'ஆலன்' பட இசை&முன்னோட்ட வெளியீட்டு விழாத் துளிகள்!
3S பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர். சிவா எழுதி, இயக்கி, தயாரித்திருக்கும் 'ஆலன்' எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை இயக்குநர் கே. பாக்யராஜ் வெளியிட தயாரிப்பாளர் டி. சிவா பெற்றுக் கொண்டார்.இயக்குநர் ஆர். சிவா இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'ஆலன்' எனும் இந்த திரைப்படத்தில் வெற்றி, மதுரா, அனு சித்தாரா, கருணாகரன், விவேக் பிரசன்னா, 'அருவி' மதன் குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். விந்தன் ஸ்டாலின் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அறிமுக இசையமைப்பாளர் மனோஜ் கிருஷ்ணா இசையமைத்திருக்கிறார். விரைவில் வெளியாக இருக்கும் இந்தத் திரைப்படத்தை கிரியேட்டிவ் என்டர்டெய்னர்ஸ் & டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் எனும் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜி. தனஞ்ஜெயன் வழங்குகிறார்.'ஆலன்' திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியிட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் படக்குழுவினருடன் இயக்குநர் கே. பாக்யராஜ், தயாரிப்பாளர் டி. சிவா, இயக்குநர் கோபிநாத் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளரும், இயக்குநருமான ஆர். சிவா விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்று பேசுகையில், '' இது என்னுடைய இரண்டாவது திரைப்படம். இந்தத் திரைப்படத்தில் எழுத்தாளர்களைப் பற்றி பேசி இருக்கிறேன். ஏன் எழுத்துக்களை பற்றி பேசினேன்? என்றால்.. என்னுடைய 12 வயது முதல் 18 வயது வரை நிறைய புத்தகங்களை வாசித்திருக்கிறேன். கையில் கிடைக்கும் புத்தகங்கள் அனைத்தையும் படித்திருக்கிறேன். இந்த தருணத்தில் என்னுடைய பெற்றோர்கள் எப்போதும் என்னுடைய வாசிப்பிற்கு ஆதரவாகவே இருந்தார்கள். இதற்காகவே அவர்களுக்கு இந்த தருணத்தில் நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். வாழ்க்கைக்கு புத்தகத்தை படிப்பது எவ்வளவு முக்கியம் என்பதையும் நான் தெரிந்து கொண்டேன். இயக்குநர் கே. பாக்யராஜ் எழுதிய திரைக்கதை எழுதுவது எப்படி? என்ற புத்தகத்தை தேடி வாசித்த பிறகு தான் சினிமா மீது எனக்குள் ஒரு ஆவல் வந்தது. நாமும் ஒரு திரைப்படத்தை தயாரிக்க வேண்டும்... இயக்குனராக வேண்டும்... என்று எண்ணி சென்னை திரைப்படக் கல்லூரியில் சேர்ந்து பயில்வதற்கு முயற்சித்தேன். ஆனால் குடும்பத்தின் பொருளாதார சூழல் காரணமாகவும், குடும்ப பொறுப்பினை சுமக்க வேண்டும் என்பதற்காகவும் சிங்கப்பூருக்கு சென்றேன். அங்கு என்னுடைய வாழ்க்கை முப்பது ஆண்டுகள் கழிந்தது. அங்கு ஒரு மெக்கானிக்கல் இன்ஜினியராக ஒரு நிறுவனத்தை தொடங்கி இன்று வரை வெற்றிகரமாக நடத்தி வருகிறேன்.
இந்தத் திரைப்படம் ஆலன் அனைவருக்கும் பிடிக்கும். கஷ்டப்பட்டு படத்தை உருவாக்கி இருக்கிறோம். ஜெர்மனி, காசி, வாரணாசி, ரிஷிகேஷ், காரைக்குடி, கொடைக்கானல், ராமேஸ்வரம் என பல இடங்களுக்கு சென்று இந்த படத்தின் படப்பிடிப்பை நடத்தி இருக்கிறோம். இந்த படத்தின் கதை எனக்கு பிடித்திருந்தால் தயாரிப்பில் எந்த சமரசமும் இன்றி வன்முறையில்லாமல் தரமாக உருவாக்கி இருக்கிறோம். இந்தப் படத்தை வன்முறை கலந்து என்னால் உருவாக்கி இருக்க முடியும். ஆனால் கதையின் நாயகன் அந்த வன்முறையையும் கடந்து செல்கிறான். வாழ்க்கையை பார்வையிடுகிறான். ஒரு பலசாலியை எளியவன் தாக்க முடியுமா? எளியவன் திருப்பித் தாக்க முடியாத ஒரு விசயத்தை நாம் ஏன் திணிக்கிறோம்? எல்லாம் கலந்தது தான் இந்த உலகம் என்ன சொல்வார்கள். இல்லை என்று நான் மறுக்கவில்லை. ஆனால் இங்கு எது அதிகம் தேவைப்படுகிறது? அன்பும் காதலும் தான். அதுதான் அதிகம் தேவை. இயற்கையை கொண்டாடுங்கள். அன்பை கொண்டாடுங்கள். காதலை கொண்டாடுங்கள். இந்த உலகம் அமைதியாக வாழும். இந்த தலைமுறை அமைதியாக.. பாதுகாப்பாக.. வாழும். வீட்டில் மட்டும் பாதுகாப்பு கொடுத்தால் போதாது. வெளியில் செல்லும்போதும் பாதுகாப்பு இருக்க வேண்டும்.மேலும் இந்தப் படத்திற்காக நடித்த நடிகர்கள், நடிகைகள் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.'' என்றார் .
