கோழிக்கோடு ஏர்போர்ட்டில் பாதுகாப்புப் பரிசோதனைக்குப் "பின்"..!
06:37 PM Jul 01, 2024 IST
|
admin
Advertisement
ஏறத்தாழ 4 கோடியே 75 லட்சம் மக்கள்தொகையைக் கொண்டிருக்கும் நாடு ஸ்பெயின். ஒப்பீட்டளவில் தமிழ்நாடு என்கிற மாநிலத்தின் மக்கள் தொகையைவிட ஸ்பெயின் என்கிற நாட்டின் மக்கள்தொகை குறைவுதான். ஆனால், எல்லா இடங்களிலும் மக்கள் நெருக்கமும் அவர்களின் புழக்கமும் அதிகமாக இருந்ததைக் காண முடியும். இது பற்றி அங்குள்ளவர்கள், "ஆண்டுக்கு 9 கோடிக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் ஸ்பெயினுக்கு வருகிறார்கள். அதனால் எப்போதும் மக்கள் நெருக்கத்துடன் இந்த நாடு இருக்கும்" என்பார்கள்.ஸ்பெயின் நாட்டின் தட்பவெப்பம் என்பது நம் நாட்டை, அதுவும் குறிப்பாக நமது மாநிலமான தமிழ்நாட்டுடன் ஒப்பிடும்போது மிகவும் குளிராகத்தான் தெரியும். ஆனால், ஐரோப்பிய நாடுகள் பலவற்றுடன் ஒப்பிடும்போது ஸ்பெயின் நாட்டின் வெப்பநிலை மைனஸ் டிகிரிக்குச் செல்வதில்லை என்பதால் மற்ற நாடுகளிலிருந்து இங்கு வருகிறார்கள். அப்பேர்பட்ட ஸ்பெயின் தலைநகர் மேட்ரிடுக்கு செல்ல, வீட்டில் மதிய உணவை முடித்துவிட்டு கோழிக்கோடு ஏர்போர்ட்டுக்கு கிளம்பினோம்.
மூன்று மணி நேரத்தில் கடக்க வேண்டிய 130 கி.மீ. தூரத்தை தேசிய நெடுஞ்சாலை (NH 66) பணிகள் மற்றும் கனமழை காரணமாக ஆமை வேகத்தில் வந்ததால் ஆறு மணி நேரம் ஆனது.விமானம் புறப்படும் நேரத்திற்கு மூன்று மணி நேரத்திற்கு முன்னதாக ஏர்போர்ட்டில் இருக்க வேண்டிய எங்களால், மிகவும் தாமதமாகவே வந்து சேர முடிந்தது.
'செக் இன்' நடவடிக்கைகளுக்கு பின் கொண்டு வந்த பெட்டிகளை ஒப்படைத்து விட்டு பாதுகாப்பு பரிசோதனைக்கு தயாரானோம். பாதுகாப்பு வாசல் ஒன்றின் வழியாக கடந்த போது, சத்தம் போட்டு எச்சரித்தது அலாரம்.
உஷாராகி எனது பாஸ்போர்ட்டை கையில் வாங்கினார் ஒரு அதிகாரி. வட இந்தியர் போல் இருந்த அந்த அதிகாரி, திடீரென 'ஆ......!' என்று அலறினார்.
அதை கேட்டு ஒரு கணம் ஆடிப் போனேன்.
'நான் என்ன, பாஸ்போர்ட்டில் ஒளித்து வைத்து தங்கமா கடத்துகிறேன்?' ஏன் கத்துகிறார் அவர்?.
ஒரு வேளை உடல் பரிசோதனையில் தவறான ஏதேனும் கண்டுபிடித்து விட்டாரா?
என்னை ஏதாவது தேடப்படும் தீவிரவாதி போலத் தெரிகிறதா? பாதுகாப்புப் பணியில் உள்ள CISF வீரர் யாராவது ஓடி வந்து துப்பாக்கியால் சுட்டு விடுவார்களா?
ஏகப்பட்ட யோசனைகள் மின்னி மறைந்தன எனக்குள்...மடியில் இருந்த கனமெல்லாம் கன்வேயர் பெல்ட்டில் வைத்து விட்டு வந்ததால் வழியில் பயமில்லாமல் அவர் முன் நின்று கொண்டிருந்தேன்.
அவர் தனது ஆட்காட்டி விரலை என்னிடம் காட்டி, எரிச்சலாக இந்தியில் ஏதோ சொன்னார்.
விரலில் ரத்தம் பீறிட்டிருந்தது.
ஒன்றும் புரியாமல் நின்று 'திருதிரு' வென விழித்தேன்.
எனது பாஸ்போர்ட்டின் கடைசி அட்டையில் ஸ்பெயின் நாட்டின் அழைப்புக்கடிதம் 'பின்' செய்யப்பட்டிருந்தது.அந்தப் பின் சரியாக அமுங்காமல் நீட்டி நின்ற அதன் ஒரு முனை அவரது விரலை சற்று வலுவாக பதம் பார்த்திருக்கிறது.எதிர்பாராமல் நடந்த அதன் எதிரொலி தான் "தான் ஒரு தீரமிக்க பாதுகாப்பு வீரர்" என்பதையும் மறந்து அவரை அலற வைத்திருக்கிறது.
அலாரம் எச்சரிக்கை கொடுத்ததும் அந்த பின் தான் என்பதும் தாமதமாக புரிந்து கொண்டேன்.ஸ்பெயின் வந்த பிறகு செய்திச் சேனலில் வந்தது அந்தச் செய்தி."ஷார்ஜாவில் இருந்து கண்ணூர் வந்த ஒருவர் பாஸ்போர்ட் வடிவத்தில் ஒன்றேகால் கிலோ தங்கம் கடத்திய போது பிடிபட்டார். பிடிபட்ட கடத்தல் தங்கத்தின் மதிப்பு 87 லட்சம் ரூபாய் ஆகும்".
அடங்கொப்புரானே...i
Advertisement
Next Article