தன்னம்பிக்கைப் போராளியும் மும்பை மாநகர டெபுடி கமிஷனருமான அம்பிகா!
அந்த சிறுமி ஒரு போலீஸ் கான்ஸ்டபிளை திருமணம் செய்து கொண்டபோது அவளுக்கு வயது 14. பதினெட்டு வயது ஆகும் போது அவள் இரண்டு குழந்தைகளுக்கு தாய். ஒரு நாள் அவளது கணவர் வேலை முடிந்து நீண்ட நேரம் ஆகியும் வீட்டுக்கு வரவில்லை. அவர் இருக்கும் பரேட் மைதானத்திற்கு குழந்தைகளை அழைத்து கொண்டு அவளே நேரில் சென்றாள். அங்கு வந்திருந்த ஒரு உயர் போலீஸ் அதிகாரிக்கு யாவரும் பெரும் மரியாதை செய்தது கொண்டு இருந்தனர். அந்த காட்சி அவளுடைய மனதை தொட்டது. மிகவும் ஆச்சரியம் பொங்க அதை பார்த்து கொண்டு இருந்தாள்.
பிறகு, வீட்டுக்கு வந்ததும் கணவரிடம் அதைப்பற்றி மிகவும் ஆர்வமாக கேட்டாள். அவர் மாநில அளவில் ஒரு உயர்நிலை ஐபிஎஸ் அதிகாரி என்பதை அவளுக்கு எடுத்து சொன்னார். அன்று இரவு அவளுக்கு தூக்கம் வரவில்லை. அந்த எண்ணம் அவள் மனதை முழுவதும் ஆக்கிரமித்து இருந்தது.
காலையில் எழுந்ததும் முதல் வேலையாக தன் கணவரிடம் தீர்மானமாக அவள் சொன்னாள்: "நான் ஒரு ஐபிஎஸ் அதிகாரி ஆக விரும்புகிறேன்."
அவளுடைய கணவர் ஆச்சரியம் அடைந்தார் என்றாலும் அவளது விருப்பத்தை ஏற்றுக்கொண்டு ஒத்துழைப்பு தந்தார். மேலும் அவள் என்ன செய்ய வேண்டும் என்றும் வழிகாட்டினார்.அதற்கு பிறகு தான் அவள் தனது பத்தாம் வகுப்பை படிப்பை முடித்தாள். பின்னர் அடுத்தடுத்து 12 ம் வகுப்பு மற்றும் பட்டப்படிப்பையும் சிறப்பான முறையில் தேர்ச்சி செய்தாள்.
அவளை உந்தி தள்ளிய ஐபிஎஸ் போட்டி தேர்வில் வெற்றி பெற பயிற்சியில் சேருவதற்கு தனது குழந்தைகளை கணவர் மற்றும் குடும்பத்தினர் பொறுப்பில் விட்டு விட்டு அவள் மட்டும் தனியாக நகரத்திற்கு குடி பெயர்ந்தாள். கடுமையான பயிற்சி; உழைப்பு. ஆனால், பெரும் முயற்சி செய்தும் போட்டி தேர்வுகளில் மூன்று முறை தோல்வியே அடைந்தாள். இது வரை பொறுமை காத்த கணவர் அவளை முயற்சியை கைவிட்டு விட்டு வீட்டுக்கு திரும்பி வரும் படி கேட்டார். தீர ஆலோசனை செய்த பிறகு, தனக்கு இறுதியாக ஒரு வாய்ப்பு தரவேண்டும் என்று கேட்டு கொண்டாள். இந்த முறை வெற்றி கிடைக்கவில்லை என்றால் திரும்பி வந்து ஒரு ஆசிரியை ஆக பணியாற்ற சம்மதிக்கின்றேன் என்றும் கூறினார். அந்த அருமையான மனிதன்- அவள் கணவர் சரி என்று சம்மதம் தெரிவித்தார்.
நான்காம் முயற்சியில் வாழ்வா சாவா என்ற நிலையில் போராடி தேர்வுக்கு தயார் ஆனார். தேர்வு முடிவுகள் வெளிவந்தன. அவள் அகில இந்திய அளவில் 287 வது ரேங்க் பெற்று சிறப்பாக ஐபிஎஸ் தேர்வில் வெற்றி பெற்றார். அவர் தான் என்.அம்பிகா. இப்போது வடக்கு மும்பையில் போலீஸ் துணை கமிஷனர் ஆக பணியாற்றி வருகிறார். அவர் ஒரு தமிழ் பெண். கணவர் திண்டுக்கல்லில் பணியாற்றி வந்தார். அப்போது தான் ஐபிஎஸ் கனவோடு அம்பிகா சென்னை சென்று பயிற்சி பெற்று தேர்வில் வெற்றி பெற்றார். 4வது முறை மேற்கொண்ட முயற்சியில் அம்பிகாவுக்கு ஐ.பி.எஸ். நேர்காணலுக்கான அழைப்பு வந்தது. 2008ம் ஆண்டு ஐ.பி.எஸ். தேர்வில் வெற்றியை பெற்ற பின்னர் பயிற்சிக்கு உட்பட்ட பிறகு வடக்கு மும்பை மாவட்டத்தின் காவல்துறை துணை ஆணையராக நியமிக்கப்பட்டிருக்கிறார். தற்போது சிறந்த போலீஸ் அதிகாரியாக பணிபுரிந்து நாட்டுக்கும் வீட்டுக்கும் பெருமை சேர்த்து வருகிறார் அம்பிகா. குழந்தை திருமணம் செய்து வைத்ததற்காக சமூகத்தையும், பெற்றோரையும் குறை கூறாமல் தன்னுடைய இலக்கை அடைவதற்கு அயராது உழைத்திருக்கிறார் அம்பிகா காவல்துறையில் பணிபுரிய வேண்டும் என்ற அவரது நம்பிக்கையை தளர விடாமல் இருந்ததால் இன்று ஐ.பி.எஸ் ஆகியுள்ளார். குழந்தை பருவத்தில் திருமணம் செய்திருந்தாலும், அதையே நினைத்து வருந்தாமல், எவ்வித மனக் குமுறல்களும் இல்லாமல் தன்னம்பிக்கையை மூலதனமாக கொண்டு வாழ்வில் முன்னேற வேண்டும் என்பதை இலக்காக கொண்டால் எவராலும் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கும், தற்போது சமூகத்தில் தாழ்வு மனப்பான்மையுடன் வாழ்ந்து வரும் அனைத்து பெண்களுக்கும் ஒரு முன்னுதாரணமாக விளங்கி வருகிறார் அம்பிகா. தன்னம்பிக்கையின் முகமான அம்பிகா IPSக்கு ஒரு சல்யூட் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
என்னுடைய கணவர் முழு ஒத்துழைப்பு கொடுத்ததால்தான் இன்று நான் ஐபிஎஸ் ஆக இருக்கிறேன்.. அவர் மட்டும் வேண்டாம் என்று சொல்லி இருந்தால் என் வாழ்க்கை சமையல் அறையிலேயே முடிந்திருக்கும்.. என்றும் சொல்கிறார்