புத்தகத் திருவிழாவில் 'மஞ்சள் பத்திரிகை' ரக நகைச்சுவையாளர்!
மதுரை புத்தகத் திருவிழாவில் பேச விஜய் டிவி ராமரை அழைத்திருக்கிறார்கள். அறிவுசார் நிகழ்வொன்றில் அவர் அவசியமில்லை என்றும், அறிவுத் தூய்மைவாதம் பேசாதீர்கள் என்றும் இருவேறு விவாதங்கள் போய் கொண்டிருக்கிறது.இங்கு ராமர் என்பவர் வெறும் நகைச்சுவையாளர் மட்டும் அல்ல. அவர் ஒரு இரட்டை அர்த்தப் பேச்சாளர். அவர் வரும் எந்த ஒரு டிவி நிகழ்ச்சியையும் நாகரிகமாக பேசி, நடத்தி முடித்தது கிடையாது. அவருடைய பேச்சுக்களை பீப் சவுண்ட் இல்லாமல் ஒலிக்கவிட்டு வெட்கமே இல்லாமல் டிவி நிறுவனங்களும் கல்லா கட்டுகின்றன.
இந்த ராமர்தான், 'காச உண்டியல்ல போடாம, உன் கு' என்று சட்டென நிறுத்தி மலினமான கிளர்ச்சிக்கு பார்வையாளர்களை கொண்டு போய் சிரிக்க(?) வைப்பார். இதெல்லாம் அவர் பாணிக்கு கொஞ்சம் நாகரிகமானவை. ஆண், பெண் பாகுபாடு இல்லாமல் தொங்குது, ஒழுகுது, வீங்குது போன்ற அவரது சம்பாஷனைகள் எல்லாம் குடும்பமாக டிவியில் பார்க்கும்போதே முகம் சுளிக்க வைப்பவை.
இப்படியான அடையாளத்தைக் கொண்ட மனிதரை புத்தகக்காட்சி போன்றதொரு நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக அனுமதிப்பது எப்படி சரியானதாக இருக்கும். அவரை அங்கீகரித்து, அவரை வைத்து சம்பாதித்த விஜய் டிவி வேண்டுமானால் அவருக்கு விருது வழங்கிக் கொள்ளலாம். வெகுமக்களின் ஒரு பொதுவான நிகழ்வில் அவரை கவுரவிக்க நமக்கு என்ன இருக்கிறது.
அவரும் ஒரு எழுத்தாளர்தான் என்ற அடிப்படையில் 'சரோஜா தேவி' மஞ்சள் பத்திரிகை எழுத்தாளரையும் மேடை ஏற்றி பேச வைக்கலாமா..? அந்த வகையில் ராமரும் ஒரு 'மஞ்சள் பத்திரிகை' ரக நகைச்சுவையாளர்தான். மேலும் இந்த விசயத்தில் விமர்சிப்பவர்களை ஏதோ தூய்மைவாதி போல் சித்தரிக்கும் போக்கு நகைச்சுவையானது. விஜய் டிவி ராமரை யாரும் இங்கு வெறுக்க இல்லை. அவரது பங்கேற்பை கேள்வி கேட்கவும் இல்லை. அறிவுப் பண்ணையில், இரண்டாம் தரமான பேச்சாளரான அவரது மேடைப் பங்கேற்புதான் நம்மை விமர்சிக்க வைக்கிறது.