அகத்தியா - விமர்சனம்!
சற்றேறக்குறைய எழுபது ஆண்டுக்காலம் நம் இந்தியக்குழந்தைகளின் கனவை சுமந்த சிறுவர் இதழ் அம்புலி மாமா. மூன்று தலைமுறைகள் அதை ரசித்து வாசித்து வளர்ந்துள்ளனர். அதைச்சார்ந்த இனிய நினைவுகள் இந்தியாவில் இன்றைக்கும் எங்கும் உண்டு. அத்தகைய ஓர் இதழ் ஐரோப்பாவிலோ அமெரிக்காவிலோ வந்திருந்தால் அது இப்போது மிகப்பெரிய ’கருத்துமுதலீடு’ ஆகி காப்புரிமைகள், திரைவடிவங்கள் வழியாக கோடிகளை அறுவடை செய்துகொண்டிருக்கும். ஆனால் அம்புலிமாமா ஆதரவில்லாமல் நின்றுவிட்டது. ஆனால் அதன் வாசத்தைப் பிடித்து நம்மில் 90% நம்பும் ஆன்மிகம் தொடங்கி ஹாரர், அட்வெஞ்சர்,த்ரில்லர், பேண்டஸி, முன்னோர் வைத்தியமான சித்தா, ட்ராமா என்று பல மசாலாக்களை மிகச் சரியாக கலந்து எல்லா தரப்பினரையும் கவர வந்திருப்பதே ' அகத்தியா'!
அதாவது கனவுத் தொழிற்சாலை என்றழைக்கப்படும் சினிமாவில் ஆர்ட் டைரக்டராக வலம் வரும் நாயகன் ஜீவா புதுச்சேரியில் படம் ஒன்றுக்காக தன் கையில் உள்ள லட்சங்களை செலவு செய்து ஸ்கேரி ஹவுஸ் என்ற ஒரு பிரமாண்ட செட் அமைக்கிறார். ஆனால் திடீரென்று புரொடியூஸர் படப்பிடிப்பை கேன்சல் செய்து விடுவதால் ஜீவாவுக்கு நஷ்டம் ஏற்படுகிறது.அந்த அரங்கம் போட வாங்கிய கடனை அடைப்பது எப்படி என்று தெரியாமல் ஜீவா விழி பிதுங்கி தன்னையே வெறுக்கத் தொடங்குகிறார். அச்சூழலில், அந்த இடத்தில் போடப்பட்ட அரங்கத்தில் மேலும் சில திகில் விஷயங்களைச் சேர்ந்து ஒரு ரியல்‘ஸ்கேரி ஹவுஸ்’ ஆக்கி, டிக்கெட் போட்டு ’ஷோ’ நடத்தலாம் என்கிறார் அகத்தியாவின் காதலி வீணா (ராஷி கன்னா). அதனை உடனே ஏற்று அவ்வரங்கை பொதுமக்கள் பார்வைக்காக அனுமதிக்கின்றனர். இந்நிலையில் அந்த அரங்கிற்குள் பல்வேறு அமானுஷ்யங்கள் நடக்கின்றன. மேலும் அங்கிருக்கும் வெள்ளைக்கார நிஜப் பேய் எட்வின், ஜீவாவை துரத்தி அடிக்கிறது. இதை அடுத்து அந்த பங்களாவில் ஏதோ ஒரு மர்மம் இருப்பதையும், தனக்கும் அந்த பங்களாவுக்கும் ஏதோ ஒரு தொடர்பு இருப்பதையும் அறிந்துக் கொள்ளும் ஜீவா, அதன் முழு பின்னணியை தெரிந்துக்கொள்ள முயற்சிக்கிறார்.அதை அடுத்து நடப்பதை மேலே சொன்ன அம்புலிமாமா இதழ் பாணியில் திகில் கலந்த ஃபேண்டஸியாக மட்டும் இன்றி சித்தா மருத்துவம் மற்றும் சித்தர்களின் முக்கியத்துவதோடு சொல்வதே ‘அகத்தியா’ படக் கதை.
