தமிழக அரசுக்கும், கோத்ரேஜிற்கும் ஒரு வெற்றிகரமான நிகழ்விது!
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் இன்று செங்கல்பட்டு மாவட்டத்தில், ரூ.515 கோடி முதலீட்டில் 1000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், கோத்ரேஜ் கன்ஸ்யூமர் ப்ராடக்டஸ் நிறுவனத்தின் உலகத்தரம் வாய்ந்த உற்பத்தி ஆலையை தொடங்கி வைத்து ஆற்றிய உரை:-
கோத்ரெஜ் நிறுவனத்தின் நுகர்வோர் பொருட்கள் உற்பத்திக்கான அதிநவீன ஆலையை துவக்கி வைப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்! பெருமைப் படுகிறேன்! வரலாற்றுச் சிறப்புமிக்க தமிழ்நாட்டிற்கு வந்திருக்கக்கூடிய கோத்ரெஜ் நுகர்வோர் பொருட்கள் நிறுவனத்தின் செயல் தலைவர் நிசாபா கோத்ரெஜ் அவர்கள் மற்றும் அவருடன் வந்திருக்கக்கூடிய அனைவரையும் நான் அன்புடன் வருக! வருக! என்று வரவேற்கிறேன். இந்தத் திட்டத்தை தமிழ்நாட்டில் நிறுவியதில் உங்களுக்கு எவ்வளவு மகிழ்ச்சியோ அதைவிட இரண்டு மடங்கு எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. அதற்குக் காரணம், தமிழ்நாட்டில் உங்களின் தொழில் நிறுவனத்தை நிறுவுவது, தமிழ்நாட்டின் மேல் நீங்கள் வைத்திருக்கக்கூடிய நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.
உலக நிறுவனங்களுக்கு, தமிழ்நாடு தான் முதல் முகவரி என்று நீங்கள் வெளிப்படையாக அறிவித்தது, மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழ்நாடு அரசுக்கும், கோத்ரேஜ் நிறுவனத்திற்கும் இது ஒரு வெற்றிகரமான நிகழ்வு!515 கோடி ரூபாய் முதலீட்டில் தொடங்கப்பட்டுள்ள இந்த நிறுவனம், 1,010 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க உள்ளதாக தெரிவித்திருக்கிறீர்கள். ஆயிரம் குடும்பங்களை வாழ்விக்க இருக்கிறீர்கள் என்று நான் உள்ளபடியே மகிழ்ச்சி அடைகிறேன்! இந்த நேரத்தில் மகிழ்ச்சியோடு, பெருமையும் அடைகிறேன்!
கோத்ரெஜ் நிறுவனத்தின் 2023-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் (MOU) போட்டோம். அடுத்த ஐந்தே மாதத்தில் அதாவது, 2024-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் போது அடிக்கல் நாட்டப்பட்டது. இப்போது, அடிக்கல் நாட்டிய ஒரே ஆண்டில் துவக்கி வைக்கக்கூடிய நிகழ்ச்சியை பார்க்கும்போது எனக்கு பெருமையாக இருக்காதா…! இல்லையா! அதனால்தான் பெருமையாக இருக்கிறது என்று சொன்னேன். புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டு, ஒரு திட்டம் செயலாக்கம் பெறுவது வரைக்கும் நம்முடைய திராவிட மாடல் அரசு, எப்படி கவனமாகவும், பொறுப்போடும் செயல்படுகிறது என்பதற்கு இந்த நிறுவனம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கிறது!
வீடு மற்றும் தனிநபர் பராமரிப்பு சார்ந்த பொருட்களின் உற்பத்தியில் சிறந்து விளங்கக்கூடிய கோத்ரெஜ் குழுமத்திற்கு பல்லாண்டு பாரம்பரியமும் – பல இலட்சம் நுகர்வோரின் ஆதரவும் இருக்கிறது! தமிழ்நாட்டில் நான்காம் தலைமுறை தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கக்கூடிய வகையில், அதிநவீன உற்பத்தித் திட்டத்தை நீங்கள் நிறுவியுள்ளதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்!
தமிழ்நாட்டில் நுகர்வோர் பொருட்களின் சந்தை, மிகப்பெரிய வளர்ச்சி வாய்ப்புகளை கொண்டிருக்கிறது. இந்தத் துறை மிகவும் ஆற்றல் மிக்கது, போட்டித்தன்மை கொண்டது. இனி வருங்காலங்களில், மேலும் இந்த நிலை அதிகரிக்கும். மிகவும் நகரமயமாக்கப்பட்ட மாநிலங்களில், தமிழ்நாடும் ஒன்று என்பதால், தமிழ்நாடு பெரும்பாலான நிறுவனங்களுக்கு முக்கியமான சந்தையாக இருந்து வருகிறது.பிரிட்டானியா, டாபர், ITC நிறுவனங்கள் மற்றும் உங்களின் நிறுவனமும் சேர்த்து, பல FMCG நிறுவனங்களின் உற்பத்தித் திட்டங்கள் தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தத் துறை மேலும் வளர்ச்சி பெற தமிழ்நாட்டில் வாய்ப்புகள் ஏராளமாக இருக்கிறது. இந்தியாவின் வளர்ச்சியில், தமிழ்நாடு முக்கியப் பங்கு வகிக்கிறது என்று உங்கள் எல்லோருக்கும் நன்றாக தெரியும்…!
இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதாரமாக தமிழ்நாடு விளங்கிக் கொண்டிருக்கிறது. இந்தியாவின் பெரிய நிறுவனங்களுக்கு மட்டுமல்ல, உலகளாவிய பெருநிறுவனங்களுக்கும் தமிழ்நாடுதான் முதல் முகவரி! இந்தியாவில் மட்டுமல்ல, தெற்காசியாவிலேயே முதலீடுகள் மேற்கொள்ள சிறந்த மாநிலம், தமிழ்நாடுதான்! இறக்குமதி சார்புகளை வெகுவாக குறைத்து, உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்த நாங்கள் பெருமுயற்சிகள் எடுத்துக் கொண்டிருக்கிறோம்! எப்போதும் Positive-ஆன சிந்தனையோடு சேர்ந்த Positive-ஆன செயல்கள் எல்லாம், வெற்றியில்தான் முடியும்!
2030-ஆம் ஆண்டிற்குள், தமிழ்நாட்டை ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற வேண்டும் என்ற எங்களின் இலட்சிய இலக்கை அடைவதற்கு, அனைத்து முன்முயற்சிகளையும் நம்முடைய திராவிட மாடல் அரசு மேற்கொண்டு வருகிறது.முதலீட்டாளர்களுக்குத் தேவையான, அனைத்து ஆதரவுச் சேவைகளையும் நம்முடைய அரசு செய்து கொண்டிருக்கிறது. அதனால்தான், ஆட்சி பொறுப்பேற்ற இந்த நான்காண்டுகளில், பல்வேறு துறைகளில் பெரும் முதலீடுகளை ஈர்த்திருக்கிறோம். ஒரு செயலை தொடர்ச்சியாக செய்தால், வெற்றி நிச்சயம்! அதைத்தான் நாங்கள் செய்து கொண்டு வருகிறோம்! தொடர்ச்சியான முயற்சிகளால் தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை பெருமளவில் ஈர்க்க முடிகிறது. அந்த வகையில், உங்களின் வருகை, எங்களுக்கு ஊக்கமளிப்பதாக அமைந்திருக்கிறது!
தமிழ்நாட்டின் வளர்ச்சி என்பது, பொருளாதார வளர்ச்சி மட்டுமல்ல, அனைவரையும் உள்ளடக்கிய, சமூகநீதியை உள்ளடக்கிய வளர்ச்சி என்ற தனித்தன்மை வாய்ந்தது! பெண்கள் முன்னேற்றம் மற்றும் சமத்துவம் போன்ற கொள்கைகளை அடித்தளமாக கொண்ட ஒட்டுமொத்த வளர்ச்சி என்பதால், தமிழ்நாடு மற்ற மாநிலங்களிலிருந்து தனித்து தெரிகிறது என்று உலகத்திற்கே தெரியும்! அதனால்தான் தமிழ்நாட்டில் முதலீடுகள் வந்து குவிந்து கொண்டிருக்கிறது!
இந்த உற்பத்தித் திட்டத்தின் சிறப்பம்சமாக, 50 விழுக்காடு அளவுக்கு பெண்களுக்கும், திருநங்கைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கும் வேலைவாய்ப்பு அளிக்க உள்ளதற்கு உங்களை நெஞ்சார, மனதார நான் பாராட்ட கடமைப்பட்டிருக்கிறேன். அனைத்து மாவட்டங்களும் சீரான வளர்ச்சி பெற வேண்டும் என்று நான் அடிக்கடி குறிப்பிட்டு சொல்லி வருகிறேன். அந்த வகையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் இந்தத் திட்டம் அமைக்கப்பட்டுள்ளதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்த மாவட்டத்தில், வேளாண்மைக்கு நிகராக தொழிற்சாலைகளும், கல்வி நிறுவனங்களும் இருக்கிறது. தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் அதிகம் இருப்பதால், வேலைவாய்ப்பும் அதிகமாக இருக்கிறது. சென்னையின் நுழைவு வாயில் என்று இந்த செங்கல்பட்டு மாவட்டத்தை சொல்வது போன்று, முதலீடுகளுக்கான இந்தியாவின் நுழைவாயிலாக, முதலீடுகளுக்கான முதல் முகவரியாக நம்முடைய தமிழ்நாடு விளங்கிக் கொண்டிருக்கிறது.
அதிவிரைவாக வளர்ந்து கொண்டிருக்கும் தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் இன்றைக்கு மிக மிக முக்கியமான நாள்! இந்தத் திட்டத்தின் திறப்பு விழா இன்றைக்கு சிறப்போடு நடைபெறுவது, உண்மையில், தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்க்கும் விதமாக அமைந்திருக்கிறது என்று நான் மீண்டும் தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற முறையில், உங்களின் திட்டம் முழு வெற்றி அடைய, இந்த அரசு முழுமையான ஆதரவு அளிக்கும் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்.
சாதகமான வணிகச் சூழல், நெறிபடுத்தப்பட்ட நிர்வாக செயல்முறைகள் நிலவக்கூடிய தமிழ்நாட்டில், உங்களின் திட்டங்களை தங்குதடையின்றி செயல்படுத்தலாம். உங்கள் திட்டங்கள் மேலும் விரிவடைய வேண்டும். பல்வேறு வகையில் உயர வேண்டும். பல்வேறு துறைகளில், மேலும் பல புதிய திட்டங்களை நீங்கள் கொண்டு வர வேண்டும்! அவையெல்லாம் தமிழ்நாட்டில் அமைந்திடவேண்டும் என்று இந்த நேரத்தில் உங்களுக்கு நான் கோரிக்கையாக வைத்து, இந்த நல்லுறவு மென்மேலும் வளர்ச்சி பெறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.''இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.