தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

வாக்கு உங்களுக்கு முன்னிருக்கிற பண்டம் அல்ல...-எங்களின் உரிமை!

07:31 PM Apr 08, 2024 IST | admin
Advertisement

ன்பார்ந்த வேட்பாளப் பெருமக்களுக்கு,

Advertisement

வணக்கம்!

நாடாளுமன்றத் தேர்தல் நடக்க இருக்கும் இச்சமயத்தில் நீங்கள் தான் வாக்காளர்களிடம் பேசுவீர்கள்; துண்டுப் பிரசுரம் கொடுப்பீர்கள்.

Advertisement

இது மாறுதலான பகிரங்கக் கடிதம்.

தமிழகத்தில் தேர்தல் களத்தில் 950 பேர் வேட்பாளர்களாகப் போட்டியிடுகிறீர்கள். இதில் தேசியம், திராவிடம், தமிழ்த் தேசியம், சுயேச்சை என்று எல்லோரும் கலந்து கட்டி அணிவகுத்து நிற்கிறீர்கள்.

இதிலிருந்து 39 பேர்களைத் தேர்ந்தெடுப்பது எவ்வளவு கஷ்டம்? பாருங்கள்.

இப்போது ரொம்பவும் ‘பிஸி’ யாக இருப்பீர்கள் நீங்கள்.

இருந்தாலும், சில விஷயங்களை உங்களிடம் சொல்ல வேண்டியதிருக்கிறது.

உங்களில் பலர் பொது மக்களிடம் காட்டும் வித்தைகளைப் பார்க்கும்போது, குரங்கு வித்தைக்காரன் கூடத் தோற்றுப்போவான். போங்கள்.

அவ்வளவு தூரத்திற்கு “ஆட்றா ராமா.. ஆட்றா” என்று குரல் கேட்கிற மாதிரிச் சமத்தாக உச்சி வெயிலில் வித்தை காட்டுகிறீர்கள். எங்கள் தெரு அடிகுழாயை அடிக்கிறீர்கள். வியப்பாய் அதில் தண்ணீர் வருவதைப் பார்த்து ரொம்பவும் அகலமான சிரிப்புச் சிரிக்கிறீர்கள்.

தோசையை வட்டமாகச் சுடுகிறீர்கள். காப்பியை ஆற்றி உறிஞ்சிக் குடிக்கிறபோது, காமிராக்கள் மின்னுகின்றன. புரோட்டாவை ஒரு சுழற்று சுழற்றிச் சாமர்த்தியம் காட்டுகிறீர்கள். ஆம்லேட் போட்டு கோழிக்குச் சாபவிமோசனம் கொடுத்து அருள் பாலிக்கிறீர்கள்.

ஆட்டம் போடுகிறவர்களுடன் சேர்ந்து குத்தாட்டம் போடுகிறீர்கள். கிரிக்கெட் மட்டையைக் கையில் ஏந்திப் பந்தை லாவகமாக அடித்துக் காட்டுகிறீர்கள். கூட்டம் கைதட்டுகிறது.

சம்மணம் கூட்டி அமர்ந்து சில வீடுகளில் சாப்பாட்டை விழுங்கிக் காட்டுகிறீர்கள். அதுவும் தடையில்லாமல் உங்கள் வயிறுக்குப் போகிறது.

வழியில் சாக்கடைக் குழிக்குள் தொழிலாளச் சகோதரர்கள் இறங்கிச் சுத்தப்படுத்தும் குழிகளுக்கு அருகில் மட்டும் பலரும் மௌனமாககக் கடந்து போகிறீர்கள்.

இந்த நேரத்திலும் நீங்கள் பேசுகிற கூட்டங்களுக்கு சில நூறு ரூபாய்களைக் கொடுத்து மந்தையைப் போல, எங்கள் மக்களை அழைத்துச் செல்கிறீர்கள்.

தேசியத் தலைவர்கள் வந்து மழலைத் தமிழ் பேசும் கூட்டங்களுக்கும் எண்ணிக்கை காட்ட வெயிலில் அவர்களை வாட வைக்கிறீர்கள். மாணவ மணிகளை அணிவகுக்கச் செய்கிறீர்கள்.

