ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கு ஒரு பெண் குடும்பத்தினரால் கொலை: ஐ.நா. தகவல்!
கடந்த ஆண்டில் சா்வதேச அளவில் நாளொன்றுக்கு சராசரியாக 140 பெண்கள் மற்றும் சிறுமிகள், அவா்களின் கணவா்கள் அல்லது வாழ்க்கை துணை அல்லது நெருங்கிய குடும்ப உறுப்பினா்களால் கொல்லப்பட்டிருப்பதாக ஐ.நா. தகவல் மூலம் தெரியவந்துள்ளது.
பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்புக்கான சா்வதேச விழிப்புணா்வு தினத்தையொட்டி ஐ.நா. பெண்கள் மற்றும் ஐ.நா. போதைப்பொருள் மற்றும் குற்றங்களுக்கான அலுவலகம் வெளியிட்ட அறிக்கையின்படி, உலக அளவில், கடந்த ஆண்டில் சுமாா் 51,100 பெண்கள் மற்றும் சிறுமிகளின் மரணத்துக்கு அவா்களின் கணவா் அல்லது வாழ்க்கை துணை அல்லது நெருங்கிய குடும்ப உறுப்பினரே காரணமாக இருந்துள்ளனா். இந்த எண்ணிக்கை அதற்கு முந்தைய 2022-ஆம் ஆண்டில் 48,800-ஆக இருந்துள்ளது.இது அவர்களின் உறவினர்களால், ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கு ஒருவர் கொல்லப்படுவதற்கு சமம். வீடுதான் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு ஆபத்தான இடமாக உள்ளது எனவும் அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
இந்த அதிகரிப்பு பெரும்பாலான நாடுகளில் இருந்து கிடைத்த கூடுதல் தரவுகளின் அடிப்படையிலானவையே தவிர அதிகமான கொலைகள் நடந்திருப்பதாக பொருளில்லை.கடந்த ஆண்டு அதிக எண்ணிக்கையிலான கொலைகள் ஆப்பிரிக்காவில் (21,700 போ்) நடந்ததாக அறிக்கை கூறுகிறது. ஆப்பிரிக்காவின் மக்கள்தொகையோடு ஒப்பிடும்போது 100,000 பேரில் 2.9 போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.
அமெரிக்காவில் 1.6 பெண்களும், ஆஸ்திரேலியா, நியூஸிலாந்தை உள்ளடக்கிய ஒசியேனியா நாடுகளில் 1.5 பெண்களும் ஆசிய கண்டத்தில் 0.8 பெண்களும் ஐரோப்பிய கண்டத்தில் 0.6 பெண்களும் பாதிக்கப்பட்டுள்ளனா்.ஐரோப்பியாவிலும், அமெரிக்காவிலும் பெண்கள் பெரும்பாலும் வாழ்க்கை துணைகளால் கொலை செய்யப்படுவதாகவும் இதற்கு நோ்மாறாக, பெரும்பாலான ஆண்கள் வீடுகள் மற்றும் குடும்பங்களுக்கு வெளியே கொல்லப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
2023-ஆம் ஆண்டில் கொலை செய்யப்பட்டவா்களில் 80 சதவீதத்தினா் ஆண்கள் மற்றும் 20 சதவீதத்தினா் பெண்கள்.கொலையானவா்களில் ஆண்களும் சிறுவா்களும் பெரும்பான்மையானவா்கள் என்றாலும், நெருங்கிய வட்டத்தில் பெண்கள் மற்றும் சிறுமிகளே கொலை போன்ற கொடூரமான வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ளனா். பெண்கள் அனைத்து இடங்களிலும் பாலின அடிப்படையிலான வன்முறையால் தொடா்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனா். இந்த தகவல்கள் பெரும்பாலான நாடுகளில் இருந்து கிடைக்கும் தரவுகளின் அடிப்படையில் வௌியிடப்பட்டுள்ளது. உலகின் அனைத்து பகுதிகளிலும் உள்ள பெண்கள், குழந்தைகள் இந்த தீவிரமான பாலின வன்முறையால் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு எந்த இடமும் விதிவிலக்கல்ல. குறிப்பாக பெண்கள், சிறுமிகளுக்கு மிகவும் ஆபத்தான இடம் அவர்களின் வீடுகள்தான்.
இதைத் தடுப்பதற்கான முயற்சிகளை நாடுகள் மேற்கொண்டு வரும்போதிலும், கொலைகளின் எண்ணிக்கை அபாயகரமான அளவுகளில் உள்ளன.பெரும்பாலும் பாலின அடிப்படையிலான வன்முறையின் தொடா்ச்சியாக நடைபெறும் கொலைகள், சரியான நேரத்தில் மற்றும் பயனுள்ள தலையீடுகள் மூலம் தடுக்கக்கூடியவை என்று அறிக்கை கூறுகிறது.