தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

'அபிஷேக் சிங்வி இருக்கையில் பணக்கட்டு’-பாஜகவின் திசை திருப்பலாம்!

09:08 PM Dec 06, 2024 IST | admin
Advertisement

பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் கடந்த மாதம் 25–ந்தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. கூட்டம் துவங்கியதில் இருந்து, எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று காலை 11 மணிக்கு இரு அவைகளும் கூடி இன்றைய அலுவல் நேரங்கள் நடைபெற்றது. எதிர்க்கட்சிகள் அமளி காரணமாக, மக்களவையை டிசம்பர் 9ம் தேதி காலை 11 மணி வரை ஒத்திவைத்து சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவிட்டார்.

Advertisement

ராஜ்யசபை கூடியதும், தெலுங்கானாவில் இருந்து தேர்வு செய்யப்பட்ட, காங்கிரஸ் எம்.பி., அபிஷேக் மனு சிங்வி மீது சபாநாயகர் ஜெகதீப் தன்கர் புகார் ஒன்றை கூறினார். அவர் கூறியதாவது: காங்கிரஸ் எம்.பி., அபிஷேக் மனு சிங்விக்கு ஒதுக்கிய இருக்கையில் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.ராஜ்யசபைக்குள் பணம் வந்தது எப்படி? பின்னணியில் வேறு காரணம் உள்ளதா? என விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. நேற்று அவை நடவடிக்கைகள் முடிந்த பின் நடந்த சோதனையில் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

இது குறித்து, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கூறுகையில், ‘விசாரணை முடிந்து, சம்பவத்தின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்தும் வரை, ஒரு உறுப்பினரின் பெயரை வெளியிடக்கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன்‘ என வலியுறுத்தினார்.

ராஜ்யசபையில், மத்திய அமைச்சர் ஜே.பி., நட்டா கூறியதாவது: இது சபையின் கண்ணியத்தை புண்படுத்துகிறது. விரிவான விசாரணை நடத்தப்படும் என்று அவை தலைவர் கூறியதால், உண்மை வெளிவரும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது, என்றார்.

இந்த குற்றச்சாட்டு குறித்து, அபிஷேக் மனு சிங்வி கூறியதாவது: நான் நேற்று ராஜ்யசபைக்கு செல்லும் போது ஒரே ஒரு 500 ரூபாய் நோட்டு மட்டுமே எடுத்து சென்றேன். 12.57 மணிக்கு அவைக்குள் நுழைந்தேன். 1 மணிக்கு அவை கலைந்து விட்டது. 1.30 மணி வரை கேண்டீனில் இருந்தேன். அதன் பிறகு பார்லிமெண்டில் இருந்து கிளம்பி விட்டேன். இந்த விவகாரம் பற்றி, இப்போது தான் முதல்முறையாக கேள்வி படுகிறேன்.ஒவ்வொரும் எம்.பி.,யும் இருக்கையை பூட்டி சாவியை எடுத்து செல்லக்கூடிய வகையில் இருக்கை இருந்தால் இந்த குற்றச்சாட்டை முன்வைக்கலாம். பாதுகாப்பு குறைபாடுகள் காரணமாக நடந்து இருக்கிறதா என்று விசாரிக்க வேண்டும். இது குறித்து தவறு இருந்தால் முழுமையாக அம்பலப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் ஊடகப் பிரிவு பொதுச் செயலாளரான ஜெய்ராம் ரமேஷ் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், "இது நாங்கள் எழுப்பும் பிரச்சினைகளில் இருந்து மக்களை திசை திருப்பும் பாஜகவின் தந்திரம். நாங்கள் எழுப்பும் விவசாயிகள் பிரச்சினையை அவைத் தலைவரும் எழுப்பியுள்ளார். மோதானி (மோடி அதானி) ஊழல் விவகாரத்தை நாங்கள் விவாதிக்க விரும்புகிறோம். இதுபோல் இன்னும் பல பிரச்சினைகள். இவற்றில் இருந்து எல்லாம் கவனத்தை திசை திருப்ப அவர்கள் புது பிரச்சினையை எழுப்புகிறார்கள்.

பாஜக உறுப்பினர்கள் அவையை ஒத்திவைக்க ஆர்வமாக இருந்ததை நான் இன்று பார்த்தேன். மக்களவையில் மோதானி ஊழல் விவகாரத்தை விவாதிக்க கோரினோம். மக்களவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது, இந்த அரசின் யுக்தி. அவர்கள் அவையை நடத்த விரும்பவில்லை. அவைகளை நடத்துவது அரசின் பொறுப்பு, நாங்கள் ஆக்கபூர்வமான ஒத்துழைப்பை வழங்குகிறோம். மாநிலங்களவையில் எதையும் விவாதிக்க அரசு தயாராக இல்லை.

இன்று அவையில் என் சக தோழர் அபிஷேக் சிங்வியின் பெயர் அடிபட்டது. அவரின் பெயரை கூறியது முற்றிலும் தவறானது. மாலை 6 மணிக்கு மேல்தான் அவை சோதனை செய்யப்பட்டது. பிறகு பணம் எப்படி வந்தது? விசாரணை நடத்தினால் உண்மை வெளிப்பட்டுவிடும். நாடாளுமன்ற கூட்டுக் குழுவோ, விசாரணைக் குழுவோ அமைக்கட்டும், நாங்கள் விசாரணையில் இருந்து ஒடி ஒளியவில்லை. பாரபட்சமற்ற முறையில் விசாரணை நடத்தி, அவையை செயல்படுத்தட்டும்" என்று ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.

Advertisement
Next Article