எல்லாம் நடிப்புங்க- பி.டி.உஷா ஆதரவு குறித்து வினேஷ் போகத் குற்றச்சாட்டு!
அண்மையில் நடந்து முடிந்த ஒலிம்பிக் தொடரில் மல்யுத்த போட்டியில் இறுதி போட்டி வரை சென்று 100 கிராம் எடை கூடியதால் பதக்கத்தை இழந்தார் வினேஷ் போகத். பதக்கத்தை இழந்தாலும், இந்திய மக்கள் மத்தியில் பதக்கம் வென்ற வீராங்கனைக்கான வரவேற்ப்பை அவர் பெற்றார். அப்போது நடந்த ஒலிம்பிக் போட்டியில், எடைக் குறைப்புக்காகக் கடுமையாகப் பயிற்சி செய்த வினேஷ் போகத், நீர்சத்து குறைபாடு காரணமாக நீர்சத்து குறைபாடு காரணமாக , மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்பொழுது, இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் [IOA) தலைவரான பி.டி.உஷா, வினேஷ் போகத்தை மருத்துவமனையில் சந்தித்த புகைப்படம் வெளியானது.
இதனிடையே மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் கடந்த வாரத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் ஜூலானா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் வேட்பாளராக களமிறங்கியுள்ளார். இந் நிலையில், இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் (ஐ.ஓ.ஏ) தலைவர் பி.டி.உஷா தன்னை சந்தித்தது தொடர்பாக வினேஷ் போகத் வெளிப்படுத்தியுள்ளார். அந்த புகைப்படங்கள் தனக்குத் தெரிவிக்காமல் கிளிக் செய்யப்பட்டதாகவும், புகைப்படம் எடுத்ததை தவிர வேறு எதுவுமே செய்யவில்லை என்றும் வினேஷ் போகத் குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து வினேஷ் போகத் உள்ளூர் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், “மருத்துவமனையின் படுக்கையில் இருக்கும்போது வெளியே என்ன நடக்கிறது என்பதே தெரியாது. வாழ்க்கையின் மோசமான கட்டத்தை கடந்து செல்லும்போது, அந்த தருணத்தில் என்னுடன் நிற்பதாக எல்லோரிடமும் காட்டுவதற்காக என் அனுமதியின்றி புகைப்படத்தை எடுத்து பகிர்ந்துள்ளனர்.
உங்கள் ஆதரவை அவ்வாறு தெரிவித்திருக்க தேவையில்லை. இந்த சம்பவத்தால் உடைந்து போனேன். எனக்கு என்ன ஆதரவு கிடைத்தது என்று தெரியவில்லை. பி.டி.உஷா என்னை மருத்துவமனைக்கு வந்து சந்தித்தார். புகைப்படம் எடுத்துக் கொண்டார். அதன் பின்னணி அரசியலில் நிறைய நடக்கிறது. என்னை மல்யுத்தத்தை விடவேண்டாம் என்று பலரும் கூறினர். நான் எதற்காக தொடர வேண்டும். எல்லாவற்றிலும் அரசியல் உள்ளது.” என்று அவர் தெரிவித்துள்ளார்