தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

அமெரிக்கா என்னும் டாலர் தேசத் தந்தை ‘ ஜார்ஜ் வாஷிங்டன்’!

06:48 AM Dec 14, 2024 IST | admin
Advertisement

வீன அமெரிக்காவின் சிற்பிகளில் ஒருவராகப் போற்றப்படுபவர். அரசியலமைப்புச் சட்டத்தை மாநில அரசுகள் ஏற்குமாறு செய்ததில் இவரது பங்கு முக்கியமானது. 1789-ல் அமெரிக்காவின் முதல் அதிபராகப் பதவி ஏற்றார். 100 சதவீதம் வாக்குகள் பெற்ற ஒரே அதிபர் இவர்தான். அமெரிக்காவின் ஒற்றுமை குலையாமல் கட்டிக்காத்த உறுதிமிக்க தலைவராகத் திகழ்ந்தார். பல துறைகளிலும் அசாதாரண நிர்வாகத் திறனுடன் அமெரிக்காவைக் கட்டமைத்தார். அமெரிக்க வரலாறே இவரிடம் இருந்துதான் தொடங்குவதாகவும் கருதப்படுகிறது. போர், அமைதி என 2 காலகட்டங்களிலும் சிறப்பான நிர்வாகத் திறனைக் கொண்டிருந்ததால், காலங்கள் கடந்தும் புகழ்பெற்று விளங்குகிறார். ஆதரவு, செல்வாக்கு இருந்தாலும் 3-வது முறை தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்து சிறந்த முன்னுதாரணமாக விளங்கினார். இவரது சிலைகள் அமெரிக்காவில் பல இடங்களில் நிறுவப்பட்டுள்ளன. டாலர் நோட்டுகள், நாணயங்களில் இவரது உருவம் பொறிக்கப்பட்டது. அவரது நினைவாகத் தபால் தலைகள் வெளியிடப்பட்டன. இவரது பிறந்தநாள் விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டது. பல கல்வி நிறுவனங்கள், பொது இடங்களுக்கு இவரது பெயர் சூட்டப்பட்டது

Advertisement

அமெரிக்கா விடுதலை பெற்றபோது, அது ஒரே நாடு அல்ல; சிறிய நாடுகள் பல இணைந்து, ஐக்கிய நாடானது. பின், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், பொருளாதாரத்தில் அபார வளர்ச்சி கண்டுள்ளது. ஒரு காலத்தில், ஐரோப்பிய நாடான இங்கிலாந்திற்கு அடிமையாக இருந்தது அமெரிக்கா. சுய அதிகாரமோ, தனி சட்ட மன்றமோ, நாடாளுமன்றமோ கிடையாது.இங்கிலாந்து பார்லிமென்டில், இயற்றிய சட்ட திட்டங்கள், அமெரிக்காவை கட்டுப்படுத்தியது. இங்கிலாந்துக்கு வரியும் செலுத்த வேண்டியிருந்தது. இது, அமெரிக்கர்கள் எண்ணத்தில் சுதந்திர வேட்கையை ஏற்படுத்தியது. அமெரிக்க மக்களின் விடுதலை உணர்வை அடக்க, பெரும் படையை அனுப்பியது இங்கிலாந்து. மக்கள் அஞ்சி ஓடவில்லை; எதிர்த்து போரிட்டனர். விடுதலைப் படைக்கு, தலைமை தாங்கி நின்றார், ஜார்ஜ் வாஷிங்டன். விடுதலை கிடைத்ததும் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் முதல் குடியரசு தலைவராக ஆனார். நாட்டிற்கும், மக்களுக்கும் அரும்பெரும் தொண்டாற்றி புகழ் பெற்றார்.