'ஆலன்' படத்தினை வழங்கும் விநியோகஸ்தரும், தயாரிப்பாளருமான ஜி. தனஞ்ஜெயன் பேசுகையில், '' இந்த திரைப்படத்தை நண்பர் ஒருவர் மூலமாக பார்வையிடும் வாய்ப்பு கிடைத்தது. படத்தின் டைட்டில் ஆலன் என்று இருந்தது. இது ஆங்கில படமா..! என்ற சந்தேகமும் எனக்குள் இருந்தது. நான் தினமும் நிறைய படங்களை பார்த்துக் கொண்டிருக்கிறேன். இந்த படத்தை பார்க்கத் தொடங்கியவுடன் தொடர்ந்து பார்த்தேன். இந்த படத்தை பார்த்தவுடன் இயக்குநர் சிவாவின் நம்பிக்கை தெரிந்தது.இந்த உலகத்திற்கு காதல்தான் முக்கியம் வன்முறை முக்கியமல்ல. அன்பைத் தேடி நாம் பயணித்தால் போதும்... வாழ்க்கை சிறக்கும். வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும் என்பதை இந்த படத்தில் சொல்லியிருக்கிறார். இந்த திரைப்படத்தை நான் ஒரு கவித்துவமான படைப்பாக பார்க்கிறேன்.
இந்தப் படத்தை பற்றி அவர் என்னிடம் பேசும் போது இந்த திரைப்படம் மக்களை சென்றடைய வேண்டும். அதற்கு உதவி செய்யுங்கள் என்று தான் கேட்டார். ஒரு படைப்பாளியாக வெற்றி பெற வேண்டும் என்றார். நானும் அவரைப் போல் சினிமாவை நேசிப்பதால் இதற்கு என்னாலான உதவிகளை செய்ய சம்மதித்தேன். இந்தப் படத்திற்காக நான் சில ஆலோசனைகளை வழங்கிய போது எந்தவித மறுப்பும் சொல்லாமல் செய்தார். இந்தப் படத்தை பார்க்கும் போது.. மக்களுக்கு தேவையான விசயத்தை தான் இயக்குநர் சொல்லி இருக்கிறார் என்பதை அனைவரும் உணர்வீர்கள். இந்தத் திரைப்படத்தை வெகுவிரைவில் வெளியிட திட்டமிட்டு இருக்கிறோம். அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்'' என்றார்.
பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா பேசுகையில், '' இந்த படத்தில் இடம்பெறும் நான்கு பாடல்கள் இந்திய செவ்வியல் இசையை முதன்மையாகவும், அதற்கு இணையாக மேல்நாட்டு இசைத் தாளத்தை துணையாகவும் கொண்டு பாடல் உருவாகி இருக்கிறது. இதற்காக இசையமைப்பாளர் மனோஜ் கிருஷ்ணாவிற்கு என்னுடைய வாழ்த்துக்கள். இசையமைப்பாளர் மனோஜ் கிருஷ்ணா சிறிய வயதில் இருந்தே இசை துறையில் பணியாற்றி வருகிறார். திரை துறையில் தான் அவருக்கு இது முதல் திரைப்படம். இந்தப் படத்தின் பாடல்களை பொறுமையாகவும், மன அமைதியுடனும் கேட்கும் போது... இந்த நிலத்திற்கான தாளத்தை உங்களால் கேட்க முடியும்.'நம்முடைய அழுக்குகளை நாமே குறைத்துக் கொண்டு வருவது.. அதன் மூலம் நாம் மேலே உயர்ந்து எழுவது' என சைவ சித்தாந்தம் வலியுறுத்தும் கருத்தை என் வாழ்க்கையில் நான் கடைப்பிடித்த போது என் வாழ்க்கையிலும் மாற்றம் ஏற்பட்டது. என் எழுத்திலும் மாற்றம் ஏற்பட்டது.'ஆலன்' என்ற தலைப்பு கேட்கும் போதெல்லாம் எனக்கு நெருக்கமானதாக இருந்தது. மேலும் இந்த படம் எனக்குள் நெருக்கமாக இருப்பதற்கு என்னுடைய இளைய சகோதரர் நடிகர் விவேக் பிரசன்னா இந்த படத்தில் நடித்திருக்கிறார் என்பதும் ஒரு காரணம்.சிவன் அருளால் சிவா இயக்கிய ஆலன் திரைப்படம் வெற்றி அடைய வேண்டும் என வாழ்த்துகிறேன்'' என்றார்.
