For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

இணைய அடிமைகளாகும் சிறுவர்களுக்கு டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் சிறப்பு சிகிச்சை பிரிவு!

07:12 PM Feb 28, 2025 IST | admin
இணைய அடிமைகளாகும் சிறுவர்களுக்கு டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் சிறப்பு சிகிச்சை பிரிவு
Advertisement

1990-க்குப் பின் நமது வாழ்க்கை முறை இயந்திரத்தனமாகி விட்டது. பெரும்பாலும் கைபேசியுடனோ மடிக் கணினியுடனோதான் அனைவருடைய நேரமும் இன்று கழிகிறது. விளையாடுவதாக இருந்தாலும் இணையதளத்தில்தான் பெரும்பாலானவர்கள் விளையாடுகிறார்கள். இதனால் பாதிக்கப்படுவது உடல்நலம் மட்டுமல்ல; மனநலமும்தான்.அதிக அளவு இணையதளத்தைப் பயன்படுத்துவதும், இணையம் இல்லாமல் இருக்க முடியாது என்பதும், மது, புகைபோல் ஓர் அடிமைப் பழக்கம்தான். ஒரு வாரத்துக்கு 38.5 மணிநேரத்துக்கும் அதிகமாக இணையதளத்தைப் பயன்படுத்துகிறவர், மனத்தளவில் அதற்கு அடிமையாக இருப்பார் என்று ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. தற்போது, இணையதள உலகம் அசுர வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த அசுர வளர்ச்சியோ ஆரோக்கியமான முன்னேற்றத்துக்கு வழி வகுக்காமல், இணையத்துக்கு அடிமையான சமூகத்தையே உருவாக்கிவருகிறது.இச்சூழலில் இணைய போதைக்கு அடிமையாகி, அதில் இருந்து மீள முடியாமல் தவிக்கும் சிறுவர்கள் மற்றும் வாலிபர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஒரு சிறப்பு பிரிவு டெல்லியில் உள்ள எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் அமைக்கப்பட உள்ளது.

Advertisement

இந்த திட்டத்துக்கு தலைமை தாங்கும் டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியின் டாக்டர் யாதன் பால் சிங் பல்ஹாரா இது குறித்து கூறியதாவது:-–

Advertisement

இணையத்தை அதிகமாகப் பயன்படுத்துவது சிறுவர்கள் மற்றும் இளம் வயதினருக்கு மனநல பிரச்சினைகளை உண்டாக்குவதையும், அப்படி பாதிக்கப்பட்ட சிறுவர்கள் மற்றும் வாலிபர்களை இணையத்திலிருந்து விலக்கி வைக்க பள்ளி மற்றும் குடும்ப அளவிலான தலையீடுகளின் அவசரத் தேவையையும் இந்தியாவின் பொருளாதார ஆய்வு எடுத்துக்காட்டுகிறது. எனவே சிறுவர்கள் மற்றும் வாலிபர்களுக்கு இணையம் மற்றும் தொழில்நுட்ப அடிமைத்தனத்தை எதிர்த்து போராட உதவும் வகையில், நாட்டிலேயே முதன்முறையாக டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் ஒரு சிறப்பு பிரிவு அமைக்கப்பட உள்ளது.

இந்த மையம் இணையம் சார்ந்த பல்வேறு போதை பழக்கவழக்கங்களை விரிவாகக் கையாளும். இணையம் மற்றும் தொழில்நுட்பத்தின் பயன்பாட்டுடன் தொடர்புடைய மன அழுத்தம், மனச்சோர்வு, பதற்றம் மற்றும் அடிமையாதல் ஆகியவற்றைக் குறைக்க உதவும்.இந்த மையம் இளைஞர்களிடையே தொழில்நுட்பத்தின் அதிகப்படியான மற்றும் சிக்கலான பயன்பாட்டினால் பாதிக்கப்படு வதைக் கண்டறிய ஏஐ (செயற்கை நுண்ணறிவு) அடிப்படையிலான முன்கணிப்பு மாதிரியை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்திட்டம் ரூ.14 கோடி செலவில் மேற்கொள்ளப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.-இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags :
Advertisement