சிதம்பரம் கோயிலில் ஆனித் திருமஞ்சன விழாக் கொடியேற்றம்!
சிதம்பரம் நடராஜர் கோயிலில் நடராஜருக்கு ஆண்டுக்கு ஆறு முறை திருமஞ்சனம் நிகழ்த்தப்படுகிறது. சித்திரை மாத திருவோணம், ஆனி மாத உத்திரம், மார்கழி மாத திருவாதிரை ஆகிய நாட்களில் நிகழ்த்தப்பெறும் திருமஞ்சனங்கள் நடசத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து நடத்தப்படுவன. மாசி, ஆவணி, புரட்டாசி மாதங்களில் வளர்பிறை சதுர்த்தசியில் திருமஞ்சனம் நடக்கும்.ஆனித் திருமஞ்சன விழாவை சிதம்பரத்தில் ஆரம்பித்து வைத்தவர் பதஞ்சலி மகரிஷி. இவர் ஆதிசேஷனின் அம்சம். இவ்விழா சிதம்பரத்தில் பத்துநாட்கள் சிறப்பாக நடக்கும். அதில் 9ம் நாள் தேரோட்டம் மிக முக்கியமானது. தேர்த் திருவிழாவில் பஞ்ச மூர்த்திகளும் 5 தேர்களில் எழுந்தருளி உலா வருவது கண்கொள்ளாக்காட்சி. மூலவர் நடராஜரே தேரில் எழுந்தருளி 4 மாட வீதிகளிலும் உலா வரும் அதிசயம் இங்கு மட்டுமே நடக்கிறது. அப்பேர்பட்ட சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்தியின் ஆனித்திருமஞ்சன தரிசன உற்சவம் இன்று ( புதன்கிழமை) காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.
சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்தி வீற்றுள்ள சித்சபை எதிரே உள்ள கொடிமரத்தில், பஞ்சமூர்த்திகள் முன்னிலையில் சுவாமியின் பிரதிநிதியான ஹஸ்தராஜரை முன்னிறுத்தி ஆவாகணம் செய்து இன்று காலை 7.15 மணிக்கு உற்சவ ஆச்சாரியார் சிவ.கிருஷ்ணசாமி தீட்சிதர் ரிசபக் கொடியை ஏற்றி வைத்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசித்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை ஏஎஸ்பி ரகுபதி மேற்பார்வையில் நகர காவல் இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு செய்திருந்தார்.
உத்சவ விபரம் வருமாறு: ஜூலை 4-ம் தேதி வெள்ளி சந்திர பிறை வாகன வீதிஉலா, 5-ம் தேதி தங்கச் சூரியப் பிறை வாகன வீதிஉலா, 6-ம் தேதி வெள்ளி பூதவாகன வீதிஉலா, 7-ம் தேதி வெள்ளி ரிஷப வாகன வீதிஉலா (தெருவடைச்சான்), 8-ம் தேதி வெள்ளி யானை வாகன வீதிஉலா, 9-ம் தேதி தங்க கைலாச வாகன வீதிஉலா,
10-ம் தேதி தங்க ரதத்தில் பிச்சாண்டவர் வீதிஉலாவும் ஜூலை 11-ம் தேதி வியாழக்கிழமை தேர்த்திருவிழா நடைபெறுகிறது. பின்னர் 11-ம் தேதி இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் ஏககால லட்சார்ச்சனை நடைபெறுகிறது. ஜூலை 12-ம் தேதி வெள்ளிக்கிழமை அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பு காலை 4 மணி முதல் 6 மணி வரை சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்திக்கு மகாபிசேகம் நடைபெறுகிறது. பின்னர் காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசியபூஜையும் பஞ்சமூர்த்தி வீதி உலா வந்த பின்னர் பிற்பகல் 3 மணிக்கு மேல் ஆனித்திருமஞ்சன தரிசனமும், ஞானகாச சித்சபா பிரவேசமும் நடைபெறுகிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் பொதுதீட்சிதர்களின் கமிட்டி செயலாளர் வெங்கடேச தீட்சிதர், துணைச் செயலாளர் சுந்தரதாண்டவ தீட்சிதர் மற்றும் பொதுதீட்சிதர்கள் செய்துள்ளனர்.