For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

தினமும் சுமார் 37,700 பாஸ்போர்ட்கள் வழங்கிய இந்திய வெளியுறவுத்துறை!

01:08 PM Feb 25, 2024 IST | admin
தினமும் சுமார் 37 700 பாஸ்போர்ட்கள் வழங்கிய இந்திய வெளியுறவுத்துறை
Advertisement

ந்தியாவில் ஒரு சராசரி மனிதனுக்கு பல வகையான பாஸ்போர்ட்கள் இருப்பது கூட தெரியாது. இருப்பினும், வெவ்வேறு விசாக்களைப் போலவே, மக்களுக்கும் அவர்களின் தொழிலின் அடிப்படையில் பாஸ்போர்ட் ஆவணத்தின் பல்வேறு வகைகள் தேவைப்படுகின்றன. அதாவது நீல பாஸ்போர்ட் - (பொது மக்கள்), வெள்ளை பாஸ்போர்ட் - (அரசு அதிகாரிகள்), டிப்ளோமெடிக் பாஸ்போர்ட் - (இந்திய தூதர்கள் மற்றும் மூத்த அரசு அதிகாரிகள்) மற்றும் ஆரஞ்சு பாஸ்போர்ட் - (10 ஆம் வகுப்புக்கு மேல் படிக்காத நபர்கள்.) என வகைகள் உண்டு.

Advertisement

அதே சமயம் பிப்ரவரி 2024 நிலவரப்படி, இந்தியாவின் தற்போதைய பாஸ்போர்ட் தரவரிசை 85 ஆகும், அங்கு செல்லுபடியாகும் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் 62 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்யலாம். ஆனாலும் 2024 ஆம் ஆண்டிற்கான தரவரிசைக் குறீயீட்டில் இந்தியா கடந்த ஆண்டை விட ஒரு இடம் சரிந்துள்ளது. தற்போது இந்தியாவின் பாஸ்போர்ட் 85 வது இடத்தில் பெற்றுள்ளது. இந்தியாவின் இந்த சரிவிற்கு காரணம் குறித்து சரியான தகவல்கள் இல்லை. ஆனால் கடந்த ஆண்டை விட இந்தியர்களுக்கான விசா இல்லாத நாடுகளுக்கான அணுகல் என்பது அதிகரித்துள்ள நிலையில்தான் இந்திய பாஸ்போர்ட் சரிவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Advertisement

இந்நிலையில் 2023-ம் ஆண்டில் இந்தியாவில் 1.37 கோடி பாஸ்போர்ட்கள் வழங்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் இன்று  தெரிவித்துள்ளது. சராசரியாக ஒரு நாளைக்கு சுமார் 37,700 பாஸ்போர்ட்கள் என்றளவில் இவை அமைந்திருக்கின்றன. கேரளா, மகாராஷ்டிரா, உபி, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் இந்த எண்ணிக்கையில் பெரும் பங்களிப்பை தந்துள்ளன. பாஸ்போர்ட் எண்ணிக்கையில் கேரளா முதலிடம் வகிக்கிறது(15.47 லட்சம்). அடுத்த இடங்களில் மகாராஷ்டிரா(15.10 லட்சம்), உத்தரபிரதேசம்(13.68 லட்சம்), தமிழ்நாடு(11.47 லட்சம்) மற்றும் பஞ்சாப் (11.94 லட்சம்) ஆகியவை வருகின்றன. தமிழ்நாடு 4-வது இடம் பிடித்துள்ளது. மேலும் கடந்த ஆண்டு வழங்கப்பட்ட மொத்த பாஸ்போர்ட்களில் கிட்டத்தட்ட பாதியை, இவ்வாறு முதல் 5 மாநிலங்கள் பெற்றுள்ளன.

வளர்ந்து வரும் பொருளாதாரம் மற்றும் உலகமயமாக்கல் ஆகியவை இந்தியாவில் பாஸ்போர்ட் மற்றும் அது தொடர்பான சேவைகளுக்கு தேவையை அதிகரிக்கச் செய்துள்ளன. அந்த வகையில் 2022-ம் ஆண்டில், நாட்டில் சுமார் 1.17 கோடி பாஸ்போர்ட்டுகள் வழங்கப்பட்ட நிலையில், முந்தைய 2021-ம் ஆண்டில் இது சுமார் 73 லட்சமாக இருந்தது. இந்தியாவில் பாஸ்போர்ட் வழங்குவது அதிகரிப்பதற்கு, அவற்றை எளிதாகப் பெறுவது ஒரு காரணம் என வெளியுறவு அமைச்சகம் தெரிவிக்கிறது. 2015-ம் ஆண்டில், சராசரி பாஸ்போர்ட் வழங்குவதற்கான நேரம் 21 நாட்களாக இருந்தது, தற்போது 6 நாட்களாக குறைந்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி மாதத்தில் மட்டும் சுமார் 11 லட்சம் பாஸ்போர்ட்கள் ,  கடந்த ஓராண்டில் மட்டும் 1.37 கோடி இந்தியர்களுக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement