சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு உதவும் வகையில் வனத்துறை அறிமுகப்படுத்திய ‘அய்யன்’ ஆப்.!
பூலோக மக்களுக்காக கலியுக தெய்வமாம் ஐயன் ஐயப்ப சுவாமி நைஷ்டீக ப்ரம்மசர்ய யோகத்தில் ஆழ்ந்து தவம் புரியும் அற்புத திருத்தலம். சபரிமலை. ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் பிறந்ததும் விரதம் இருந்து இருமுடி தாங்கி ஐயப்பனை சுவாமி தரிசனம் செய்ய இந்த சபரிமலையில் பக்தர் லட்சகணக்கில் வருவார்கள். சபரிமலைக்கு புனித யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களை வனவிலங்குகளிடமிருந்து பாதுகாக்கும் நோக்கத்துடன் அய்யன் என்ற செயலியை கேரள வனத்துறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சபரிமலைக்கு செல்லும் முக்கிய வழித்தடங்களில் கிடைக்கும் பல்வேறு சேவைகளை ஆப் மூலம் தெரிந்து கொள்ளலாம். ஆப்லைனில் கூட செயல்படும் வகையில் இந்த ஆப் வடிவமைக்கப்பட்டுள்ளது. சன்னிதானம் செல்லும் தூரம், மருத்துவ அவசர சிகிச்சை பிரிவு, இலவச குடிநீர் விநியோக மையங்கள், யானை படை பிரிவு ( Elephant Squad) தகவல் போன்ற பல்வேறு தகவல்கள் இந்த செயலி மூலம் தெரிந்து கொள்ள முடியும்.
இந்த செயலியின் சிறப்பு அம்சங்கள் இதோ:
இதில் அவசர மருத்துவ சிகிச்சைப் பிரிவுகள், தங்குமிடம், பொதுக் கழிப்பறைகள் போன்ற விவரங்கள் பெருவழி (எருமேலி - பம்பா - சன்னிதானம்), சிறுவழி, புல்மேடு என ஒவ்வொரு வழித்தடத்திலும் இருந்தும் சன்னிதானம் வரையிலான தூரம், இலவச குடிநீர் விநியகிக்கும் நிலையங்கள் என சபரிமலை யாத்திரையின் பல்வேறு அம்சங்களை பயனர்கள் இதில் பெறலாம்.
கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து பயனர்கள் இந்த செயலியை டவுன்லோட் செய்து பயன்படுத்தலாம். தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு மற்றும் ஆங்கில மொழிகளில் இந்த செயலியை பயனர்கள் பயன்படுத்த முடியும். காட்டு வழிப்பாதையில் உள்ள க்யூஆர் கோடினை ஸ்கேன் செய்வதன் மூலமும் பயனர்கள் இதனை டவுன்லோட் செய்யலாம்.
இந்த செயலியை ஆன்லைன் மற்றும் ஆப்லைன் மோடில் பயனர்கள் பயன்படுத்தலாம்.
இதில் கோயில் நடை திறந்திருக்கும் நேரம், கோயிலுக்கு செல்லும் வழித்தடங்களில் பக்தர்கள் யாத்திரை மேற்கொள்ள அனுமதிக்கப்படும் நேரம் போன்ற தகவல் கிடைக்கிறது. பயனர்கள் தாங்கள் பயன்படுத்தும் மொபைல் எண்ணை கொண்டு லாக்-இன் செய்யலாம்.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து சுவாமி ஐயப்பனை தரிசிக்க தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்த வண்ணம் உள்ளனர். பக்தர்களின் நலன் கருதி தரிசன நேரமும் கூட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.