சூரியனில் இருந்து வெளிவரும் எக்ஸ் கதிர்களை படமெடுத்து அனுப்பியது ஆதித்யா எல்–1 விண்கலம் - இஸ்ரோ தகவல்!.
ஆந்திர பிரதேச மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி.சி. 57 ராக்கெட் மூலம் ஆதித்யா எல்–1 விண்கலம் கடந்த செப்டம்பர் மாதம் 2–ந்தேதி வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இந்த விண்கலம் 125 நாட்கள் பயணம் செய்து பூமியில் இருந்து 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள லாக்ராஞ்சியன் புள்ளி–1ஐ சென்றடையும். அங்கிருந்து சூரியனை ஆய்வு செய்யும் பணியில் ஆதித்யா எல்–1 விண்கலம் ஈடுபட உள்ளது.
பூமியின் ஈர்ப்பு மண்டலத்தில் இருந்து வெளியேறிய ஆதித்யா எல்– 1 விண்கலம் தற்போது ‘லாக்ராஞ்சியன் புள்ளி–1ஐ நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், ஆதித்யா எல்–1 விண்கலத்தில் உள்ள ஹெல்1ஒஎஸ் கருவி சூரிய அனலில் இருந்து வெளியாகும் எக்ஸ் கதிர்களை முதல்முறையாக படமெடுத்து அனுப்பியுள்ளது. கடந்த 29-ம் தேதி பதிவான படத்தை கிராப் வடிவில் இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
இவை அமெரிக்காவின் ஜிஒஇஎஸ் விண்கலம் ஏற்கெனவே வழங்கிய தரவுகளுடன் ஒத்துப்போகிறது. அந்த கதிர்களின் வாயிலாக உருவாகும் வெப்ப ஆற்றலையும் அதன்மூலம் அறிய முடியும். ஆதித்யா எல்–1 விண்கலம் அனுப்பிய தரவுகள் சூரிய ஆற்றல் மற்றும் எலக்ட்ரான் குறித்த ஆய்வு செய்ய உதவும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.
பெங்களூர் யூஆர்ராவ் செயற்கைக்கோள் மையம் ஹெல்1ஒஎஸ் கருவி கருவியை தயாரித்தது. இதற்கிடையே புவியில் இருந்து 15 லட்சம் கி.மீ தொலைவில் உள்ள சூரியனின் எல்–1 பகுதி அருகே சென்றதும் விண்கலம் அதை மையமாக கொண்ட சூரிய ஒளிவட்டப் பாதையில் (Halo Orbit) நிலை நிறுத்தப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.