மாறி வரும் உலக அரசியல்!
பிரான்சில் அதிபர் ஆட்சி முறை நடைமுறையில் உள்ளது. 577 இடங்களை கொண்ட அந்நாட்டு பார்லிமென்டிற்கு ஜூன் 30 மற்றும் ஜூலை 7 ம் தேதிகளில் தேர்தல் நடந்தது. மெஜாரிட்டிக்கு 289 இடங்களில் வெற்றி பெற வேண்டும். முதல் கட்டமாக நடந்த தேர்தலில், வலதுசாரி கூட்டணி முன்னிலை பெற்றது. இதனால், அக்கூட்டணி ஆட்சியை கைப்பற்றும் என கணிக்கப்பட்டது. ஆனால், இரண்டாம் கட்ட தேர்தல் முடிந்த பிறகு நிலைமை மாறியது.ஆனால், பிரான்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி, பிரான்ஸ் சோசியலிஸ்ட் கட்சி, பசுமை அரசியல் கட்சி ஆகியன அடங்கிய இடதுசாரி கூட்டணி 180 இடங்களையும், அதிபர் மேக்ரானின் சென்ட்ரிஸ்ட் கட்சி 160 இடங்களையும், வலதுசாரி கூட்டணி 140 இடங்களையும் பெற்றுள்ளன. எந்த கட்சிக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை. இதனையடுத்து அங்கு தொங்கு பார்லிமென்ட் அமைந்து உள்ளது. இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா, பிரேசில், அமெரிக்கா, துவங்கி பல்வேறு நாடுகளில் ஆட்சியை பிடித்த வலதுசாரி கட்சிகள் உலக அரசியல் முடிவுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வந்த நிலையில், தற்போது இடதுசாரிகள் எழுச்சி முகத்தை காட்டத் துவங்கியுள்ளன என்ற விபரம் பலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
பிரிட்டன்
பிரிட்டனில் கடந்த ஜூலை 4-ம் தேதி நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் சுமார் 14 ஆண்டுகளுக்குப் பிறகு இடதுசாரி கட்சியான தொழிலாளர் கட்சி ஆட்சியைப் பிடித்துள்ளது. ரிஷி சுனக் தலைமையிலான பழமைவாத(Conservative) கட்சி பிரிட்டன் தேர்தல் வரலாற்றில் ஒரு மோசமான தோல்வியை சந்தித்து ஆட்சியை இழந்துள்ளது.பிரிட்டன் பொருளாதார திண்டாட்டம் தொடங்கிப் பல பிரச்சினைகளை எதிர்கொள்ளும் நிலையில், தொழிலாளர் கட்சித் தலைவர் ஸ்டார்மர் ஸ்திரத்தன்மையையும் மாற்றத்தையும் கொண்டுவருவதாக உறுதி அளித்து பிரதமர் பொறுப்பை ஏற்றுள்ளார். 6,500 புதிய ஆசிரியர்களை பணியமர்த்துதல், குழந்தைப் பராமரிப்பை விரிவுபடுத்துதல் மற்றும் ஆரம்பப் பள்ளிகளில் இலவச காலை உணவு வழங்குவது, அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்குவது, பள்ளி மாணவர்களின் மனநலனை மேம்படுத்துவது, மாற்றுத்திறனாளிகள் மற்றும் LGBT சமூகத்திற்கான வாக்குறுதிகளை அளித்த இடதுசாரி கட்சியான தொழிலாளர் கட்சி பிரிட்டனில் ஆட்சியை பிடித்துள்ளது. மேலும் காசாவில் பாலஸ்தீனர்களுக்கு எதிராக இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களை நிறுத்தவும், நீண்டகால அமைதியை கொண்டுவர பாலஸ்தீன நாட்டை பிரிட்டன் அங்கீகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தொழிலாளர் கட்சி வாக்குறுதி கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
பிரான்ஸ்
நேற்று(ஜூலை 7) நடந்து முடிந்த பிரான்ஸ் நாடாளுமன்றத் தேர்தல் இறுதி சுற்றில் வலதுசாரிகளை பின்னுக்குத் தள்ளி இடதுசாரி கூட்டணி அதிக இடங்களை வென்றுள்ளது. முதல் சுற்றில் யாரும் எதிர்பார்க்காத வகையில், வலதுசாரி கூட்டணி பெரும்பான்மை வாக்குகளை பெற்ற நிலையில் இறுதி சுற்றில் 3-ம் இடத்திற்கு தள்ளப்பட்டது.இடதுசாரிகள் 182 இடங்களையும், அதிபர் மேக்ரானின் மையவாத கட்சி 163 இடங்களையும், வலதுசாரிகள் 143 இடங்களையும் வென்றுள்ளன. 3 கூட்டணிகளும் எதிர்துருவ அரசியல் நிலைப்பாடுகளை கொண்டுள்ளதால், புதிய ஆட்சியமைப்பதில் காலதாமதம் ஆகலாம் என கூறப்படுகிறது.மூன்று எதிரெதிர் கூட்டணிகள் சமரசம் செய்து ஆட்சியமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதால், பிரான்ஸ் அரசியலில் உறுதியற்ற தன்மை ஏற்பட்டுள்ளது. அதிபர் மேக்ரானின் பதவி காலம் 2027-ம் ஆண்டு வரை உள்ள நிலையில், தற்போது யாரை ஆட்சியமைக்க அழைக்க போகிறார் என்பதும் யாரை பிரதமாராக்க போகிறார் என்பதும் முக்கியத்துவம் பெறுகிறது.தற்போது அதிக இடங்களை வென்றுள்ள பிரான்ஸ் இடதுசாரி கூட்டணி பாலஸ்தீன நாட்டை அங்கீகரிக்கும் என்று வாக்குறுதி அளித்திருந்தது.
