தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

அகதா கிறிஸ்டி காலமான நாளின்று!

09:14 AM Jan 12, 2017 IST | admin
Advertisement

கதாவுக்கு அப்போது மூன்று வயது. இங்கிலாந்தின் டேவான் (Devon) நகரில் 1890, செப்டம்பர் 15-ல் பிறந்தாள். அகதாவின் அப்பா, அமெரிக்கர். அம்மா, இங்கிலாந்தைச் சேர்ந்தவர். இருவருமே வேலைக்குச் செல்வதால், சிறுமி அகதாவை பக்கத்துத் தெருவில் இருக்கும் பாட்டி வீட்டில் விடுவார்கள். அக்கம் பக்கத்தில் இருக்கும் சிறுவர்கள், தினமும் அகதா வீட்டுக்கு வருவார்கள். அவளைச் சுற்றி உட்கார்ந்துகொள்வார்கள். அம்மா கிளாராவுக்கு பாட்டி மூலம் விஷயம் தெரிந்தது.'வீட்டில் என்ன நடக்கிறது... ஏன் அகதாவைச் சுற்றி ஒரு கூட்டம்?’ என்று யோசித்த அம்மா, ஒருநாள் தனது வேலைக்கு லீவு போட்டுவிட்டு, நடப்பதை ஒளிந்திருந்து பார்க்க முடிவெடுத்தார்.

Advertisement

சிறிது நேரத்தில் வீட்டில் கூடிய சிறுவர்கள் கூட்டம், குட்டிப் பெண் அகதாவை தோட்டத்துக்கு அழைத்துச்சென்றது. அங்கே சென்று பார்த்தார் அம்மா. மரத்தடியில் அகதா கதை சொல்லிக்கொண்டிருக்க, எல்லோரும் கண் சிமிட்ட மறந்து, கதையைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.

Advertisement

பாட்டி தவிர யாருமே இல்லாத அந்தப் பெரிய வீட்டில், சந்து பொந்து விடாமல் நுழைந்து பல மர்மங்களைக் கண்டுபிடிப்பாள் அகதா. அது பற்றி பாட்டிக்கு கதை கதையாகச் சொல்வாள். பொதுவாக, பாட்டிகள்தான் பேரன் பேத்திகளுக்கு கதை சொல்வார்கள். ஆனால், அகதா விஷயத்தில் அப்படி அல்ல. பேத்தி அகதாவிடம் பாட்டி ஆவலாகக் கதை கேட்பார். அகதாவுக்கு அப்போது வயது நான்கு.

அம்மா கிளாரா, அகதாவுக்கும் உடன் பிறந்தவர்கள் மூவருக்கும் வீட்டிலேயே கல்வி அளிக்கத் தீர்மானித்தார். புனித பைபிளை வாசிக்கவும், அது தொடர்பாக எழுதிப் பழகுவதுமே 1890-களில் ஆரம்பக் கல்வி. கணக்குப் போடவும் வீட்டிலேயே கற்பார்கள். அகதா, இவை அனைத்தையும் கதையாகவே புரிந்துகொள்வாள். பைபிள் கதைகளைத் தனது பாணியில் மாற்றி, புதிய கதைகளைச் சொல்லி, அனைவரையும் ஆச்சர்யப்படவைப்பாள்.

பாட்டி வீட்டில் இருந்த புத்தகங்கள் அவளை மிகவும் ஈர்த்தன. ஆறு வயதில், அந்தக் காலத்தின் தலைசிறந்த சிறுவர் கதைகளை  வாசித்தாள். மணிக்கணக்கில் புத்தகங்களுடன் காணாமல்போவாள். சாகசக் கதைகள், புதையல் கதைகள், ரயில் சாகசங்கள் எனப் பாட்டி வீட்டில் இருக்கும் புத்தகங்கள் அகதாவுக்குள் நுழைந்தன. படிப்பதோடு நிறுத்திக்கொள்ளாமல்,  அந்தக் கதைகளில் வருவது போல நாய்கள், பேசும் கிளி, பூனைகளை செல்லப் பிராணிகளாக வளர்த்து, கதையாகவே வாழ்வாள்.

'தி வுமன் ஆஃப் கார்டு’ என்கிற கில்பர்ட் மற்றும் சுல்லிகான் எழுதிய கதையை, நண்பர்களோடு நாடகமாக அரங்கேற்றினாள் அகதா. கதாநாயகன் ஃபேர்பாக்ஸ் வேடத்தில் நடித்து, பலரையும் வியப்பில் ஆழ்த்தியபோது  அவளது வயது ஏழு.

அகதாவை ஒரு பெண்கள் பள்ளியில் சேர்த்தனர். பள்ளிக்கூடத்தின் கெடுபிடிகள் அகதாவுக்குப் பிடிக்கவில்லை. நோட்டுப் புத்தகங்களில் எழுதுவது பெரிய போராட்டமாக இருந்தது. அகதாவை ஒரு டிஸ்லெக்ஸியா வகைக் குழந்தை என்று அறிவித்த பள்ளி நிர்வாகம், அவளை வெளியேறச் சொன்னபோது அகதாவின் அம்மா துடித்துப்போனார்.

எழுதுவதில் உள்ள பிரச்னையில் இருந்து மூன்று ஆண்டுகள் போராடித் தன்னை மீட்டுக்கொண்ட அகதா, பிரான்ஸ் நாட்டில் உள்ள பாரீஸ் நகரின் 'பேஸ் ஸ்கிரிட்’ பள்ளியில் சேர்ந்து, தனது கல்வியை முடித்தாள். அதற்கு ஒரு வருடத்துக்கு முன்பாகவே, அவளது கதை ஒன்று புத்தமாக வெளிவந்து, சிறுவர் மத்தியில் சக்கைப் போடு போட்டது. அகதா கதை சொல்லச் சொல்ல, அதைச் சகோதரி மார்கரெட் எழுதினார். அந்த மர்மக் கதை அச்சேறியபோது அகதாவுக்கு 11 வயது.

இவர், தன் வாழ்நாளில் மொத்தம் 66 நாவல்கள், 14 சிறுகதைத் தொகுப்புகள் எழுதியுள்ளார்.

அவர் ஒவ்வொரு கதையிலும் ஒரு குற்றத்தைத் தோற்றுவிக்கிறார். அந்தக் குற்றத்தை யார் செய்தது என்று நாம் அறிவதற்குப் பல இடங்களில் பல குறிப்புகளைக் கொடுத்துச் செல்வார். ‘இவர்தான் குற்றவாளி’ என்று வாசகர்கள் ஒரு கதாபாத்திரத்தைக் கட்டம்கட்டும்போது, வாசகர்கள் எதிர்பார்க்கவே செய்யாத ஒரு கதாபாத்திரத்தை ‘இவரே குற்றவாளி' என்று சொல்லி நம் முன் நிறுத்துவார். அந்த ஆச்சரியத்துடன் நாம் மீண்டும் அந்தக் கதையைப் படிக்கும்போது, அவர் தந்து சென்ற குறிப்புகள் எல்லாம் உண்மையில், அந்த உண்மையான குற்றவாளியை நோக்கியே இருப்பது நமக்குப் புரியும்.

இன்னும் சில கதைகளில் குற்றவாளி இவர்தான் என்று நேரடியாகவே சொல்லிவிடுவார். ஆனால் அவர் அந்தக் குற்றத்தை எப்படிச் செய்தார் எனும் புதிரை அவரே அவிழ்க்கும் வரை நாம் காத்திருக்க வேண்டும்.

இந்தச் சிறப்புகள் எல்லாம் ஒரு புறமிருக்க, இன்னொரு முக்கியச் சிறப்பம்சம், ஒரு குற்றத்தைச் செய்வதற்கு அவர் படைத்த‌ கதாபாத்திரங்கள் என்ன மாதிரியான ஆயுதத்தைத் தேர்வு செய்கின்றன என்பது. இவரின் பெரும்பாலான கதாபாத்திரங்கள் தேர்வுசெய்தது விஷம்! ஆம் ..அகதா தன் கதைகளில் 14 விதமான விஷங்களைப் பயன்படுத்துகிறார். அவர் காலத்தில் சமூகத்தில் புழக்கத்திலிருந்த பெருமளவு விஷ வகைகள், மருத்துவப் பயன்பாட்டுக்கு உதவின. அப்படியான விஷ வகைகள் மற்றும் மருத்துவப் பயன்பாடிலிருந்து முற்றிலும் நீக்கப்பட்ட விஷ வகைகள் ஆகியவற்றைக் கொண்டு அவர் தன் நாவல்களைப் படைத்திருந்தார்.

தன் கதாபாத்திரங்கள் பயன்படுத்தும் விஷம், அது மனித உடலில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து அறிவியல்பூர்வமான விவரங்களைத் தன் கதைகளில் விளக்கமாகச் சொல்லியிருப்பார் அகதா. இந்த அம்சம், அவரின் நாவல் ஒன்று ‘பார்மாசூட்டிக்கல் ஜர்னல் அண்ட் பார்மாசிஸ்ட்’ எனும் மருந்தியல் இதழ் ஒன்றால் மதிப்பீடு செய்யப்படும் அளவுக்கு அகதாவை உயர்த்தியது. ஆச்சரியப்படும் வகையில் அந்த நாவல், ‘தி மிஸ்டீரியஸ் அஃபயர்ஸ் அட் ஸ்டைல்ஸ்’ எனும் அவரின் முதல் நாவலாகும். அவரால் எப்படி இதைச் சாதிக்க முடிந்தது?

ஏனென்றால், அவர் அடிப்படையில் ஒரு செவிலியர். முதலாம் உலகப் போரில் செவிலித் தொண்டு புரிந்தவர். அப்போது அவர் மருந்துகளைக் கையாள வேண்டியிருந்தது. அந்த ஆர்வம், மருந்தியல் நிபுணர் ஒருவரிடம் தனிப்பட்ட முறையில் அவரை மாணவியாகச் சேர உந்தித் தள்ளியது. அந்த நாட்களில் அவர் பல விதமான விஷ மருந்துகளைப் பற்றி அறிந்துகொள்கிறார். அந்த அனுபவங்கள்தான் அவர் கதைகள் எழுதுவதற்குக் கைகொடுத்தன.

இவரின் நாவல்களைப் படித்துவிட்டு, பலர் அந்த நாவல்களில் சொல்லப்பட்டிருக்கும் விஷத்தை வாங்கிக் குற்றங்களைப் புரிந்தனர் என்பது இவர் மீது வைக்கப்படும் பொதுவான குற்றச்சாட்டு. ஆனால் அது உண்மையல்ல. மாறாக இவரின் ‘தி பேல் ஹார்ஸ்’ என்ற நாவலைப் படித்ததன் காரணமாக, மருத்துவமனை செவிலியர்கள் சிலர் ‘தாலியம்’ எனும் விஷத்தின் தாக்கத்தை உணர்ந்து, அந்த விஷத்தை உட்கொண்டவர்கள் பலரின் உயிரைக் காப்பாற்றியுள்ளனர்.

 'அகதா கிறிஸ்டி’ என்று பின்னாட்களில் மிகப் பிரபலமானார். 66 மர்ம நாவல்களைப் படைத்து, மர்ம நாவல் உலகின் முடிசூடா ராணி என்று அழைக்கப்பட்ட அகதா, இதே ஜனவரி 12ம் தேதி (1976) காலமானார்

Tags :
Agatha Christiecrime fictiondetective storymemoiristMurder mysteryNovelistplay wrightpoetshort story writerthriller
Advertisement
Next Article