அம்பானி கல்யாண செலவைக் கண்டு பொங்கும் அன்பு உள்ளங்களே!
அம்பானி வீட்டுத் திருமண செலவு இங்கே விவாதப் பொருளாகி இருக்கிறது. எவ்வளவு ஆடம்பரம், எவ்வளவு வீண் போன்ற அங்கலாய்ப்புகள் எழுகின்றன. இந்தத் திருமணத்துக்காக முகேஷ் அம்பானி சுமார் 4,500 கோடி செலவழித்திருக்கிறார் என்று தெரிகிறது. அமெரிக்க டாலரில் அரை பில்லியன் வருகிறது. முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு சுமார் 123.3 பில்லியன் டாலர்கள். எனவே, தனது சொந்த மகனின் திருமணத்துக்காக அம்பானி செலவழித்தது தனது மொத்த சொத்தில் சுமார் 0.4% தான்.
இதைப் புரிந்து கொள்ள ஒரு ஒப்பீடு செய்வோம்: 20 லட்சம் சொத்து வைத்திருக்கும் மத்திய வர்க்க அப்பா ஒருவர் 8,000 ரூபாய் செலவழித்து தன் பிள்ளைக்கு கல்யாணம் செய்து வைத்திருக்கிறார். அதாவது முகேஷ் அம்பானி படு கஞ்சத்தனமாக இந்தக் கல்யாணத்தை நடத்தி இருக்கிறார். எனவே, அம்பானி குடும்பத் திருமணத்தில் பொங்கல் வைப்பதற்கு எந்த முகாந்திரமும் இங்கே இல்லை. ஆனால் நாமெல்லாம் அறச்சீற்றத்தில் பொங்கி எழ வேண்டிய கல்யாணங்கள் இங்கே இருக்கின்றன.
அவை என்ன தெரியுமா? முக்கால்வாசி இந்தியக் கல்யாணங்கள்தான். காரணம், இந்தியாவில் திருமணங்கள் முகேஷ் அம்பானி போல கஞ்சத்தனமாக நடத்தப்படுவதில்லை. படு விமரிசையாக, படு ஆடம்பரமாக நடத்தப்படுகின்றன. India Lends எனும் நிதி நிறுவனம் இந்தியத் திருமணங்கள் குறித்து ஒரு ஆய்வு செய்திருக்கிறது. அதில் தெரிய வந்தது:
* இந்தியாவில் ஆண்டு முழுவதும் நடத்தப்படும் திருமணங்களில் மொத்தமாக ஆகும் செலவு: ஒரு லட்சம் கோடிக்கும் அதிகம்.
* சராசரியாக ஒரு திருமணத்துக்கு 10 முதல் 15 லட்சம் வரை செலவாகிறது.
* இந்தியாவின் சராசரி தனி நபர் வருமானம் ஆண்டுக்கு 1.5 லட்சம்தான். அது ரொம்பவும் குறைவு. மத்திய வர்க்கத்தை மட்டுமே எடுத்துக் கொண்டு பார்த்தாலும் சராசரி ஆண்டு வருமானம் சுமார் 7.5 முதல் 15 லட்சம் வரை இருக்கலாம். அந்தக் கணக்கில் பார்த்தாலும் இது மிக மிக அதிகம்.
* அதாவது இந்தியாவில் ஒரு சராசரி அப்பா தனது வாழ்நாள் வருவாயில் மூன்றில் ஒரு பங்கை பிள்ளைகள் திருமணத்துக்காக செலவழிக்கிறார். ++
நிற்க. பொங்க வேண்டியது இதற்காக இல்லை.
இதற்காகத்தான்:
இந்த செலவுகளில் பெரும்பான்மையான அளவு பெண்ணின் தந்தையின் தலையில்தான் விழுகிறது. ஆண் பிள்ளைகளைப் பெற்றவர்களுக்கு பெரிய செலவு இருப்பதே இல்லை. சொல்லப் போனால் திருமணம் மூலம் சீர், செனத்தி - பல நேரங்களில் வரதட்சிணை - என்று வருமானம்தான் அவர்களுக்கு. பெண் பிள்ளையை பெற்றதினால் அவள் திருமணத்துக்கு செய்ய வேண்டிய அதீத செலவு பல்வேறு வகைகளில் அவள் குடும்பத்துக்கு கடும் பாரமாக ஆகிறது. இதற்கான எதிர்மறை பல்வேறு விதங்களில் சமூகங்களில் எதிரொலிக்கிறது. பெற்றோர் பெண்களை அதிகமாக படிக்க வைப்பதில்லை. அவள் பிறந்ததில் ஆரம்பித்து தங்கள் வருவாயில் இருந்து கணிசமான தொகையை அவள் திருமணத்துக்கான சேமிப்பாக ஒதுக்கி வைக்க ஆரம்பிக்கிறார்கள். அதன் மூலம் பெற்றோரின் வாழ்க்கைத் தரம் குறைகிறது. இந்தத் தொல்லை எல்லாம் எதற்கு என்று வட மாநிலங்களில் கருவிலேயே பெண்ணா என்று கண்டுபிடித்து அழித்து விடுகிறார்கள். இதன் மூலம் அந்த மாநிலங்களில் ஆண்:பெண் விகிதாச்சாரம் குறைகிறது. ஸ்கேன் சென்டர்கள் வாசலில் கருவின் பாலினத்தை அறிவிப்பதை சட்ட விரோதமாக அறிவிக்கும் போர்டு தொங்குகிறது.
சிகரம் வைத்தாற்ப் போல, அரசாங்கமே 'பேட்டி பச்சாவ், பேட்டி படாவ்' (பெண் பிள்ளைகளை காப்பாற்றுவோம், பெண் பிள்ளைகளை படிக்க வைப்போம்) என்று அரசுத் திட்டம் அறிவிக்கும் அளவுக்குப் போகிறது. உலகிலேயே 'பெண் பிள்ளைகளை சாகடிக்காதீர்கள். அவர்களை வாழ விடுங்கள்,' என்று அரசாங்கமே கொள்கைத் திட்டம் அறிவிக்கும் அளவுக்கு கேவலமான நிலையில் இருக்கும் சமூகம் இந்திய சமூகம்தான். இதற்கு முக்கிய காரணிகளில் ஒன்று, பெண்களைப் பெற்றவர்கள் மீது ஏறும் 'திருமண செலவு' எனும் இந்த அதீத சுமை.
அம்பானி கல்யாண செலவைக் கண்டு பொங்கும் அன்பு உள்ளங்களே. அவர் ஒரு கஞ்சப் பிசினாறி. அவரை விட்டு விடுங்கள். இந்தியாவில் திருமண செலவு குறைய வேண்டும். மாப்பிள்ளை, பெண் இருவருக்கும் சமமாக வேண்டும், வரதட்சிணை, சீர், செனத்தி போன்ற அசிங்கங்கள் முடிவுக்கு வர வேண்டும். பெண்ணின் வாழ்க்கைக்கான லட்சியமே திருமணம்தான் எனும் கலாச்சாரம் அழிய வேண்டும் பெண்கருவை அழிப்பது போன்ற அவலங்கள் முடிவுக்கு வர வேண்டும்.உங்களிடம் அறச் சீற்றம் ஏதாவது மிச்சம் மீதி இருந்தால் இந்தியாவின் சராசரி இந்தியப் பெண்ணின் அப்பாவின் நிலையைக் கண்டு பொங்கி எழுங்கள். புண்ணியமாய்ப் போகும்.