சொகுசு கார்கள் உட்பட அனைத்து வகை கார்களையும் வாடகை வாகனங்களாக பயன்படுத்தலாம் - தமிழக போக்குவரத்துத் துறை அனுமதி
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, சுற்றுலாத்துறை பயன்பாட்டிற்கு ஸ்விப்ட், மாருதி சுசுகி, டாடா இண்டிகோ மற்றும் வேகன் ஆர் கார்களில் குறிப்பிட்ட மாடல்களை மட்டுமே மஞ்சள் போர்டுடன் குறிப்பிட்ட வாகனங்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற உத்தரவு அமலில் இருந்து வருகிறது. அதுவும், "டி போர்ட்" எனப்பட்ட குறிப்பிட்ட மாடல் வாகனங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்ட சூழ்நிலையில், அனைத்து வகை வாகனங்களுக்குமே, இது போன்று மாற்ற வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன. தமிழகத்தில் குறிப்பிட்ட வாகனங்களுக்கு மட்டுமே இது போல் பதிவு செய்யப்பட்டதால், பிற மாநிலங்களிலிருந்து வாடகைக்கு கார் எடுத்து பயன்படுத்தி வருவதில் சிக்கல் உள்ளதாக, ஓட்டுநர்கள் மற்றும் பல்வேறு தொழிற்சங்கங்கள், நீண்ட நாட்களாகவே, தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை விடுத்தபடியே வந்தனர். இந்நிலையில், உரிமைக்குரல் ஓட்டுநர் தொழிற்சங்கம் மற்றும் அனைத்து ஓட்டுநர்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று, இதற்கு தமிழக அரசு அனுமதி தந்துள்ளது.
இது குறித்து தமிழக போக்குவரத்து துறை ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "சொகுசு கார்கள் உள்ளிட்ட அனைத்து வகையான கார்களையும் பொதுப் போக்குவரத்து வாகனங்களாக (மஞ்சள் போர்டு) பதிவு செய்து இயக்க போக்குவரத்து துறை ஆணையர் அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளார். குறிப்பிட்ட கார் வகைகளை மட்டுமே வாடகை கார்களாக பயன்படுத்த முடியும் என்ற விதி மாற்றப்படுகிறது. மற்ற மாநிலங்களைப் போல் தமிழகத்திலும் அனைத்து வகை கார்களையும் பொது போக்குவரத்துக்கு பயன்படுத்தலாம். சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் ஆடம்பர கார்களையும் வாடகைக்குப் பயன்படுத்தி பதிவு செய்யலாம்" என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
நீண்ட நாள் கோரிக்கைகளை, தற்போது தமிழக அரசு நிறைவேற்றியுள்ளதால் ஓட்டுநர்கள், தொழிற்சங்கங்கள் பெருத்த மகிழ்ச்சியை அடைந்துள்ளனர்.. இதன் மூலமாக, தமிழக சுற்றுலாத்துறை மேலும் வளர்ச்சியடையும் என்றும் தமிழக அரசுக்கு வரி வருவாய் மேலும் அதிகரிக்கப்படும் என்றும் நம்பப்படுகிறது.. அதுமட்டுமல்ல, வருடத்துக்கு சுமார் ரூ.100 கோடிக்கு மேலாக வரி வருவாய் தமிழக அரசு மூலமாக கிடைக்க வாய்ப்புள்ளதாம்.