நாயகனாக வரும் ஜீவா லவ் செய்வது, அடிதடியில் மாஸ் காட்டுவது என்று வழக்கமாக ட்ராவல் செய்யும் ரோல் இல்லை என்றாலும், கண்ணுக்கு தெரியாமல் நடக்கும் மர்மத்தை கண்டுபிடிக்கும் ஒரு ரோலில், பெற்ற தாய்க்காக எப்படிப்பட்ட பேயையும் எதிர்கொள்ள களத்தில் இறங்கி சமாளித்திருக்கிறார். ஆனாலும், கிளைமாக்ஸ் காட்சிகளில் ஜீவாவை காட்டிலும் அவரது அனிமேஷன் உருவம் ஃபர்பெட்டாக உழைத்திருக்கிறது.ஹீரோயினாக நடித்திருக்கும் ராஷி கண்ணா, படத்தின் துவக்கம் முதல் இறுதி வரை நாயகனின் காதலியாக வந்தாலும், அவருக்கென எந்தவித விசேஷ காட்சியும் இல்லாதது அவருக்கு மட்டும் அல்ல ரசிகர்களுக்கும் பெரும் ஏமாற்றம்.
சித்த வைத்தியராக வருகிறார் அர்ஜுன். அதேசமயம் அவருக்கான ஆக்சன் காட்சிகளும் உண்டு.சித்த வைத்தியம் பற்றி ஒரு புரிதலோடு தன் கேரக்டரை ஏற்றிருப்பது அவர் பேசும் வசனங்களில் தெளிவாக தெரிகிறது. கை கால்களை அசைக்க முடியாமல் இருக்கும் வெள்ளைக்கார டேவிட்டின் தங்கையை குணமாக்குவதற்காக அர்ஜுன் தரும் சிகிச்சைகளும், ஊக்க வார்த்தைகளும் தன்னம்பிக்கை இல்லாதவர்களுக்கும் தன்னம்பிக்கையை தரும்.எட்வின் தங்கையாக வரும் மெட்டில்டா ஸோ க்யூட்.அம்மாவாக வரும் ரோகிணி, டாக்டர் பூர்ணிமா பாக்யராஜ், மற்றும் செந்தில், கோலிவுட்டின் செட் பிராப்பர்ட்டி யோகி பாபு தங்கள் பங்கை நிறைவாக செய்திருக்கிறார்கள்.திடீரென என்ட்ரி ஆகும் ரெடின் கிங்ஸ்லி பேசும்வசனங்களால் எரிச்சல்தான் வந்தது.
டைட்டில்கார்டில் யுவன் சங்கர் ராஜாவின் பெயரை பார்த்ததும் உற்சாகமடையும் ரசிகர்களை அம்மா பாடல் மற்றும் ”என் இனிய பொன் நிலாவே...” ரீமிக்ஸ் மூலம் குஷிப்படுத்துவதில் பாஸ் மார்க் வாங்கி விடுகிறார். பின்னணி இசையும் குட்.
ஆர்ட் டைரக்டர் தயவில் ஆடம்பரமான பிரெஞ்சு பங்களாவாக இருந்து பிறகு பேய் பங்களாவாக மாற்றமடைந்து, பிறகு ஸ்கேரி ஹவுஸாக உருவாகும் ஒரு கட்டிடத்தின் மாற்றத்தை மிக நேர்த்தியாக வடிவமைத்திருகிறார் பி.சண்முகம். நாயகனின் வண்ணமயமிக்க வீடு, சித்தரின் எளிமையான கோவில் என அனைத்தையும் அதிகம் மெனக்கெட்டு உருவாக்கியிருப்பது காட்சிகளில் தெரிகிறது.
கேமராமேன் தீபக் குமாரின் கைவண்ணத்தில் பிரெஞ்சு காலக்கட்ட ஆடம்பர பங்களா மிகப் பிரமாண்டமாகக் காட்சியளித்து ரசிக்க வைக்கிறது. தற்போதைய காலக்கட்டத்தில் பயங்கரமாக காண்பித்து பயமுறுத்தவும் செய்திருக்கிறார்.
வழக்கம்போல் குறை சொல்ல சில விஷயங்கள் உண்டு என்றாலும் காட்சிகள் பரபரவென்று போய்விடுவதால் பெட்டர் ரக லிஸ்டில் இணைந்து விட்டது இப்படம்.
குறிப்பாக இண்டர்வெல்லுக்கு பின்னர் நடக்கும் கிராஃபிக்ஸ் சண்டைக்காட்சி கொஞ்சம் ஆர்டிபிஷியலாக இருந்தாலும், அவை எல்லாம் சிறுவர்களை நிச்சயம் கொண்டாட வைக்கும்.
மார்க் 3/5