Advertisement

அமெரிக்கா, வர்ஜீனியா பகுதியில், இதே டிசம்பர் 14,  1732ல் பிறந்தார் ஜார்ஜ் வாஷிங்டன்; தந்தை விவசாயி. அவர் பிறந்த காலத்தில், வர்ஜீனியா முன்னேற்றம் அடைந்திருக்கவில்லை; கல்வி, தொழிற்கூடங்கள் எதுவும் இல்லை. குடும்ப தொழிலான விவசாயத்தில், பிள்ளைகளும் ஈடுபட வேண்டும் என்று எண்ணினார் தந்தை; ஜார்ஜ் வாஷிங்டனுக்கும் பள்ளிப்படிப்பில் ஆர்வம் இல்லை; அதனால் விவசாயத்தில் தந்தைக்கு உதவியாக இருந்தார். அவரது, 11 வயதில், தந்தை இறந்தார். பின், நெருங்கிய உறவினர் லாரன்ஸ் வீட்டில் வளர்ந்தார். வசதியான, போர்பாக்ஸ் பிரபு குடும்பத்தில் திருமணம் செய்தவர் லாரன்ஸ். இங்கிலாந்தில் பெருஞ்செல்வாக்குடன் விளங்கிய அந்த குடும்பம், பின் அமெரிக்காவில் குடியேறியிருந்தது. சிறுவன் வாஷிங்டன் குணமும், நடவடிக்கையும் போர்பாக்ஸ் பிரபுவுக்கு பிடித்து விட்டது. அவன் முன்னேற்றத்துக்கு உதவ விரும்பினார்.

அமெரிக்காவில் ஷெனாண்டோ பள்ளத்தாக்கு பகுதியை ஆய்வு செய்ய, 1748ல் ஒரு குழுவை அனுப்பினார் போர்பாக்ஸ் பிரபு. அந்தக் குழுவில் உதவியாளனாக, ஜார்ஜ் வாஷிங்டனை சேர்த்திருந்தார். பின், உறவினர் லாரன்சுடன் மேற்கிந்திய தீவுகளுக்கு பயணமானார். அங்கு, ஜார்ஜ் வாஷிங்டனுக்கு அம்மை நோய் ஏற்பட்டது. அதிலிருந்து பிழைத்தாலும், முகத்தில் ஏற்பட்ட வடுக்கள் நிலைத்து விட்டன. லாரன்ஸ் திடீர் என மரணம் அடைந்தார். அவரது சொத்துகள், ஜார்ஜ் வாஷிங்டனுக்கு சேர்ந்தன. இளம் பருவத்திலேயே செல்வ சீமான் ஆனார். வாழ்வை உல்லாசத்தில் கழிக்க விரும்பவில்லை. சொத்துகளை முறையாக நிர்வகிக்க துவங்கினார்.

விவசாயத் துறையில் அப்போது அமெரிக்கா முன்னேறியிருக்கவில்லை; மிகவும் பின் தங்கியிருந்தது. அந்த துறையில் மாற்றங்களை செய்தார் ஜார்ஜ். விளைச்சலை பெருக்க, இங்கிலாந்தில் இருந்து பண்ணைக் கருவிகளை வரவழைத்தார். முழு முயற்சியால் விவசாயத் தொழிலில் முன் மாதிரியாக திகழ்ந்தார். சொந்தமாக பல ஆயிரம் ஏக்கர் நிலம் இருந்தாலும், ஒரு பகுதியில் மட்டும் விவசாயம் செய்தார்; மற்ற பகுதிகள், ஆடு, மாடு மேய்ச்சலுக்காக ஒதுக்கப்பட்டன. பண்ணையில் ரோமத்திற்காக ஆடு வளர்க்கப்பட்டது; அதில், கம்பளி ஆடைகள் நெய்யும் தொழிற்சாலை ஒன்றும் அமைக்கப்பட்டது. விவசாய பண்ணையில், பல தொழில்கள் நடைபெற்றன. எனவே வரவு செலவு கணக்கு அதிகரித்தது.

