தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

நிர்வாண வீடியோக்களின் காலம்!

05:20 PM Oct 13, 2024 IST | admin
Advertisement

வியா மறுபடி பேசுபொருளாகியிருக்கிறார். அவருடைய நிர்வாண வீடியோ ஒன்றை அவர் சம்மதம் இல்லாமல் இணையத்தில் யாரோ வெளியிட்டதாக இங்கே ஒருவர் பதிவிடுகிறார். அந்தப் பதிவில் சென்று புள்ளி வைப்பவர்களின் உள்பெட்டியில் வீடியோ அனுப்பும்படி கேட்பவர்களின் எண்ணிக்கை ஆச்சரியம் அடைய வைக்கிறது. அத்தனை பேருமே பெண்களுக்கு நடக்கும் பாலியல் அத்து மீறல்களைப் பார்த்து ஒவ்வொரு முறையும் பொங்கி எழுபவர்கள்தான். அவனை வெட்ட வேண்டும் சுட வேண்டும் என்று கட்டளையிடுபவர்கள்தான். மனைவி குடும்பம் குழந்தை என்று வாழும் சராசரிகள்தான். பெரும்பாலும் டிஜிட்டல் குடியேறிகள் என்று சொல்லப்படும் இரண்டாயிரமாவது ஆண்டுக்கு முன்பாகப் பிறந்தவர்கள்தான்.

Advertisement

அப்படிக் கேட்பதிலோ அதைப் பார்க்க விரும்புகிறேன் என்று வெளிப்படையாக சொல்வதிலோ இவர்களுக்கு எந்தத் தயக்கமும் இல்லை. இத்தனைக்கும் இன்றைய இணையத்தில் போர்ன் காட்சிகளுக்குப் பஞ்சமே இல்லை. பல நூறு ரகங்களில் கோடிக் கணக்கில் இலவசமாகவே கொட்டிக் கிடக்கின்றன. 2டி, 3டி, விர்ச்சுவல் ரியாலிட்டி என்று அத்தனை தொழில்நுட்பங்களிலும் கிடைக்கின்றன. ஆனாலும் அறிந்த ஒரு பெண்ணின் நிர்வாணத்தை அவள் விருப்பமில்லாமல் மறைந்திருந்து பார்க்கும் வாயரிசம் இங்கே பலருக்கும் தேவையாக இருக்கிறது. அதை ஒரு குற்றமாகக் கூட அவர்கள் நினைப்பதில்லை.

Advertisement

ஓவியா என்ற பெண் ஒரு நடிகை என்பதால்தான் அப்படிக் கேட்கிறோம், மற்றபடி நாங்கள் உத்தமர்கள் என்று சிலர் சமாதானம் சொல்வதையும் காண முடிந்தது. அவர் நடிகையாக மட்டுமல்ல மேற்சொன்ன போர்ன் படங்களில் நடிப்பவராக இருந்தாலும் அவருடைய சம்மதம் இல்லாமல் வெளியாகும் எதையும் பார்ப்பது வாயரிசம் என்ற வகையில்தான் வரும். இப்படிக் கேட்பவர்கள் பக்கத்து வீடு, அலுவலகம், சமூகத் தொடர்புகள் என்று யாருடைய வீடியோ வந்தாலும் ஏதோ ஒரு சமாதானம் சொல்லி தயங்காமல் கேட்கவே செய்வார்கள். ஏனென்றால் அது தவறு என்ற புரிதலே அவர்களுக்கு இல்லை. பொள்ளாச்சி சமயத்தில் வந்த வீடியோக்களை எத்தனை பேர் பார்த்தார்கள் என்ற கணக்கும் கொல்கத்தா மருத்துவர் கொலை தொடர்பான செய்தி வந்தபோது இணையத்தில் வீடியோவைத் தேடிய கோடிக் கணக்கானவர்களின் எண்ணிக்கையும் நம் சமூகம் இந்த விஷயத்தில் எந்த அளவு புரையோடிப் போயிருக்கிறது என்று புரிய வைக்கும்.

இது குறித்து இன்ஸ்டாவில் ஓவியாவிடம் ஒருவன் கேட்டதற்கு 'ஓகே ஓகே என்ஜாய்' என்றும் வீடியோ தெளிவாக இல்லை என்ற கேள்விக்கு 'நெக்ஸ்ட் டைம் ப்ரோ' என்றும் பதிலளித்திருக்கிறார். அந்த வீடியோவை தேடித் தேடிப் பார்க்கும் ஒவ்வொருவரையும் செருப்பால் அடித்தது போன்ற பதில் அது. இதே போல சன்னி லியோனிடம் அவருடைய பழைய நிர்வாணப் படங்கள் குறித்துக் கேட்டபோது அது நான் விரும்பி ஏற்றுக் கொண்ட எனது வாழ்க்கையின் ஒரு பகுதி. அது குறித்து எனக்கு எந்த வருத்தமும் இல்லை. நான் அதைக் கடந்து வந்துவிட்டேன். நீங்கள்தான் இன்னும் வரவில்லை என்று பதிலளித்திருந்தார்.

ஓவியா போல, சன்னி லியோன் போல எத்தனை பேர் துணிச்சலாக இதை எதிர்கொள்வார்கள் என்று தெரியவில்லை. குறிப்பாக இது போன்ற வீடியோக்களுக்கு லிங்க் கிடைக்குமா, உள்பெட்டி வாங்க பிரதர் என்று கேட்கும் சராசரிகளின் வீட்டுப் பெண்களுக்கு ஒரு போதும் அந்தத் துணிச்சல் வராது. அப்படி ஒரு ஆணின் அருகாமையில் வாழ்பவர்கள், இதுபோல தங்களுடைய வீடியோ வெளியானால் அதை வாழ்வின் மிகப்பெரும் அவமானமாகக் கருதியே வாழ்வார்கள். தன் தந்தை அவமானமாக நினைத்தார் என்பதால் ஒரு மார்பிங் புகைப்படத்துக்காக ஒரு மாணவி தன் வாழ்வை முடித்துக் கொண்ட சம்பவமும் இங்கேதான் நடந்தது.

இது போன்ற வீடியோக்களை வெளியிடுபவர்களின் நோக்கம் ஏதோ ஒரு வகையில் அந்தப் பெண்ணைப் பழிவாங்குவதுதான். இவற்றைப் பெரும்பான்மை ஆண்கள் புறக்கணித்தாலே அவர்களின் எண்ணம் ஈடேறாமல் போகும். அதே போல இப்படி ஒரு வீடியோ வெளியாகிவிட்டாலே வாழ்க்கையே முடிந்து போனது என்ற மனநிலையில் இருந்து பெண்களும் வெளிவர வேண்டும். உலகம் மாறிவிட்டது. கோடிக்கணக்கான கேமராக்களுக்கு நடுவே தினமும் வாழ்கிறோம். எந்த நேரத்தில் நாம் எப்படி படம் பிடிக்கப்படுவோம் என்பது யாருக்கும் தெரியாது. எப்போது வெளியாகும் என்றும் தெரியாது. அப்படி வெளியானால் அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்ற உரையாடல் பள்ளி, கல்லூரி தொடங்கி வீடுகளிலும் நடைபெற வேண்டியது காலத்தின் கட்டாயம். பெண் பிள்ளைகளுடன் மட்டுமல்ல ஆண் பிள்ளைகளுடனும்.

- ஷான் கருப்பசாமி

Tags :
mentalitynudeOviyapornoVedioஓவியா
Advertisement
Next Article