‘அக்பரும் சீதாவும் ஒரே இடத்திலா? - நெவர்’ - விஷ்வ இந்து பரிஷத் வழக்கு!
மேற்கு வங்க மாநிலத்தில் சிலிகுரி உயிரியல் பூங்கா ஒன்று இயங்கி வருகிறது. இந்த பூங்காவிற்கு, கடந்த 12 ஆம் தேதி திரிபுரா மாநிலத்தில் உள்ள செபாஜிலா உயிரியல் பூங்காவில் இருந்து இரண்டு சிங்கங்கள் கொண்டு வரப்பட்டன. அதில் 7 வயதுள்ள ஆண் சிங்கத்திற்கு ‘அக்பர்’ என்றும் 6 வயதுள்ள பெண் சிங்கத்திற்கு ‘சீதா’ என்றும் முன்னரே பெயரிடப்பட்டிருக்கிறது. இந்த இரண்டு சிங்கங்களையும் ஒரே கூண்டில் அடைக்க உயிரியல் பூங்கா நிர்வாகம் முடிவு செய்ததாக சமீபத்தில் தகவல் வெளியானது. இந்த நிலையில், ‘சீதா’ மற்றும் ‘அக்பர்’ சிங்கத்தை ஒரே இடத்தில் அடைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கு வங்க மாநில விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் மேற்கு வங்க உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை அளித்துள்ளனர்.
முன்னதாக இரு சிங்கங்களும் ஏற்கனவே இருந்த பெயரில்தான் அழைக்கப்பட்டு வருகின்றன. இவற்றுக்கு பெயர் மாற்றம் செய்யப்படவில்லை என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். அக்பர் என்பது இந்தியாவின் புகழ்பெற்ற முகலாய மன்னர்களில் ஒருவரது பெயராகும். இதேபோன்று இந்த மதத்தில் இந்துக்கள் புனிதமாக கருதும் ராமரின் மனைவியின் பெயர் சீதா என்பதாகும். இந்நிலையில் இவ்விரு சிங்கங்களையும் ஒரே கூண்டில் அடைக்க விஷ்வ இந்து பரிசத் அமைப்பு எதிர்ப்பு தெரிவித்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
அந்த மனுவில், ‘முகலாய மன்னரின் பெயரான அக்பர் என்ற பெயரையும் ராமாயணத்தில் வரும் சீதாவின் பெயரையும் சிங்கங்களுக்கு வைத்து ஒரே இடத்தில் வைக்கத் திட்டமிட்டுள்ளனர். இந்து மத வழக்கங்களில் சீதா தெய்வமாக கொண்டாடப்படுகிறார். எனவே, அக்பர் உடன் சீதாவை தங்க வைப்பது இந்து மதத்தை அவமதிக்கும் செயல். அதனால், அந்த சிங்கங்களின் பெயர் மாற்றப்பட வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் வருகிற 20 ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.