அவரது நிலம் இருந்த மலைப்பகுதி வளம் பெற்றது; ஓய்வு நேரத்தை, அப்பகுதி மக்களுடன் கழித்தார்; அவர்களின் மதிப்பு, அன்புக்கு உரியவரானார். இதன் விளைவாக, வெர்ஜீனியா மாவட்டப் படை பிரிவில், உறுப்பினராக நியமிக்கப்பட்டார். அரசு அளித்த பொறுப்பையும் சிறப்பாக நிறைவேற்றினார்; அதனால், அரசுக்கு அவர் மீது நம்பிக்கை ஏற்பட்டது. அக்காலத்தில், வட அமெரிக்கப் பகுதி, இங்கிலாந்தின் நேரடி கட்டுப்பாட்டில் இருந்தது. நிர்வாக பொறுப்பை, ஆளுநர்களே கவனித்து வந்தனர். சில பகுதிகள், ஐரோப்பிய நாடான பிரான்ஸ் கட்டுப்பாட்டில் இருந்தது. ஆங்கிலேயரும், பிரெஞ்சுகாரரும் அமெரிக்காவை முழுக்கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சித்தனர்; இதனால் அடிக்கடி மோதல் எழுந்தது.

இது போன்ற மோதல்கள் ஓஹியோ ஆற்றுப் பகுதியில் அதிகம் நடந்தன. மோதலுக்கு காரணமாக இருந்த பிரெஞ்சு குடியேற்றத்தை வெளியேற்ற, வெர்ஜீனியா மாநில ஆங்கிலேய ஆளுநர் திட்டமிட்டார். அது தொடர்பான உத்தரவை, வாஷிங்டனிடம் கொடுத்து அனுப்பினார். பிரெஞ்சுகாரர்கள், உத்தரவை ஏற்கவில்லை. இதனால், கட்டாயமாக வெளியேற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. இதை நிறைவேற்ற ஆங்கிலேயப் படை புறப்பட்டது. அந்த படைப்பிரிவின் துணை தளபதியாக பொறுப்பு வகித்தார், ஜார்ஜ் வாஷிங்டன்.உக்கிரமாக நடந்த போரில், பிரெஞ்சு கவர்னர் ஜெனரல் கொல்லப்பட்டார்; எனினும், ஆங்கிலேய படையால் வெற்றி பெற முடியவில்லை. வெறுங்கையுடன் திரும்பிய ஆங்கிலேயப் படை, வழியில், கோட்டை ஒன்றை உருவாக்கியது. அப்போது, ஆங்கிலேய படைத்தளபதி இறந்தார்.

இதையடுத்து, தளபதியாக பொறுப்பேற்றார், ஜார்ஜ் வாஷிங்டன். கவர்னர் ஜெனரல் கொல்லப்பட்டதால் ஆத்திரம் அடைந்திருந்த பிரெஞ்சு படை, பழி தீர்க்க காத்திருந்தது. கொல்லப்பட்ட கவர்னர் ஜெனரலின் சகோதரர், டி வில்லியர்ஸ் தலைமையில் பெரும் படை ஒன்று தாக்குதல் நடத்தியது. இந்த போரிலும் ஆங்கிலேயப் படை தோல்வி கண்டது. வாஷிங்டனும், அவரது படை வீரர்களும் சுற்றி வளைக்கப்பட்டனர். இந்நிலையில் பேச்சு வார்த்தை நடந்தது. வாஷிங்டனுக்கு, பிரெஞ்சு மொழி தெரியாது. டி வில்லியர்சுக்கு ஆங்கிலம் தெரியாது. எனவே, நேரடியாக பேச்சு நடத்த முடியவில்லை. இருவருக்கும் மொழி பெயர்ப்பாளராக செயல்பட்டார் ஒரு டச்சுக்காரர்; அவர் தீட்டிய சதி திட்டத்தால், தவறான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் வாஷிங்டன்.

