அஜித்பவார் அணியே உண்மையான தேசியவாத காங்கிரஸ் கட்சி' - தேர்தல் கமிஷன் அறிவிப்பு!.
மகாராஷ்ட்ராவில் அஜித் பவார் தலைமையிலான அணிதான் உண்மையான தேசியவாத காங்கிரஸ் என்று தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. கட்சியின் பெயர் மற்றும் சின்னம் ஆகிய இரண்டும் அஜித் பவார் அணிக்குச் செல்கிறது. மேலும் சரத் பவார் அணி தங்களது அணிக்கு என்ன பெயர் வேண்டும் என்பது குறித்தும், என்ன சின்னம் வேண்டும் என்பது குறித்தும் நாளை பிப் 7-ம் தேதி மாலை 3 மணிக்குள் தெரிவிக்கும்படி தேர்தல் கமிஷன் கெடு விதித்திருக்கிறது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா மற்றும் பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இதில் கடந்த ஜூலை மாதம் 2 ஆம் தேதி தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அஜித் பவார் மற்றும் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 8 பேர், பா.ஜ.க மற்றும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அணியில் இணைந்தனர். அதனைத் தொடர்ந்து, மகாராஷ்டிரா துணை முதலமைச்சராக அஜித் பவார் பதவி ஏற்றுக் கொண்டார்.
இந்நிலையில் தேசியவாத காங்கிரசில் பிளவு ஏற்பட்ட நிலையில் தங்களுக்கே கட்சி சொந்தம் எனத் தேர்தல் ஆணையத்தில் சரத்பவார், அஜித் பவார் தரப்பில் முறையிடப்பட்டது. கடந்த சில நாள்களுக்கு முன்புகூட சரத் பவாரும், அவரின் மகள் சுப்ரியா சுலேயும் தேர்தல் கமிஷனில் ஆஜராகி, தங்களது தரப்பு விளக்கத்தை எடுத்துக்கூறினர்.
தேர்தல் கமிஷன் இரு தரப்பினரிடமும் கடந்த 6 மாதங்களில் 10 முறை விசாரணை நடத்தியது. இந்த மாதம் 27-ம் தேதி மகாராஷ்டிராவில் மாநிலங்களவைத் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், இன்று தேசியவாத காங்கிரஸ் விவகாரத்தில் தேர்தல் கமிஷன் தனது முடிவை அறிவித்திருக்கிறது. அதன்படி அஜித் பவார் தலைமையிலான கட்சியே உண்மையான தேசியவாத காங்கிரஸ் எனத் தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. அதேபோல் கட்சியின் கடிகாரம் சின்னத்தை அஜித்பவார் பயன்படுத்திக் கொள்ளவும் தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.
சிவசேனாவிலிருந்து பிரிந்து சென்ற ஷிண்டே பாஜக கூட்டணியில் சேர்ந்த பின் ஷிண்டே அணிக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது. அதேபோல் தேசியவாத காங்கிரசில் இருந்து பிரிந்து சென்று பாஜக கூட்டணியில் சேர்ந்த அஜித் பவாருக்கு தற்போது அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. கட்சி நிர்வாகிகள் மற்றும் எம்எல்ஏக்களின் ஆதரவு அஜித் பவாருக்கு இருப்பதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. சரத்பவார் அணி தங்கள் கட்சிக்கு புதிய பெயரை வைத்துக் கொள்ளலாம் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அஜித் பவார் அணிக்கு அதிகப்படியான எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு இருப்பதை சுட்டிக்காட்டி, இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகவும், தேசியவாத காங்கிரஸ் கட்சியில் தேர்தல் நடத்தப்படாது குறித்தும், கட்சியை தனியார் நிறுவனம் போன்று நடத்தியதாகவும் தேர்தல் கமிஷன் குற்றம்சாட்டியிருக்கிறது. தேர்தல் கமிஷனின் இந்த அறிவிப்பு அஜித் பவார் அணிக்கு மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மாநிலம் முழுவதும் அஜித் பவார் ஆதரவாளர்கள் தங்களது மகிழ்ச்சியைக் கொண்டாடி வருகின்றனர்.