இசையமைப்பாளர் மனோஜ் கிருஷ்ணா பேசுகையில்,'' இது என்னுடைய முதல் படம். இந்தப் படத்திற்கு பாடல் எழுதிய பாடல் ஆசிரியர் கார்த்திக் நேத்தாவின் தீவிர ரசிகர் நான். நான் இசையமைத்த மற்றொரு படத்திற்கும் அவர்தான் பாடல்களை எழுதி இருக்கிறார். இந்தப் படத்தில் இடம்பெறும் நான்கு பாடல்களையும் அவர்தான் எழுதியிருக்கிறார். நான் அவருக்கு மெட்டுகளை அனுப்பி வைப்பேன். அவர் அதற்கு பாடல் வரிகளை எழுதி அனுப்புவார். அத்துடன் ஏதாவது திருத்தம் மேற்கொள்ள வேண்டுமா? என கேட்பார். இதற்கு மேல் திருத்தம் தேவையில்லை என நான் சொல்வேன். சிறப்பான பாடல் ஆசிரியர். அவருடைய வார்த்தைகள் தான் இந்த பாடல்களுக்கு உயிர் கொடுத்திருக்கிறது. அவருக்கு இந்த தருணத்தில் நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.படத்தில் கதையின் நாயகனாக நடித்திருக்கும் வெற்றியின் நடிப்பு நன்றாக இருந்தது. படத்தில் நடித்த அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். '' என்றார்.
கவிஞர் மனுஷ்யபுத்திரன் பேசுகையில், '' படத்தின் தயாரிப்பாளரும் இயக்குநரான சிவா என்னுடைய சிறந்த வாசகர். அவரும் ஒரு எழுத்தாளர். என் இனிய நண்பர்.
தான் சம்பாதித்த பணத்தை வைத்து ஒரு நல்ல படமாக வழங்க வேண்டும் என நினைக்கிறார். சமூகத்துக்கு நல்லதொரு செய்தியை சொல்லும் படைப்பாக தர வேண்டும் என நினைக்கிறார். சினிமாவில் சமூக பொறுப்புணர்வு உள்ள படைப்பாளியாக வரவேண்டும் என விரும்புகிறார். இதனை அவரிடம் நடந்த தொடர் உரையாடல்கள் மூலம் நான் தெரிந்து கொண்டேன்.இந்தப் படத்தில் நானும் என்னுடைய பங்களிப்பை வழங்கி இருக்கிறேன். அந்த தருணத்தில் நண்பருடன் இருக்கிறேன் என்ற உணர்வு தான் எழுந்தது.
அவருடைய கனவுகள் வெல்லட்டும். இந்தத் திரைப்படம் தனஞ்செயன் வழங்குகிறார் என்ற உடன் எனக்கு மிகப்பெரிய நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. அவர் தன்னாலான அனைத்து முயற்சிகளையும் இந்த திரைப்படத்திற்காக மேற்கொள்வார்.இந்தப் படம் வெற்றி பெறட்டும். தயாரிப்பாளராகவும், இயக்குநராகவும் நண்பர் சிவா வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்'' என்றார்.
