை பட்டியலில், தொடர்ந்து 6-வது முறையாக சென்னை ஐ.ஐ.டி. முதலிடம் பிடித்து சாதனை படைத்து உள்ளது.
மத்திய கல்வித்துறை அமைச்சகத்தின் கீழ் தேசிய கல்வி நிறுவன தரவரிசை கட்டமைப்பு (என்.ஐ.ஆர்.எப்.) இயங்கி வருகிறது. இந்த கட்டமைப்பானது, நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களின் கற்றல், கற்பித்தல், ஆராய்ச்சி ஆகியவற்றின் அடிப்படையில், தரவரிசை பட்டியலை தயாரித்து ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், 2024-ம் ஆண்டுக்கான தரவரிசை பட்டியலை, மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் டெல்லியில் நேற்று வெளியிட்டார்.
ஒட்டு மொத்தம், பல்கலைக் கழகங்கள், கல்லூரி, ஆராய்ச்சி நிறுவனங்கள், என்ஜினீயரிங், மேலாண்மை கல்வி, துணை மருத்துவப்படிப்பு, மருத்துவம், பல் மருத்துவம், சட்டம், கட்டிடக்கலை மற்றும் திட்டமிடல், வேளாண்மை, புதிய கண்டுபிடிப்பு, திறந்த நிலை கல்வி, திறன் மேம்பாடு பல்கலைக்கழகம், மாநில பொது பல்கலைக்கழகங்கள் என 15 பிரிவுகளாக தரவரிசை வெளியிடப்பட்டு உள்ளது.
இதில், நாடுமுழுவதும் ஒட்டுமொத்த கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசையில் சென்னை ஐ.ஐ.டி. முதலிடம் பிடித்துள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 6-வது முறையாக சென்னை ஐ.ஐ.டி. முதலிடம் பிடித்துள்ளது. 2-வதாக, பெங்களூரு ஐ.ஐ.டி.யும், மும்பை ஐ.ஐ.டியும் இடம் பிடித்துள்ளன. இந்த தரவரிசையில், தமிழக அரசின் அண்ணா பல்கலைக்கழகம் 20-வது இடம் பிடித்துள்ளது. கடந்த ஆண்டு, அண்ணா பல்கலைக்கழகம் 18-வது இடம் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
திருச்சி என்.ஐ.டி. 31-வது இடத்தையும், பாரதியார் பல்கலைக்கழகம் 44-வது இடத்தையும், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் 55-வது இடத்தையும், சென்னை பல்கலைக்கழகம் 64-வது இடத்தையும், அழகப்பா பல்கலைக்கழகம் 76-வது இடத்தையும், சேலம் பெரியார் பல்கலைக்கழகம் 100-வது இடத்தையும் பிடித்துள்ளன.
பல்கலைக்கழகங்கள் அளவி லான தரவரிசையில் பெங்களூரு ஐ.ஐ.எஸ். பல்கலைக்கழகம் முதலிடம் பிடித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகம் 13-வது இடம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் 36-வது இடம், சென்னை பல்கலைக்கழகம் 39-வது இடம், அழகப்பா பல்கலைக்கழகம் 47-வது இடம், பெரியார் பல்கலைக்கழகம் 56-வது இடம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் 63-வது இடம், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் 84-வது இடம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் 93-வது இடம், திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம் 99-வது இடம் பிடித்துள்ளது.
கல்லூரி அளவிலான தரவரிசையில் 2023-ம் ஆண்டு தேசிய அளவில் 3-வது இடம் பிடித்த சென்னை மாநில கல்லூரி, தற்போது பின்னடைவை சந்தித்துள்ளது. நடப்பாண்டு, சென்னை மாநில கல்லூரி 13-வது இடம் பிடித்துள்ளது. கோவை அரசு கலைக்கல்லூரி 63-வது இடத்தையும், சென்னை ராணிமேரி கல்லூரி 71-வது இடத்தையும், அழகப்பா அரசு கலைக்கல்லூரி 76-வது இடத்தையும், கும்பகோணம் அரசு கலைக்கல்லூரி 96-வது இடத்தையும் பிடித்துள்ளன.
என்ஜினீயரிங் கல்லூரி அளவிலான தரிவரசையில் வழக்கம்போல சென்னை ஐ ஐ டி முதலிடம் பிடித்துள்ளது. திருச்சி என்.ஐ.டி 9-வது இடத்தையும், அண்ணாபல்கலைக்கழகம் 14-வது இடத்தையும் பிடித்துள்ளன.
மருத்துவ கல்லூரி தரவரிசையில் தேசிய அளவில் டெல்லி எய்ம்ஸ் முதலிடம் பிடித்துள்ளது. இந்த பட்டியலில் கடந்த ஆண்டு 11-வது இடத்தை பிடித்த சென்னை மருத்துவக்கல்லூரி, ஒரு இடம் முன்னேறி நடப்பாண்டு 10-வது இடத்தை பிடித்துள்ளது. வேளாண்மை கல்விக்கான தரவரிசையில் தேசிய அளவில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் 6-வது இடம் பிடித்துள்ளது.
இந்த பட்டியலில் 17-வது இடத்தை தமிழ்நாடு கால்நடை மற்றும் மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் பிடித்துள்ளது. மேலும், அண்ணாமலை பல்கலைக்கழகம் 27-வது இடத்தையும், நாகை டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகம் 32-வது இடத்தையும் பிடித்துள்ளது.
மாநிலங்களில் உள்ள பொதுப்பல்கலைக் கழகங்களின் பட்டியலில் அண்ணா பல்கலைக் கழகம் முதல் இடத்தையும், பாரதியார் பல்கலைக் கழகம் 8-வது இடத்தையும் பிடித்துள்ளது.