ஆடு ஜீவிதம் - விமர்சனம்
ஆடு ஜீவிதம் சினிமா, அதே பெயரைக் கொண்ட பென்யமின் என்ற எழுத்தாளரின் மலையாள மொழி நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படமாக்கும். கேரளாவில் வெளியான சமகால இலக்கியங்களில் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கும் இந்த நாவல், அதிகம் விற்பனையான புத்தகங்களின் வரிசையிலும் முன்னணி இடத்தில் இருக்கிறது. மலையாளத்தில் 255 பக்கங்களுடன் வெளியான இந்த நூலை தமிழில் உயிர்மை பதிப்பகம் வெளியிட்டது. சிறை, பாலைவனம், தப்பித்தல், அடைக்கலம் என நான்கு பகுதிகளாக விரியும் இந்தக் கதை பல பதிப்புகளாக மலையாளம் பேசும் பெரும்பகுதி மக்களால் படிக்கப்பட்ட நாவல்களுள் ஒன்று. பாலைவனக் கொடுமை, விதிகள் அற்ற அல்லது விதிகளை மதிக்காத சிறைச்சாலை நடைமுறைகள், நிலத்தின் பண்பு, ஆங்காங்கே பூக்கும் அன்பு, உணவுப் பண்பாடு என அனைத்தையும் தனது கதைக்குள் கொண்டு வந்திருக்கிறார். அப்பேர்பட்ட நாவலை கடந்த 16 வருடங்களை செலவிட்டு மிக தத்ரூபமாக வழங்கி இருக்கிறார் டைரக்டர் பிளஸ்ஸி ..
அதாவது கேரளாவில் உள்ள ஒரு வில்லேஜில் வாழும் நஜீப் வளைகுடா நாடு போய் கை நிறைய சம்பாதிக்க ஆசைப்பட்டு ஏஜென்ட் ஒருவரை அணுகி பணம் தந்து விசா எல்லாம் வாங்கி வளைகுடா நாட்டிற்குச் செல்கிறான். அங்கே ஒரு ஷேக் இவனையும், இவன் நண்பனையும் விசாவை பறித்துக்கொண்டு பல மைல் தள்ளியுள்ள ஒரு பாலைவனத்தில் ஆடு ஒட்டகங்கள் மேய்க்க விட்டு விடுகிறார். நண்பனை வேறொரு இடத்திற்கு மாற்றிவிடுகிறார். அந்தபாலைவனத்தின் வெப்பத்திலும், பசியாலும் துடிக்கிறார் நஜீப். எதிர்த்து கேள்வி கேட்கும் நஜீப்பை அடித்து சித்ரவதை செய்கிறார் ஷேக். தப்பிக்க முயற்சி செய்யும்போது காலை ஒடித்துவிடுகிறார். ஒருவழியாக தன் நண்பனைச் சந்தித்து, ஒரு ஆப்பிரிக்கனுடன் சேர்ந்து பாலைவனம் கடந்து தார் சாலையை அடைந்து தப்பிக்க முயற்சி செய்கிறான் நஜீப். தாகமும் கடுமையான வெப்பமும் இவர்களை கொஞ்சம் கொஞ்சமாக கொல்கிறது. நண்பன் வழியில் இறந்து போகிறான். மற்ற இருவரும் தார் சாலையை அடைந்து தப்பித்தார்களா என்பதே இப்படத்தின் கதை.
