தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

அமரன் - விமர்சனம்!

08:15 AM Nov 01, 2024 IST | admin
Advertisement

மேஜர் முகுந்த் வரதராஜன் தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டவர். 2014 ஏப்ரலில் நிகழ்ந்த அவரின் இறப்பு இந்தியா முழுவதுமே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. அத்தனை பேரும் அவருக்காக அஞ்சலி செலுத்தியிருந்தனர். முகுந்தின் அப்பா வரதராஜனுக்கு இராணுவத்தில் சேர வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. அவருக்கு அது கைகூடவில்லை. ஆனால், பி.காம்மும் ஜர்னலிசமும் படித்த அவரின் மகன் முகுந்த் அந்தக் கனவை நனவாக்கினார். சென்னை ஆபிசர்ஸ் அகாடெமியில் பயிற்சி பெற்று இராணுவத்தில் சேர்ந்த முகுந்த் 2011 இல் ஐ.நா.சபை சார்பில் லெபனானுக்கு அனுப்பப்பட்ட அமைதிப்படையிலும் இடம்பெற்றிருந்தார். இந்த முகுந்துக்கு அழுவதே பிடிக்காதாம்.. தன் மனைவியிடம் கூட நான் உயிரிழந்தால் கூட நீ அழக் கூடாது என்று சொல்லி சத்தியம் வாங்கியவ்ர்.. இந்த சத்தியத்தின் பின்னணிக் கதைதான் அமரன்

Advertisement

கோலிவுட்டின் ஆண்டவர் என்று வர்ணிக்கப்படும் கமல்ஹாசனின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த அமரம் கதை முன்னரே சொன்னது போல் நாயகன் மனைவியின் பார்வையில் இருந்தே தொடங்குகிறது .. நம்ம தாம்பரத்தைச் சேர்ந்த முகுந்த் வரதராஜன் (சிவகார்த்திகேயன்) என்ற இளைஞர், மிலிட்டரியில் சேர்ந்து கேப்டன், பின்னர் மேஜர் என படிப்படியாக பெரிய பொறுப்புகளை அடைந்து காஷ்மீரில் தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகளுக்காக உருவாக்கப்பட்ட 44-வது ராஷ்டிரிய ரைபிள்ஸ் குழுவில் இணைகிறார். இடைச்செருகலாக தனது நீண்டநாள் காதலியான இந்துவின் (சாய் பல்லவி) அப்பா, அம்மாவை கன்வின்ஸ் செய்து திருமணம் செய்து கொள்கிறார். இருவருக்கும் இடையேயான லவ்வபிள் லைஃப், இன்னொரு பக்கம் காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு எதிரான முகுந்தின் அதிரடிகள், இறுதியில் நாட்டைக் காக்க வீரமரணம். அதைக் கேட்டு அழக் கூடாது என்று சொன்னவனின் இழப்பைத் தாங்க முடியாத மனைவியின் வெடிப்பே இந்த ‘அமரன்’.

Advertisement

ஹீரோவை விட பலம் வாய்ந்த ரோலில் நாயகி சாய் பல்லவி, இந்து ரெபேக்கா வர்கீஸாக நடிக்கவில்லை, வாழ்ந்தே இருக்கிறார். படம் முழுக்க கணவனை பிரிந்து, அவருக்கு ஆபத்து நேரும் போதெல்லாம் அழும் இவர், கணவனின் இறப்பிற்கு பிறகு வலிமையாக இருந்து அனைத்தையும் தாங்கிக்கொள்வது படம் பார்ப்பவர்களின் மனதை கனமாக்குகிறது. அதிலும் நிறைய அழுகைக் காட்சிகள் வந்தாலும், அவை எல்லாவற்றையுமே படத்தின் உயிராக மாற்றி விடுகிறது இவரின் நடிப்பு.முக்கியமாக, ஓய்வறையில் அழும் காட்சி, இறுதிக்காட்சி, போனில் பதறும் காட்சி எனப் பல இடங்களில் சோகக் காட்சி என்பதையும் மீறி மனதளவில் கைத்தட்ட வைத்து விடுகிறார்.

பல படங்களில் ஜாலியான இளைஞராக திரையில் பார்த்த சிவகார்த்திகேயன், ,மிலிட்டர் மேனாக உருவெடுக்கையில், மிடுக்கான உடல்மொழியாலும், கச்சிதமான ஆக்‌ஷன்களாலும் தன் தேர்வுக்கு நியாயம் செய்திருக்கிறார். ராணுவத்தில் இணைந்து மூன்று விதமான பொறுப்புகளின் போதும் அதற்கேற்ற உடல்மொழி, வசன உச்சரிப்பு என வகைப்படுத்தி சபாஷ் சொல்ல வைக்கிரார். மேலும் கணவனாக, தந்தையாக, மகனாக உருகுமிடங்களில் ஜொலிக்கிறார்.. தி கோட் படத்தில் விஜய் சொன்னதை சீரியஸாக எடுத்துக்கொண்ட சிவா, தன் கையில் கிடைத்திருக்கும் துப்பாக்கியை கெட்டியாக பிடித்துக்கொண்டார் என்றே சொல்லலாம்.

நாயகனின் அம்மாவாக வரும் கீதா கைலாசம் படத்தில் நகைச்சுவை இல்லாத குறையை தீர்த்து வைக்கிறார். அதிகாரி ராகுல் போஸ் , மற்றும் ராணுவ வீரராக புவன் அரோரா தனது ரோலில் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார்கள்.அத்துடன் சாய் பல்லவியின் அப்பா மற்றும் அண்ணன்கள், மகளாக நடித்திருக்கும் அந்த சிறுமி என சகலரும் கமிட் ஆன ரோலின் வலுவைச் சரியாக புரிந்து பங்களித்து இருக்கிறார்கள்.

இப்படத்தின் இன்னொரு நாயகன்.ஜிவி.பிரகாஷ் என்று டைட்டிலில் போட்டிருக்கலாம்.. பாடல்கள், பின்னணி இசை என கிடைத்த இடமெல்லாம் புகுந்து விளையாடி அசத்தியுள்ளார். கேமராமேன் சதீஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவு காதல் காட்சிகளில் ரம்மியமாகவும், ஆக்‌ஷன் காட்சிகளில் தீவிரத்தை உணர்த்துகிறது. அன்பறிவ்-ன் ஸ்டண்ட் காட்சிகள் வாவ் சொல்ல வைக்கிறது.

காஷ்மீர் தீவிரவாதிகள் என்கிற சர்ச்சைக்குரிய கதைக்களத்தை கையாண்டாலும் தீவிர அரசியல் விவாதங்களுக்குள் செல்லாமல் ப்ளிஸ் காதல் காட்சிகளை இன்னும் கொஞ்சம் அதிகம் காட்டுங்களேன் என்று வாய் விட்டு கேட்கும் அளவில் நம் இந்திய ராணுவத்யைச் சேர்ந்த ஒரு மனிதனின் தனிப்பட்ட வாழ்க்கையை படம்பிடித்து காட்டி மனதில் நின்று விட்டார் இயக்குநர்.

மொத்தத்தில் அமரன் - கவர்ந்து விட்டான்

மார்க் 4.25/5

Tags :
AmaranAmaran Movie ReviewAmaran ReviewGV prakashKamal HaasanMahendranmovie . reviewRajkumarSai PallaviSivakarthikeyanஅமரன்சிவகார்த்திகேயன்விமர்சனம்
Advertisement
Next Article