ஒப்பந்த பத்திரத்தில், 'பிரெஞ்சு கவர்னர் ஜெனரலை கொலை செய்ததை ஒப்புக் கொள்கிறேன்... இனி ஓராண்டுக்கு பிரெஞ்சு படைக்கு எதிராக ஆங்கிலேயப் படை போரிடாது...' என, பிரெஞ்சு மொழியில் குறிப்பிட்டிருந்த ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டார். ஜார்ஜ் வாஷிங்டனுக்கு, முதல் போர்க்கள அனுபவம் இது. பின்னடைவு ஏற்பட்டாலும் ஆர்வம் குறையவில்லை. அந்த போர் அனுபவம் பற்றி, 'போர்க்களத்தில், துப்பாக்கிக் குண்டு பறந்து செல்லும் போது உண்டாகும் ஒலி, கவர்ச்சியூட்டும் ஓசையாக அமைந்திருந்தது...' என்று ஒரு கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

மீண்டும், 1755ல் ஆங்கிலேயர் -பிரெஞ்சு படை இடையே போர் மூண்டது; இம்முறையும், ஆங்கிலேயருக்கு தோல்வி ஏற்பட்டது; ஆங்கிலேய படைத் தளபதி, போர்க்களத்திலேயே உயிர் இழந்தார்; நெருக்கடி முற்றியது. அதனால், படைக்குத் தலைமை ஏற்கும் பொறுப்பு, ஜார்ஜ் வாஷிங்டனிடம் வந்தது. வெர்ஜீனிய மாநில ஆங்கிலேய படைக்கும், அவரே தளபதியாக நியமிக்கப்பட்டார். இந்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தினார். போரில், பிரெஞ்சு படையின் வலிமையை சிதறடித்து, ஆங்கிலேய அரசின் பாராட்டை பெற்றார், ஜார்ஜ் வாஷிங்டன். தொடர்ந்து, மூன்று ஆண்டுகள் அந்த பதவியில் இருந்தார். பின், உடல்நலக் குறைவு காரணமாக விலகி, வெர்னான் மலை பகுதிக்கு திரும்பினார். அங்கு, மார்த்தா என்ற விதவையைத் திருமணம் செய்தார்; அமைதியான இல்லற வாழ்வில், ஏழு ஆண்டுகள் ஈடுபட்டிருந்தார்.அப்போது, ஆங்கிலேய அரசு ஒரு உத்தரவு பிறப்பித்தது. அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய பகுதியில் அப்பலாச்சியன் மலைகளுக்கு அப்பால் யாரும் குடியேறவோ, நிலம் வாங்கவோ கூடாது என்பது தான் அந்த உத்தரவு.

அதை கடுமையாக எதிர்த்தார் ஜார்ஜ் வாஷிங்டன். ஆங்கிலேய அரசுக்கு எதிர்ப்பை காட்ட ஓஹியோ பள்ளத்தாக்கு பகுதியில், செல்வந்தர் ஒருவருக்கு நிலம் வாங்க உதவிகள் செய்தார். 'இங்கிலாந்து நாடாளுமன்றம், நிறைவேற்றும் சட்டங்கள் அமெரிக்கர்களை கட்டுப்படுத்துகிறது. இங்கிலாந்துக்கு வரி செலுத்துகிறோம்; ஆனால், இங்கிலாந்து நாடாளுமன்றத்தில், அமெரிக்க மக்களுக்கு பிரதிநிதித்துவம் இல்லை. வரி வசூலிப்பதாக இருந்தால், நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் தர வேண்டும்' என வலியுறுத்தினார். இந்த கருத்து அமெரிக்கர் மனதில் துளிர்த்து வளர்ந்தது; சுதந்திர வேட்கையை ஏற்படுத்தியது. இந்நிலையில், அமெரிக்க மக்கள் ஒப்புதல் இன்றி, மேலும் சில சட்டங்களை நிறைவேற்றியது இங்கிலாந்து. அவை, ஆங்கிலேயர் மீது, மேலும் வெறுப்பை வளர்த்தன; இங்கிலாந்துக்கு எதிராக போராட்டத்தை துவங்கினர் அமெரிக்கர்கள்.