நடிகர் வெற்றி பேசுகையில், ''ஆலன் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியிட்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக வருகை தந்திருக்கும் அனைவருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் திரைப்படத்தில் கதாநாயகனாக நடிப்பதற்கு எனக்கு வாய்ப்பளித்த இயக்குநர் - தயாரிப்பாளர் சிவாவிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.தொடர்ந்து திரில்லர் திரைப்படங்களை தான் செய்து கொண்டிருக்கிறோம். ஒரு காதல் படத்தில் நடிப்போம் என்று யோசித்து கொண்டிருக்கும்போது.. சிவா சார் இப்படத்தின் திரைக்கதையை என்னிடம் கொடுத்தார். படித்தவுடன் இரண்டு விசயங்கள் தான் எனக்குள் தோன்றியது. இந்தப் படத்தை சிறிய பட்ஜெட்டில் தயாரிக்க முடியாது. பிரம்மாண்டமாக பெரிய பட்ஜெட்டில் உருவாக்க வேண்டும். அடுத்ததாக இசையமைப்பாளர் திறமையானவராக இருக்க வேண்டும் என நினைத்தேன். காதல் கதை என்பதால் இது முக்கியம் என தயாரிப்பாளிடம் சொன்னேன். அவரே இயக்குநர் என்பதால் அவருடைய கற்பனைக்காக செலவு செய்ய தயாராக இருந்தார். படத்தினை கஷ்டப்பட்டு தான் உருவாக்கியிருக்கிறோம். படத்தில் நடித்த சக கலைஞர் அனைவரும் நன்றாக தங்களுடைய உழைப்பை வழங்கி இருக்கிறார்கள். இசையமைப்பாளர் மனோஜ் கிருஷ்ணா சிறந்த இசையை வழங்கி இருக்கிறார். இது போன்ற புதிய முயற்சிகளுக்கு ஆதரவு அளியுங்கள்'' என்றார்.
இயக்குநர் கே. பாக்யராஜ் பேசுகையில், ''இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற 'ஓம் நமச்சிவாய' என்ற பாடல் ஒலித்தது. ஓம் நமச்சிவாய என்றவுடன் அது ஆன்மீகமாகத்தான் இருக்கும் என்று எதிர்பார்ப்பை பொய்யாக்கி, அதை ஒரு கமர்ஷியல் ரிதமாக மாற்றி இசையமைத்திருந்தார் அறிமுக இசையமைப்பாளர் மனோஜ் கிருஷ்ணா. இதையே பிரமிக்க வைக்கும் வகையில் உருவாக்கி இருந்தார் என்றால் படத்தில் அனைத்து பாடல்களையும் அவர் சிறப்பாக உருவாக்கி இருப்பார். அதனால் இந்த தருணத்தில் அவருக்கு நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.சிறிய முதலீட்டு திரைப்படங்களை திரையரங்கத்திற்கு கொண்டு வருவதில் பெரு முயற்சி செய்து வருபவர் தனஞ்செயன். அவர் இந்தப் படத்திலும் இணைந்திருப்பதற்காக அவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
வெற்றி என்று சொன்னால் வித்தியாசமான கதையை தேர்வு செய்து நடிப்பவர் என்ற ஒரு எண்ணம் அனைவரிடத்திலும் இருக்கிறது எனக்கும் அந்த எண்ணம் இருக்கிறது. இவர் எல்லா படங்களையும் ஒப்புக்கொண்டு நடிப்பவர் அல்ல என்பது ரசிகர்களுக்கும் தெரியும். ஏதாவது வித்தியாசம் இருந்தால் தான் இவர் நடிக்க ஒப்புக் கொள்வார் என்பதால்... அவர் நடிப்பில் உருவாகி இருக்கும் ஆலன் திரைப்படம் வித்தியாசமாக இருக்கும். இந்தப் படத்தை தேர்வு செய்து நடித்ததற்காக நடிகர் வெற்றிக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். உங்களது இந்த வெற்றிப் பயணத்தை மாற்றிக் கொள்ளாமல்... புதிய முயற்சிக்கு மேற்கொள்ளுங்கள். இதுவும் காதல் கதை தான். ஆனால் இதிலும் கமர்ஷியல் கலந்திருக்கிறது. ஆனால் இன்று கூட ஆலன் என்றால் என்ன? என்று எனக்குத் தெரியவில்லை. இது தொடர்பாக சிவாவிடம் கேட்டபோது ஆலன் என்றால் சிவன் என்றார். இது எனக்கு ஒரு புது விசயமாக இருந்தது.இந்தப் படம் காதலும் ஆன்மீகமும் கலந்த படம். இந்தப் படத்தின் முன்னோட்டத்தில் ஒரு வசனம் வரும். 'எதை நீ அதிகமாக நேசிக்கிறாயோ.. அதுவே ஆன்மிகம். ' இதுவும் என்னைக் கவர்ந்தது.சேவை மனப்பான்மையுடன் திரைத்துறைக்கு வருகை தந்திருக்கும் சிவா வெற்றி பெற வேண்டும். இந்தப் படத்தின் மூலம் மக்களுக்கு அன்பின் வலிமை புரிய வேண்டும் என இயக்குநர் சிவா விரும்பி இருக்கிறார். தூய்மையான ஆன்மீகம் என்பது அன்பு என்பதையும் சொல்லி இருக்கிறார். எனவே சிவாவின் ஆலன் திரைப்படம் பெரும் வெற்றியை பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்'' என்றார்.