தமிழகம் முழுவதும் ஓலா, உபேர் சேவையில் இயங்கும் ஆட்டோ, கார்கள் ஸ்ட்ரைக்!
பெரும்பாலானோர்கள் தவிர்க்க இயலாமல் போய் விட்ட ஓலா, உபேர் செயலி மூலம் கார், ஆட்டோக்கள் புக் செய்து பயணம் செய்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பஸ், ரெயில் நிலையங்கள், விமான நிலையம் செல்வோர் இந்த செயலிகளை பயன்படுத்தி குறித்த நேரத்திற்கு கார், ஆட்டோ தேவை என்று புக் செய்துவிட்டால் அவர்கள் இருக்கும் இடத்திற்கே வாகனங்கள் வந்து விடுவதால் பொதுமக்கள் எளிதாக பயணத்தை மேற்கொள்ள முடிகிறது. சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இந்த செயலியை பயன்படுத்தி மருத்துவமனை உள்ளிட்ட அவசர பயணத்திற்கு புக்கிங் செய்வதால் குறித்த நேரத்திற்கு செல்ல முடிகிறது. இந்த நிலையில் ஓலா, உபேர் டிரைவர்கள் இன்று முதல் 3 நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.வாடகை வாகனங்களை முறைப்படுத்த வேண்டும், பைக் டாக்சியை தடை செய்ய வேண்டும், மீட்டர் கட்டணம் நிர்ணயிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஆட்டோ, கார்களை ஓட்டாமல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
சென்னையைப் பொறுத்தவரை ஆட்டோ, கால் டாக்சி, போர்ட்டர் சரக்கு வாகனங்கள் என 70 ஆயிரம் வாகனங்கள் ஓடுகின்றன. தமிழகம் முழுவதும் சுமார் 1 லட்சம் வாகன உரிமையாளர்கள், டிரைவர்கள் இப்போராட்டத்தில் ஈடுபட்டதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளானார்கள். இதனால் ஆட்டோக்களுக்கு இன்று தேவை அதிகரித்தது. வழக்கமாக கூடுதல் கட்டணம் வசூலிப்பதில் தீவிரமாக இருக்கும் ஆட்டோ டிரைவர்கள் இன்று அதை விட அதிகமாக வசூலித்தனர்.
கோயம்பேடு, பஸ் நிலையம், சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் ரெயில் நிலையங்களில் ஆட்டோக்களுக்கு கிராக்கி கூடியது. பயணிகள்-டிரைவர்கள் இடையே கட்டண பேரம் நடந்தது. இதற்கிடையே இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட ஓலா, உபேர் போர்ட்டர் டிரைவர்கள் சின்னமலையில் உள்ள சரக்கு போக்குவரத்து அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். சாலை போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனம், சி.ஐ.டி.யு., தொழிற்சங்கம், உரிமைக்குரல், உரிமை கரங்கள், சிகரம், அக்னி சிறகுகள், தமிழக கால் டாக்சி மற்றும் அனைத்து வாகன ஓட்டுனர்கள் சங்கம் உள்ளிட்ட 14 சங்கங்கள் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.
இது குறித்து, இன்று சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வாடகை கார் ஓட்டுநர் தொழிற்சங்க நிர்வாகிகள் கூறுகையில், ஓலா, ஊபர் போன்ற வாடகை கார் நிறுவனங்களின் கீழ் வேலை செய்யும் ஓட்டுநர்கள் ஏதேனும் கேள்வி கேட்டால் அவர்கள் கணக்கை சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனங்கள் நிறுத்தி விடுகின்றனர். அந்த தனியார் நிறுவனங்கள் அதிக அளவில் கமிஷன் வசூல் செய்கின்றனர். ஒவ்வொரு காருக்கும் ஒவ்வொரு முறையில் கமிஷன் வசூல் செய்கிறார்கள். இதனை அரசு தலையிட்டு ஒழுங்குபடுத்த வேண்டும். 2019 மோட்டார் வாகன சட்டத்தை தமிழக அரசு முறையாக அமல்படுத்த வேண்டும்.
இந்த வாடகை கார் செயலியை அரசே நிர்ணயம் செய்ய வேண்டும். சொந்த பயன்பட்டுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டிய இருசக்கர வாகனத்தை வாடகைக்கு ஓட்டுவதற்கு அனுமதிப்பது தவறு. இதனை தமிழக அமைச்சர் அவ்வபோது கூறினாலும், அவர்களை தடுக்க முறையான நடவடிக்கை எடுக்கவில்லை. இது தொடர்பாக பல போராட்டங்கள் நடத்தினாலும் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
வாடகை கார் மூலம் நாங்கள் 100 ரூபாய் சம்பாதித்தால் 30 ரூபாய் அந்த தனியார் நிறுவனங்களுக்கு சென்று விடுகிறது. 10 ரூபாய் தான் எங்களுக்கு வருகிறது. இதனை அரசே எடுத்து நடத்தினால் அரசுக்கு நல்ல வருமானம் கிடைக்கும். கிடைக்கும் வருவாயில், ஓட்டுனர்களுக்கு பி.எப் , இஎஸ்ஐ போன்ற சேவைகளையும் வழங்கலாம். அதே சமயம் இரு சக்கர வாகன வாடகையில் கார் போல லக்கேஜ் சார்ஜ் வரை வாங்குகின்றனர்~ என பல்வேறு குற்றசாட்டுகளை வாடகை கார் ஓட்டுநர் தொழிற்சங்க நிர்வாகிகள் கூறினர்
நாளை மதுரை, திருச்சி, கோவையில் உள்ள இணை போக்குவரத்து ஆணையர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்த உள்ளோம். நாளை மறுநாள் சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் விளையாட்டு அரங்கத்தில் பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.