For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

சென்னை வாசிகளுக்கு பெருந்துயரளித்த வான் சாகச நிகழ்ச்சி!

07:41 AM Oct 07, 2024 IST | admin
சென்னை வாசிகளுக்கு பெருந்துயரளித்த வான் சாகச நிகழ்ச்சி
Advertisement

ம் இந்திய விமானப் படையின் 92 ஆண்டு நிறைவை கொண்டாடும் விதமாக, சென்னையில் மிக பிரம்மாண்டமான வான் சாகச நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. மெரினா கடற்கரையில் காலை 11 மணிக்கு தொடங்கிய நிகழ்ச்சி மதியம் 1 மணிவரை நடந்தது. இதையொட்டி, காலை 8 மணி முதலே மெரினாவில் மக்கள் குவியத் தொடங்கினர். சென்னை மாநகர பேருந்துகள், புறநகர் மின்சார ரயில்கள், பறக்கும் ரயில் (எம்ஆர்டிஎஸ்), மெட்ரோ ரயில்களில் கூட்டம் அலைமோதியது. மெரினா பகுதியில் கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்டது. அதிலும் இந்த சாகச நிகழ்ச்சியை காண மெரினா கடற்கரையில் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் குவிந்தனர். இதனால் மெரினா கடற்கரையே திக்குமுக்காடியது. இந்த நிகழ்ச்சியை பார்க்க சென்ற 5 பேர் வாந்தி, மயக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் உயிரிழந்தனர். மேலும், 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.அதேவேளை, விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க சென்ற லட்சக்கணக்கானோர் பெரும் அவதியை சந்தித்தனர். குடிநீர், உணவு, கழிப்பிடம், போக்குவரத்து உள்பட அடிப்படை வசதிகள் போதிய அளவில் செய்யப்படவில்லை என்று பொதுமக்கள் குற்றஞ்சாட்டினர். கடுமையான வெயிலாலும் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். மக்கள் கூட்டத்தை கணிக்க தவறியது, போதிய திட்டமிடல், அடிப்படை வசதிகளை குறைந்த அளவில் மேற்கொண்டது உள்பட பல்வேறு காரணங்களால் நிகழ்ச்சியை பார்க்க வந்த மக்கள் பெரும் அவதியடைந்தனர்.

Advertisement

சென்னையில் விடுமுறை நாளை பெரும்பாலானோர் கடற்கரைகளில் கழிப்பது வழக்கம். அந்த வகையில் இன்று ஞாயிற்றுகிழமை விடுமுறை நாள் என்பதாலும், விமான சாகச நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாலும் மெரினா கடற்கரைக்கு சென்றனர். இதனால் சென்னை மெரினாவில் மக்கள் கூட்டம் குவிந்தது.மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சியை காண காலை முதலே ரெயில்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக, வேளச்சேரி - சிந்தாதிரிப்பேட்டை இடையேயான ரெயில்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. அதேபோல், தாம்பரம் - சென்னை கடற்கரை இடையேயான ரெயில்களிலும் அதிக அளவில் மக்கள் பயணித்தனர். இதனால் பெரும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

Advertisement

ஞாயிற்றுகிழமை அட்டவணையில் இயங்கிய ரெயில்கள்:

விமான சாகச நிகழ்ச்சியை காண அதிக அளவில் மக்கள் வந்த நிலையில் ரெயில்கள் மிகவும் குறைவான அளவிலேயே ஞாயிற்றுகிழமை அட்டவணை படி இயக்கப்பட்டது. வேளச்சேரி - சிந்தாதிரிப்பேட்டை இடையே காலை அரைமணி நேரத்திற்கு ஒரு ரெயில் என்ற நிலையிலேயே குறைவான எண்ணிக்கையிலேயே ரெயில்கள் இயக்கப்பட்டன. அதேபோல், தாம்பரம் - சென்னை கடற்கரை இடையேயான ரெயில்களும் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைபடியே இயங்கின. இதனால், மக்கள் கூட்டம் அலை மோதியது

மெட்ரோ ரெயில் சேவை:

மெட்ரோ ரெயில்களிலும் கூட்டம் அலை மோதியது. ஆனால், மெட்ரோ ரெயில்களும் குறைவான எண்ணிக்கையிலேயே இயக்கப்பட்டன.

பஸ்கள்:

மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டபோதும் அரசு பஸ்களும் குறைவான எண்ணிக்கையிலேயே இயக்கப்பட்டதால் மக்கள் அவதிக்குள்ளாகினர்.

போதிய அளவில் செய்யப்படாத குடிநீர், கழிப்பிடம், இதர அடிப்படை வசதிகள்:

விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்ற மெரினா கடற்கரையில் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் குவிந்த நிலையில் குடிநீர், கழிப்பிடம், இதர அடிப்படை வசதிகள் போதிய அளவில் செய்யப்படவில்லை என்று மக்கள் குற்றஞ்சாட்டினர். விமான சாகச நிகழ்ச்சிகள் 11 மணிக்கு தொடங்கிய நிலையில் கடுமையான வெயில் காரணமாக பொதுமக்கள் பலரும், குடிநீர், கழிப்பிட வசதி, இதர வசதிகள் போதிய அளவில் இல்லாததால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகினர்.

கடுமையான வெயில்:

சாகச நிகழ்ச்சி காலை 11 மணிக்கு தொடங்கி மதியம் 1 மணியளவில் நிறைவடைந்த நிலையில் அந்த சமயத்தில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது.

கூட்ட நெரிசல்:

விமான சாகச நிகழ்ச்சியை காண 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வந்த நிலையில் கடற்கரையில் கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

100க்கும் மேற்பட்டோர் மயக்கம்:

கடுமையான வெயில், தாகம், கூட்ட நெரிசல் உள்பட பல்வேறு காரணங்களால் நிகழ்ச்சியை காண வந்த 100க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்தனர். இதன் காரணமாக அவர்களில் பெரும்பாலானோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

5 பேர் பலி:

விமான சாகச நிகழ்ச்சியை காண வந்தவர்களில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். வாந்தி, மயக்கம், உடல் சோர்வு உள்பட பல்வேறு காரணங்களால் நிகழ்ச்சியை காண வந்த 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

நிகழ்ச்சி முடிந்து வீடு திரும்பியபோதும் கடும் அவதி:

விமான சாகச நிகழ்ச்சி முடிந்து மக்கள் வீடு திரும்பியபோதும் கடும் அவதியடைந்தனர். பொதுமக்கள் பலரும் மெரினா கடற்கரையில் இருந்து சென்னை கோட்டை ரெயில் நிலையம் வரை நடந்தே சென்ற சூழ்நிலையும் உருவானது. அதேபோல், கடற்கரையில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் புறப்பட்டதால் காமராஜர் சாலையே திக்குமுக்காடியது

மக்கள் கூட்டத்தை கணிக்க தவறியது:

விமான சாகச நிகழ்ச்சியை காண 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வந்த நிலையில் பெரும்பாலான மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்தனர். மக்கள் கூட்டத்தை கணிக்க தவறியதால் அடிப்படை வசதி உள்பட பல்வேறு வசதிகள் மேற்கொள்ளப்படவில்லை என்று மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். போதிய திட்டமிடலின்மையால் விமான சாகச நிகழ்ச்சியை காணவந்து பெரும் பாதிப்பை சந்தித்ததாக மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இனிவரும் நாட்களில் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும்போது மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், முன்னேற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்பதுடன் நேற்றைய குளறுபடிகளுக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும் பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

Tags :
Advertisement