ஹீரோவாக நடித்திருக்கும் பிரித்விராஜ் அந்த கேரக்டராகவே வாழ்ந்து விட்டார் போலும். மிக கடுமையான உழைப்பு அவரது உடலிலும், நடிப்பிலும் அப்பட்டமாக தெரிகிறது. சாக்லேட்பாயாட்டம் வாட்டசாட்டமான உடலமைப்போடு அறிமுகம் ஆகிறவர், பாலைவன வாழ்க்கைக்குப் பிறகு ஒட்டிய வயிறு, எலும்புகள் தெரியும் உடலமைப்பு என கேரக்டரின் மாற்றங்களுக்காக தன்னை கடுமையாக வருத்திக் கொண்டு ஆக்ட் கொடுத்திருப்பது பிரமிக்க வைக்கிறது. உடலில் மட்டும் இன்றி குரலிலும் ஒவ்வொரு காலக்கட்டத்திற்கு ஏற்ப மாற்றத்தை வெளிப்படுத்தியிருப்பவர், பல இடங்களில் தனது சிறு சிறு அசைவுகளின் மூலமாகவே அடிமையாக பல இன்னல்களை அனுபவித்த நஜீமின் வாழ்க்கையை நம்முள் எளிதில் கடத்திவிடுபவருக்கு தேசிய விருதே கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. அமலா பால் ரொம்ப காலத்திற்கு பின்னர் திரையில் தோன்றியிருக்கிறார். அழகிலும், நடிப்பிலும் மிளிரும் அமலா பாலின் காட்சிகள் குறைவாக இருப்பது ரசிகர்களுக்கு ஏமாற்றமளிக்கிறது. பிரித்விராஜ் உடன் சவுதிக்கு சென்று பாலைவனத்தில் கஷ்ட்டப்படும் கே.ஆர்.கோகுல், பிரித்விராஜை காப்பாற்ற முயற்சிக்கும் ஆப்பிரிக்க அடிமையாக நடித்திருக்கும் ஜிம்மி ஜூன் லூயிஸ், ஆட்டு மந்தையின் முதலாளியாக நடித்திருக்கும் அரபு நாட்டுக்காரர் என படத்தில் நடித்திருப்பவர்கள் அனைவரும் ஸ்கோர் செய்திருக்கிறார்கள்.
முழுக்க முழுக்க பாலைவனத்தில் நடக்கும் இப்படத்தில் காட்சிகள் ஒவ்வொன்றும் பார்வையாளனே பாலைவனத்தில் இருப்பதைப் போன்ற உணர்வை ஏற்படுத்தி விடுகின்றன. அப்படி, இப்படி வித்தியாசம் ஏதும் காட்ட முடியாத வெறும் மணல் பரப்புகளை மட்டுமே எடுப்பது என்பது மிகவும் சவாலான ஒரு பணி. ஆனால் கேமராமேன் சுனில் கே.எஸ் வளைகுடாவின் பாலைவன வெப்பத்தையும் ,முன்னதாக கேரளாவின் குளிர்ச்சியையும் ஒளிப்பதிவில் சரியாக படம் பிடித்து அசத்தி உள்ளார் . அதிலும் பாலைவனப் புயலை கண் முன் உணர செய்ததில் ரசல் பூக்குட்டியின் ஒலி அமைப்பு பணி தனித்து தெரிகிறது. இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படமாம். இதன் டைட்டில் தொடங்கும்போது, ஒலிக்க ஆரம்பிக்கும் ரஹ்மானின் புல்லாங்குழல் தொடங்கி முதல் பாதியில் வரும் பாடல் மற்றும் படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் எல்லாம் அஹா.. ஓஹோ.. பேஷ்..பேஷ் ரக. குறிப்பாக ஆக்ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது.
ஒரு மனிதனின் வாழ்க்கையில் இம்புட்டு சோகங்களா? என்று அதிர்ச்சியளிக்கும் வகையில் காட்சிகளை தொகுத்திருந்தாலும், அதன் நீளத்தை குறைக்க வழி இல்லையா? என்ற கேள்வியையும் ரசிகர்கள் மனதில் எழ வைத்து விடுகிறா படத்தொகுப்பாலர் ஸ்ரீகர் பிரசாத். நாவலை படமாக்குவது என்பது மிக சவாலான விசயம், அதிலும் நிஜத்தில் ஒரு மனிதன் அனுபவித்த இப்படிப்பட்ட வாழ்க்கையை, காட்சிகளாக சித்தரிக்கும் போது அவை ரசிகர்களிடம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். அந்த வேலையை இந்த படம் செய்ததா? என்றால் இல்லை என்பது தான் படம் பார்ப்பவர்களின் பதிலாக இருக்கும். தனிமை, ஏக்கம், கடவுளால் கைவிடப்பட்ட ஏமாற்றம், தன்னைச் சுற்றி இருக்கும் விலங்குகள் உடன் நஜீப் உரையாடுவது என பலவிதமான உணர்ச்சி நிலைகளை புத்தகத்தில் வரும் நஜீபின் மனப்பதிவுகளில் நம்மால் தெரிந்து கொள்ள முடியும் ஆனால் படத்தில் அப்படியான தருணங்கள் மிஸ்ஸிங்..
மொத்ததில் உயிர் பிழைக்கும் ஒரு மனிதனின் போராட்டத்தை 2 மணி 51 நிமிட நேர படமாக ஆக்கியிருக்கிறார் பிளெஸ்ஸி. ஆனால் ஏனோ படித்தக் கதைக்குரிய கனத்தை கொடுக்க இப்படம் தவறி விட்டது.
மார்க் 3.5/5