இதன் ஒரு பகுதியாக, பிலடெல்பியா நகரில், 1774ல் அமெரிக்க மக்கள் பிரதிநிதிகள் கூடினர். அதில், வெர்ஜீனியா மாநில பிரதிநிதியாக பங்கேற்றார் ஜார்ஜ் வாஷிங்டன். கூட்டத்தில், அமெரிக்கா மக்கள் காங்கிரஸ் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராகப் போராட முடிவு செய்யப்பட்டது. அந்த போராட்டத்துக்கு தளபதியாக, நியமிக்கப்பட்டார் ஜார்ஜ் வாஷிங்டன்.அமெரிக்க மக்களின் விடுதலை உணர்ச்சியை, இங்கிலாந்து அரசு மதிக்கவில்லை. துப்பாக்கி முனையில், பணிய வைக்க தீர்மானித்தது; இதற்காக, பெரிய படையை அனுப்பியது. அதை எதிர்கொள்ள அமெரிக்க மக்கள் தயாராயினர்.

இங்கிலாந்து ராணுவம் முறையாகப் பயிற்சி பெற்றிருந்தது. வேண்டிய அளவு கவச உடையும், உணவும் வைத்திருந்தது. ஆனால், விடுதலைக்காக போராடிய அமெரிக்கர்கள் பயிற்சி பெற்றவர்கள் அல்ல; போர்க்களம் அவர்களுக்கு புதிது. உரிய கருவிகளும் இல்லை. கிழிந்த ஆடை, குறைந்த உணவைக் கொண்டு போரிட்டனர். பல நேரம், குதிரைக்கு வைத்திருந்த தீவனப் பொருட்களையே, உண்ண வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது. துன்பங்களை தாங்கியபடி, அமெரிக்கர்கள் துணிவுடன் போரிட்டதற்கு இரு காரணங்கள் இருந்தன.

ஒன்று: தாய்நாட்டு மீதான விடுதலை வேட்கை.

இரண்டு: ஜார்ஜ் வாஷிங்டனின் மேலான தலைமை.

எண்ணற்ற தொல்லைகள் ஏற்பட்ட போதும், மனம் தளரவில்லை வாஷிங்டன்; களத்தில் நின்று, வீரர்களை ஊக்கப்படுத்தினார். தோல்விகள் தொடர்ந்த போதும் நம்பிக்கையை கைவிடவில்லை; கடும் தட்ப வெப்பம் நிலவிய போதும், தளர்ந்துவிடவில்லை. அவரது மன வலிமை மற்றும் சுயக் கட்டுப்பாடு அனைவரையும் கவர்ந்தது. வீரர்களை எழுச்சி பெற வைத்தது.
முதலில் இங்கிலாந்து படை, அடுத்தடுத்து வெற்றி கண்டது. இதனால் பூரிப்பில் திளைத்த இங்கிலாந்து படைத் தலைவர், வாஷிங்டனுக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில், மன்னிப்பு கேட்க வேண்டும் என கோரியிருந்தார். தோல்வியை ஒப்புக் கொள்ளவோ, மன்னிப்பு கேட்கவோ முன் வரவில்லை வாஷிங்டன்; தொடர்ந்து போரை நடத்தினார். பல்லாயிரக் கணக்கில் அமெரிக்க வீரர்கள் களத்தில் மடிந்தனர்; ஆயிரக்கணக்கானோர் சிறைப்படுத்தப்பட்டனர்.வெற்றி களிப்பில், மயங்கியிருந்த இங்கிலாந்து படையை, 2,400 வீரர்களுடன் திடீரென்று தாக்கினார், ஜார்ஜ் வாஷிங்டன். போர் உச்சத்தை அடைந்தது.