இந்தியா
நம் இந்தியாவில் சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் வலதுசாரி கட்சியான பாஜக 3-வது முறையாக அதிக இடங்களை வென்று ஆட்சியை அமைத்தாலும், மக்களவையில் அதன் பலம் குறிப்பிடத்தக்க வகையில் சரிந்துள்ளது.கடந்த 2 முறை பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி செய்த பாஜக தன்னிச்சையான முடிவுகளை எடுத்து பல்வேறு சர்ச்சைக்குரிய சட்டங்களை நிறைவேற்றி இருந்தது.ஆனால், தற்போதைய ஆட்சி காலத்தில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி பெரும் பலத்துடன் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துள்ளதால், பாஜக அரசுக்கு கடும் சவால்களை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஈரான்
கடந்த ஜூலை 6-ம் தேதி நடந்த ஈரான் அதிபர் தேர்தலில் பழமைவாதிகளை வீழ்த்தி சீர்திருத்தவாதிகள் கூட்டணி வெற்றி கண்டுள்ளது.. ஈரான் அதிபராக பதவி வகித்து வந்த பழமைவாதிகள் கூட்டணியை சேர்ந்த இப்ராஹிம் ரைசி கடந்த ஜூன் 19-ம் தேதி நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார்.இதையடுத்து, புதிய அதிபரை தேர்ந்தெடுக்க நேற்று இறுதி கட்ட வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், 50 சதவீதத்திற்கும் மேல் வாக்குகளை பெற்று மசூத் பெசெஸ்கியன் வெற்றி அடைந்துள்ளார்.
தற்போது அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள மசூத் பெசெஸ்கியன் இந்திய ஆதரவு கொண்டவராகவும் அறியப்படுகிறார். மேலும் அந்நாட்டில் பெண்களுக்கான கட்டாய ஹிஜாப் அணியும் சட்டத்திற்கு எதிராகவும் கருத்துக்களை பதிவு செய்து வந்துள்ளார்.
மெக்சிகோ
மெக்சிகோவில் கடந்த ஜூன் 2-ம் தேதி நடந்த அதிபர் தேர்தலில், 200 ஆண்டு கால வரலாற்றில் முதல் முறையாக ஒரு பெண் அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இடதுசாரி கட்சியின் வேட்பாளரான கிளாடியா ஷீன்பாம்(61), வருகிற அக்டோபர் 1-ம் தேதி முதல் அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு அந்நாட்டின் அதிபராக பதவி வகிக்க உள்ளார். மெக்சிகோ நகர மேயராக பணியாற்றியுள்ள இவர், மிகச் சிறந்த சுற்றுச்சூழல் விஞ்ஞானி. பிரசாரத்தின்போது கடும் போட்டி நிலவிய நிலையில், 58 சதவீத ஓட்டுகளுடன் ஷீன்பாம் வெற்றி பெற்றுள்ளார்.
அமெரிக்கா
வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தலை சந்திக்க உள்ள அமெரிக்கா, மீண்டும் ஜோ பைடன் மற்றும் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் வேட்பாளர்களாக களம் காண்கின்றனர். தற்போதைய ஜோ பைடன் தலைமையிலான ஜனநாயக கட்சி ஆட்சியில் ஆப்கனிஸ்தான் துவங்கி இஸ்ரேல்-ஹமாஸ் போர் வரை பல்வேறு சர்வதேச பிரச்சனைகள் மீதான கொள்கை முடிவுகளால் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தான் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இஸ்ரேல்-ஹமாஸ், உக்ரைன்-ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டுவேன் என கூறியுள்ள வலதுசாரி கட்சியை சேர்ந்த டிரம்ப், பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பது குறித்து பரிசீலனை செய்யப்படும் என்று கூறியுள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது.