தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

இடித்துத் தள்ளப்படும் அடையார் கேட் என்ற கிரவுன் பிளாசா ஹோட்டல்!

08:09 AM Jun 19, 2024 IST | admin
Advertisement

தோ நம் சென்னை இன்னும் ஒரு அடையாளத்தை சென்னை இழந்துக் கொண்டு இருக்கிறது.

Advertisement

சென்னை மாநகரின் முக்கியமான ஹோட்டல்களில் ஒன்றுதான் கிரவுன் பிளாசா ஹோட்டல்... பழைய சென்னைவாசிகளுக்குத் தெரிந்த பெயர் பார்க் ஷெரட்டன் அல்லது அடையார் கேட்.பலருக்கும் இது ஒரு காலத்தில் முக்கியமான லேன்ட்மார்க். அதை விட முக்கியமாக பல வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வுகள் அடையார் கேட் ஹோட்டலில் நடந்துள்ளன. பல பெரும் பெரும் நிறுவனங்களின் முக்கியமான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இந்த ஹோட்டலில் வைத்துத்தான் கையெழுத்தாகியுள்ளன. பல விவிஐபிகளின் திருமணங்கள் இங்கு நடந்துள்ளன. பெரிய பெரிய தலைவர்கள் இந்த ஹோட்டலுக்கு வந்து போயுள்ளனர், தங்கியுள்ளனர். திரைப் பிரபலங்கள் பலருக்கு இது ஒரு காலத்தில் அடையாளமாகவும் திகழ்ந்துள்ளது.

Advertisement

தற்போது குடியிருப்பு வளாகமாகப் போகும் இந்த ஹோட்டல் பிறந்த கதை இதோ:

போர்ச்சுகீசிய வர்த்தகரான ஜான் டி மான்டி என்பவருக்குச் சொந்தமாக அடையார் ஆற்றுப் பகுதியில் மிகப் பெரிய நிலம் இருந்தது. 19வது நூற்றாண்டில் புதுச்சேரி வழியாக அப்போதைய மெட்ராஸுக்கு வந்து தொழில் தொடங்கியவர் ஜான் டி மான்டி. மெட்ராஸுக்கு வந்து தொழில்துறையில் காலடி எடுத்து வைத்த டி மான்டி, ஆர்புதான்ட் அன்ட் கோ நிறுவனத்தில் ஒரு பங்குதாரராக இணைகிறார். அதன் பிறகு இந்த நிறுவனம் ஆர்புதான்ட் டி மான்டி அன்ட் கோ என்று பெயர் மாற்றம் பெறுகிறது. இந்த சமயத்தில் அவருக்கு மெளபரீஸ் கார்டன் பகுதியில் 105 ஏக்கர் நிலம் கைவசமாகிறது. இந்த நிலமானது அடையார் ஆறு முதல் சாமியர்ஸ் சாலை, கிரீன்வேஸ் சாலை வழியாக நீண்டு கிடக்கிறது. அதன் பிறகு உள்ள இடம்தான் தற்போது உள்ள காந்தி மண்டபம் சாலை. இந்த பரந்து விரிந்த இடத்துக்கு மத்தியில்தான் அக்காலத்தில் மெளபரீஸ் கப்போலா எனப்படும் ஓய்வு மாளிகை இருந்தது. வார இறுதி நாட்களில் இங்கு விருந்து நிகழ்ச்சிகள் களை கட்டும்.

ஆனால் இத்தனை சொத்து, வசதி இருந்தும் கூட டிமான்டிக்கு நிம்மதி இல்லை.. காரணம் இவரது மனைவி மன நலம் பாதிக்கப்பட்டவர். இவரது ஒரே மகனும் ஜெர்மனியில் மர்மமான முறையில் மரணமடைந்து விட்டார். இதனால் எல்லாம் இருந்தும் அதை அனுபவிக்க முடியாத நிலையில் இருந்தார் டி மான்டி. இந்த நிலையில் 1821ம் ஆண்டு டிமான்டியும் மரணமடைந்து விட்டார்.

மயிலாப்பூர் சர்ச் வசம் போன சொத்து

அவரது பிரமாண்ட சொத்துக்கள் மயிலாப்பூர் கத்தோலிக்க சர்ச்சுக்கு உயில் எழுதப்பட்டது. உயிலில் கூறப்பட்டிருந்த நிபந்தனை என்னவென்றால் சொத்தைப் பிரிக்கவும் கூடாது, விற்கவும் கூடாது என்பது. ஆனால் காலப் போக்கில் நிலத்தை அப்படியே வைத்திருப்பது வீணானது என்று கருதிய சர்ச் நிர்வாகம், அந்த நிலத்தை பிரித்து விற்க முடிவு செய்தது. இதற்காக சென்னை உயர்நீதிமன்றத்தை அது நாடியது. உயர்நீதிமன்றமும் அனுமதி கொடுத்தது. அதைத் தொடர்ந்து அந்த நிலம் பிரிக்கப்பட்டது. அதில் பெரும் பகுதியை அப்போதைய பிரபலமான வியாபாரி வெங்கடாச்சலம் என்பவர் வாங்கினார்.

வாங்கிய நிலத்தில் பெரிய பெரிய பங்களாக்களை கட்டி வாடகைக்கும், பலவற்றை விற்பனைக்கும் விட்டார் வெங்கடாச்சலம். அதில் அரசு உயர் அதிகாரிகள், நீதிபதிகள், முன்னணி வர்த்தகர்கள் குடியிருந்தனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் ஐரோப்பியர்கள் ஆவர். இந்தப் பகுதியில் உள்ள தெருக்களுக்கு இங்கிலாந்தில் உள்ள நகரங்களின் பெயர்களையே தெருப் பெயர்களாக வைத்திருந்தனர். விற்பனை செய்யப்படாத 105 ஏக்கர் நிலத்தை அடையால் கிளப் வாங்கியது. அப்போது இந்த கிளப்பில் வெள்ளையர்கள் மட்டுமே உறுப்பினர்களாக இருந்தனர். பெரிய அளவிலான கோல்ப் மைதானத்துடன் கூடிய இந்த நிலம்தான் தற்போதைய போட் கிளப், மெட்ராஸ் கிளப் மற்றும் அமெரிக்க துணை தூதரின் வீடு உள்ள பகுதியாகும்.

அடையார் கிளப் கேட்

இந்த கிளப்பின் வாசல் பகுதியைத்தான் அடையார் கிளப் கேட் என்று அழைத்தார்கள். 1980ல் மெர்ச்சன்டைல் வங்கி (இப்போது அது ஹாங்காங் ஷாங்காய் வங்கி) யானது, அடையார் கிளப் கேட்டுக்கு எதிரில் இருந்த டி மான்டிக்குச் சொந்தமான இடத்தை வாங்கி அந்த இடத்தில் இருந்த கட்டடத்துக்கு அடையார் கேட் என்று பெயர் வைத்தது. மிகப் பெரிய பிரமாண்டமான பங்களா ஒன்றையும் அங்கு அது கட்டியது. அந்த வங்கியின் மேலாளருக்கான பங்களா அது. காலப் போக்கில் பல்வேறு மாற்றங்களின் விளைவாக மெர்க்கன்டைல் வங்கி இந்த பங்களாவுடன் கூடிய இடத்தை விற்பனை செய்தது. அந்த இடத்தை டிடிகே என்று அழைக்கப்படும் டிடி கிருஷ்ணமாச்சாரியின் மகனும் பிரபலமான தொழிலதிபருமான டிடி வாசு வாங்கினார்.

தொலைநோக்குப் பார்வையுடன் அந்த இடத்தை வாங்கினார் வாசு. சென்னைக்கு அதி நவீன 5 நட்சத்திர ஹோட்டல் இல்லையே என்ற ஏக்கம் நீண்ட காலமாக இருந்தது அவருக்கு. தான் வாங்கிய இடத்தில் பிரமாண்ட ஹோட்டலைக் கட்டத் தீர்மானித்தார். அப்போது சென்னையில் பெரிய அளவில் ஹோட்டல்கள் கிடையாது. வெகு சில ஹோட்டல்களே இருந்த காலம் அது. சிங்கப்பூரைச் சேர்ந்த சில தமிழ் தொழிலதிபர்களும், வாசுவும் இணைந்து அடையார் கேட் இடத்தில் பிரமாண்ட ஹோட்டலை எழுப்ப முடிவு செய்தனர். அடையார் கேட் ஹோட்டல் லிமிட்டெட் நிறுவனம் உருவாக்கப்பட்டது. ஹோட்டல் கட்டுமானப் பணிக்கு தேவையான நிதியை சிங்கப்பூர் தொழிலதிபர்கள் கொடுத்தனர். சொத்து வாசு வசமே இருந்தது. அனைவரும் கூட்டாக சேர்ந்து பணியாற்றினர்.

டிடி வாசுவும், கோயலும்

1981ம் ஆண்டு பழைய பங்களா இடிக்கப்பட்டது. ஹோட்டல் கட்டும் பணிகள் தொடங்கின. ஆனால் நாட்கள் நகர நகர சிங்கப்பூர் தமிழர்கள் ஹோட்டலில் நாட்டமிழந்தனர். இதனால் அதிலிருந்து விலக விரும்பினர். ஆனால் டிடி வாசு இதைத் தொடர விரும்பினார். ஆனால் பணம் தேவையாக இருந்தது. டிடிகே குழுமத்திலிருந்து நிதி திரட்ட விரும்பினார். ஆனால் அதற்கும் சிக்கல் வந்தது. இருப்பினும் கடுமையாக போராடி 2 கோடி வரை திரட்டினார். அதுவும் போதவில்லை. இதையடுத்து பிரபல ஜவுளி வியாபாரி ஓ.பி கோயல் என்பவர் இந்த ஹோட்டல் மீது நாட்டம் கொண்டார். அவர் முதலீடு செய்யவே தேவையான நிதி கிடைத்தது. கோயலுடன் இணைந்து வாசு பணியைத் தொடர்ந்தார். நாளடைவில் வாசு தனது செல்வாக்கால் ஐடிசி வெல்கம் குரூப்பின் உதவியைப் பெற்றார். ஹோட்டலை நிர்வகிக்கும் பணியை அது மேற்கொண்டது. பின்னர் ஷெரட்டன் குரூப்புடன் வெல்கம் குரூப் ஒப்பந்தம் மேற்கொண்டதைத் தொடர்ந்து ஹோட்டல் பார்க் ஷெரட்டன் ஆனது. அதன் பிறகு சென்னை மாநகரின் முக்கிய அடையாளமாக மாறிப் போனது..

இப்போது அந்த வரலாறும் இடிப்பட்டு முடிவுக்கு வந்தது. ஆம்.. இந்த ஹோட்டலை பாஷ்யம் ரியல் எஸ்டேட் குழுவினர் இங்கு ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்புகளைக் கட்ட உள்ளது. 2 ஆண்டுகளுக்கு முன்னர் Ceebros என்ற முன்னணி அடுக்குமாடி கட்டிட நிறுவனம் இந்த ஹோட்டலை வாங்க இருந்தது. ஆனால், அந்த ஒப்பந்தம் தோல்வியில் முடிந்தது. பின்னர்,பாஷ்யம் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் குழு ஒப்பந்தத்தை இறுதி செய்தது. ஒரு கிரவுண்ட் (ஒரு கிரவுண்ட் 2,400 சதுர அடி) விலை 10 கோடி முதல் 12 கோடி வரை என மதிப்பிடப்பட்டது.

ஒரு சதுர அடி ரூ.30,000 எனக் கூறப்படுகிறது. பாஷ்யம் குழுமம் சுமார் 130 அடுக்குமாடி குடியிருப்புகளை இந்த ஹோட்டலை இடித்துக் கட்ட உள்ளது. ஒவ்வொன்றும் 5,000 முதல் 7,000 சதுர அடி அளவில் இரட்டைக் கோபுர கட்டடங்களாக அமைக்க திட்டமிட்டுள்ளது. அடுக்குமாடி குடியிருப்புகள் ஒரு சதுர அடிக்கு சுமார் 30,000 அல்லது குடியிருப்பு ரூ.15 கோடி முதல் 21 கோடி வரை விலை நிர்ணயம் செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது.

நிலவளம் ரெங்கராஜன்

Tags :
adyar gate hotelBHAASHYAM CONSTRUCTIONSchennaiChennai star HotelCROWNE PLAZA TO APARTMENTShotel crown plazahotel park sheratoniconic chennai hotelsஅடையார் கேட் ஹோட்டல்சென்னைஹோட்டல் கிரவுன் பிளாசாஹோட்டல் பார்க் ஷெராட்டன்
Advertisement
Next Article