இங்கிலாந்து படை சிதறடிக்கப்பட்டது. அமெரிக்க - பிரெஞ்சு கூட்டுப் படையின் தாக்குதலை சமாளிக்க முடியாமல், யார்க் டவுன் என்னுமிடத்தில் சரண் அடைந்தது, இங்கிலாந்து படை.
இறுதியில் வெற்றி கண்டது அமெரிக்கா. ஆங்கிலேய ஆட்சி அகன்றது. மேலான வெற்றியைத் தேடித் தந்த பெருமை ஜார்ஜ் வாஷிங்டனை சேர்ந்தது; அமெரிக்கர் உள்ளங்களில் நீங்கா இடம் பிடித்தார்.பொறுப்பை முறையாக நிறைவேற்றி, வெற்றி கண்ட வாஷிங்டன், சில நாட்களில் படைத் தலைவர் பதவியை துறந்தார். அமைதியாக வாழ, மீண்டும், வெர்னான் மலைப் பகுதிக்கு செல்ல முடிவு செய்தார்.

ஆனால், தக்க தலைமை பொறுப்பை ஏற்பவர் இன்றி, தடுமாறியது அமெரிக்கா; நாட்டில், சரியான அரசியல் சட்டம் உருவாகவில்லை. இந்த நிலையில், 1787ல் மக்கள் மாநாடு கூடியது. அதில், அமெரிக்கா ஐக்கிய நாடுகளின் அரசியல் சாசன சட்டம் உருவாக்கப்பட்டது. மீண்டும் அழைக்கப்பட்டார் ஜார்ஜ் வாஷிங்டன்.விடுதலைப் போருக்கு தலைமை தாங்கிய அவரே, நாட்டை வழி நடத்தும் பொறுப்பையும் ஏற்க வேண்டும் என்றனர் மக்கள். அமெரிக்கக் குடியரசின் முதல் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார், ஜார்ஜ் வாஷிங்டன். பலம் மிக்க ஐக்கிய அரசை அமைத்தார். அவரது செயல்திறன் தொடர்ந்து தேவைப்பட்டதால், இரண்டாவது முறையும் அவரே குடியரசு தலைவரானார். முன்னரே குறிப்பிட்டது போல் மூன்றாம் முறையாக, பதவியில் தொடர மறுத்து விட்டார்.

அமெரிக்கர் நெஞ்சில் நிறைந்த ஜார்ஜ் வாஷிங்டன், டிசம்பர், 1799ல் மறைந்தார். அவரது நினைவாக அமெரிக்க நகரம் ஒன்றுக்கு, 'வாஷிங்டன்' என்று பெயரிடப்பட்டுள்ளது. உலக வரலாற்றில் உன்னத இடம் பெற்றுள்ளார், ஜார்ஜ் வாஷிங்டன். ஆரம்பத்தில், இங்கிலாந்திடம் முழு விடுதலைக்கு கோரவில்லை அமெரிக்க மக்கள்; நாடாளுமன்றத்தில், உரிய பிரதிநிதித்துவம் தர வேண்டும் என்ற கோரிக்கையை தான் வலியுறுத்தினர். வாஷிங்டனும் இதையே வலியுறுத்தி வந்தார். ஆனால், இங்கிலாந்து படையுடன் போர் தீவிரமானதும், முழு விடுதலை பெறும் எண்ணம் அமெரிக்க மக்களுக்கு ஏற்பட்டது. இங்கிலாந்து ஆட்சியை அடியோடு ஒழித்துக் கட்ட விரும்பினர். களத்தில் இறங்கி போராடி வெற்றி கண்டனர்.

வாத்தீ அகஸ்தீஸ்வரன்

Tags :
'George Washington'!America's fatherdollar nationஅமெரிக்காஜார்ஜ் வாஷிங்டன்
Advertisement
Next Article