ஐந்தாம் வேதம் -வெப் சிரீஸ் = விமர்சனம்!
’மர்ம தேசம்’ என்ற படு ஹிட் ஆனா தொலைக்காட்சி தொடர் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் நாகா, ஐந்தாம் வேதம் என்ற தனது கற்பனைக்கு புராணம் மற்றும் அறிவியல் மூலம் உயிரோட்டம் அளிக்கும் வகையில் அனைத்து அத்தியாயங்களையும் மிக சுவாரஸ்யமாக இயக்கியிருக்கிறார். படத்தில் பயணிக்கும் கதாபாத்திரங்கள் அனைவரையும் சரியான முறையி பயன்படுத்தியிருப்பதோடு அவர்கள் படம் முழுவதும் வருவது போல் காட்சிகளை வடிவமைத்திருப்பவர், தொடரின் மொத்த அத்தியாயங்களையும் எந்த வித கவனச்சிதறல் இல்லாமல் ரசிகர்கள் பார்க்கும்படி சுவாரஸ்யமாக இயக்கியிருக்கிறார். நான்கு வேதங்களை நாம் அனைவரும் அறிவோம். அதென்ன ஐந்தாம் வேதம். என்று யோசிக்க வைத்து புராணக் கதையோடு, தற்போதையக் காலக்கட்டத்தில் மனித இனத்திற்கே பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்து வரும் ’செயற்கை நுண்ணறிவு’ (Artificial Intelligence) தொழில்நுட்பத்தை மிக நுட்பமாக இணைத்து, இப்படியும் நடக்குமா..? என்று நம்மை அதிர்ச்சியடைய வைக்கிறார்.
அதாவது பிரம்மாவிற்கு மொத்தம் ஐந்து தலைகள் அதில் ஒரு தலையை கோபத்தில் சிவன் கொய்ததாக புராணம் கூறுகிறது. கொய்யப்பட்ட பிரம்மனின் ஐந்தாவது தலை அய்யாங்காரபுரத்தில் உள்ள சிவன் கோயில் ஒன்றில் வைக்கப்பட்டு இருப்பதாக ஐதீகம் கூறுகிறது. பிரம்மாவின் நான்கு தலைகள் நான்கு வேதங்களை குறிக்கிறது. கொய்யப்பட்ட ஐந்தாவது தலை தான் ஐந்தாம் வேதம் என இந்த வெப் சீரிசின் கதை அமைக்கப்பட்டிருக்கிறது. சிவன் கோயிலில் மறைந்திருக்கும் அந்த பிரம்மாவின் தலையை அதாவது ஐந்தாம் வேதத்தை கண்டுபிடித்து அபகரிக்க ஒரு சதி நடக்கிறது. இதற்கிடையில்j பரம்பரையாக சிவன் கோயிலில் பூஜை செய்யும் பூசாரி குடும்பத்தில் கிடைக்கும் ஒரு மர்ம பெட்டி மூலம் ஐந்தாம் வேதம் வெளிப்படும் என்ற தகவலும் வெளியாகிறது. இதன் பின்னர் ஐந்தாம் வேதம் வெளிப்பட்டதா?, அந்த வேதத்தில் புதைந்திருக்கும் ரகசியம் என்ன?, அதை அபகரிக்கும் சதி என்னவெல்லாம் நடக்கிறது? என்பதை அமானுஷ்ய காட்சிகளுடன் வழங்கி இருப்பதே இத்தொடரின் கதை.
தொடரின் மெயின் ரோலில் நடித்திருக்கும் சாய் தன்ஷிகா, சந்தோஷ் பிரதாப், விவேக் ராஜகோபால், தேவதர்ஷினி, கிரிஷ் குரூப், ஒய்.ஜி.மகேந்திரன், பொன்வண்ணன், மேத்தீவ் வர்கீஸ் உள்ளிட்ட அனைத்து நடிகர்களும் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வு. குறிப்பாக, ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்களாக நடித்த நால்வரும் கண்களாலே தனது மிரட்டலை வெளிப்படுத்தியிருந்தனர்.சாமியாராக தோன்றிய நடன இயக்குனர் ராம்ஜியின் நடிப்பும் பாராட்டும்படியாக இருந்தது.
கேமராமேன் ஸ்ரீனிவாசன் தேவராஜன், மர்மம் மற்றும் திகில் காட்சிகளை பகல் நேரத்தில் படமாக்கினாலும் அதன் மூலம் பார்வையாளர்களை பதற்றமடைய செய்து விடுகிறார்.ரேவாவின் பின்னணி இசையில் ஐந்தாம் வேதத்தின் தேடல் காட்சிகள் அனைத்தும் திக்..திக்...நிமிடங்களாக பயணிக்க வைக்கிறது. எடிட்டர் ரஜீஷ்.எம்.ஆர், புராணம் மற்றும் அறிவியல் இரண்டோடு ஒன்றை ஒற்றுமைப்படுத்தும் கதையையும், அதைச் சார்ந்து நடக்கும் சம்பவங்களையும் பார்வையாளர்களுக்கு தெளிவாக புரியும்படி காட்சிகளை தொகுத்திருப்பதோடு, ஒவ்வொரு அத்தியாயம் முடியும் போது, அடுத்த அத்தியாயம் மீது ஆர்வம் ஏற்படும் வகையில் படத்தொகுப்பு செய்து அடடே சொல்ல வைத்திருக்கிறார்.
எல்லாவற்றையும் தாண்டி ஆர்ட் டைரக்டர் ஏ.அமரனின் பணி படத்தை தாங்கி பிடித்திருக்கிறது. கோயிலில் ஏகப்பட்ட காட்சிகளை படமாக்க இருப்பதை அறிந்து அங்கிருக்கும் பொருட்களை வடிவமைத்த விதம், பாதள அறை, வீடுகளில் இருக்கும் ரகசிய வழி உள்ளிட்ட அனைத்தையும் தத்ரூபமாக வடிவமைத்திருக்கிறார்.
எட்டு எபிசோடுகளுடன் ஐந்தாம் வேதம் முடிந்துவிடுமா என்று பார்த்தால் அது இன்னும் இரண்டாவது சீசன், மூன்றாவது சீசன் என்று தொடரும்படியாக அமைத்து அதற்கான ஆர்வத்தையும் தூண்டி இருக்கிறார் இயக்குனர் நாகா..!ஆனால் முதல் இரண்டு அத்தியாயங்கள் நம்மை சீட் நுணியில் உட்கார வைப்பது போல், அடுத்தடுத்த சில அத்தியாயங்கள் செய்யவில்லை . என்றாலும் இத்தொடருக்காக இயக்குநர் மேற்கொண்டிருக்கும் ஆய்வுகள், அதனை திரை மொழியில் சொன்ன விதம் அனைத்தும் தொடரில் இருக்கும் குறைகளை மறந்து நம்மை ரசிக்க வைக்கிறது. அதே சமயம், பல இடங்களில் கதாபாத்திரங்கள் அதிகம் பேசுவது கொஞ்சம் அயர்ச்சி அளிக்கிறது.
மொத்ததில் இது அபிராமி ராமநாதன், நல்லம்மை. ராமநாதன் தயாரிப்பு..