நீங்கள் அதிகாரப் பதவியேற இவர்கள் உயிருள்ள படிகள்.

இலவசங்களை ஆளுக்கு ஆள் அள்ளி விதைத்திருக்கிறீர்கள். அதற்கான நிதி ஆதாரத்தை எங்கிருந்து பெறுகிறீர்கள் என்று எங்களில் யாராவது ஒருவர் கேட்டால், அதற்கான புள்ளிவிபர ஆதாரங்களை உங்களால் சொல்ல முடியுமா?

டாஸ்மாக் மாதிரி இலவசங்களும் இங்கு இன்னொரு போதையைப் போல ஆகிவிட்டன.

இரவு நேரங்களில் திடீரென்று மின்சாரம் நிறுத்தப்படுகிறது. நிழலைப் போல சில மனிதர்கள் ஓடி வருகிறார்கள். சில்லறையான பணத்தைக் கொடுக்கிறபோது, அவர்களின் ஊழலுக்கு நாங்களும் பங்குதாரர் ஆனதைப் போலிருக்கிறது.

நள்ளிரவில் எங்களிடம் ஏப்ரல் முதல் தேதியை நினைவூட்டுகிறீர்கள். எங்களுடைய இல்லாமையையும், இயலாமையையும் நீங்கள் மலிவான கூலிக்கு வாங்க முற்படுகிறீர்கள்.

வாங்கிய கூலிக்கு நன்றி காட்டி வாக்களிக்கச் சொல்லி நகர்கிறார்கள் உங்களுடைய ஆட்கள்.

நன்றி, விசுவாசம் என்பதற்கு என்ன அர்த்தம் என்பது தமிழகச் சூழலில் எங்களுக்கு விளங்கவில்லை.

கொரோனாவாலும், அடுத்தடுத்த பண மதிப்பிழப்பாலும்
சீர்குலைந்து கிடக்கிற வாழ்வு
குறித்து அக்கறை கொள்ளாமல் திசை மாற்றுகிறீர்கள்.
வேறு பக்கம் விரலை நீட்டுகிறீர்கள்.
நீட்டிய விரலை நாங்கள்
வேடிக்கை பார்க்கிறோம்.

நேற்றை நீங்கள் உங்கள் சௌகர்யங்களுக்காக மறந்துவிடலாம். நாங்களும் அதே மாதிரி உங்களுடைய நேற்றைய நினைவை மறந்துவிட முடியாது.

எங்களுடைய வாக்குகளுக்கு யாரோ விலை பேசலாம்.

ஆனால் யாருக்கு வாக்களிப்பது என்பதை நாங்கள் தான் முடிவு செய்வோம்.

எந்திரத்தனமாக நாங்கள் வாக்களிப்போம் என்றும் நீங்கள் நினைத்துவிடக்கூடாது.

இயந்திரங்களையோ, அவற்றை இயக்குகிறவர்களையோ மட்டும் நம்பிவிடவும் கூடாது.

எந்த முறைகேடுகள் நடந்தாலும், அதில் ஒரு மனிதன் மனிதமுள்ள மனிதனாக இருந்தால், அனைத்தும் வெளிச்சத்திற்கு வந்துவிடும்.

எங்களின் கைகளில் பதிய வைக்கப்படுகிற மை சில வாரங்களில் அழிந்துவிடும். ஆனால் வாக்களிக்கும் மக்களின் ஜனநாயகத்தையே களங்கப்படுத்த யாராவது முயன்றால், அவர்களை வரலாறு ஒதுக்கி வைத்துவிடும்.

அந்தக் காலத்திலேயே குடவோலை மூலம் வாக்களிப்பை உலகிற்கு அறிமுகப்படுத்திய பெருமை படைத்தவர்கள் நம் முன்னோர் என்பது வாக்குக் கேட்கும் உங்களுடைய நினைவுகளில் இருக்கட்டும்.

வாக்கு உங்களுக்கு முன்னிருக்கிற பண்டம் அல்ல.

எங்களின் உரிமை.

அதை நாங்களும் மதிக்கிறோம். நீங்களும் மதியுங்கள்.

அன்புடன்

சாமானியன் ( மணா).

Tags :
candidateselectionrightsvotevoters
Advertisement
Next Article