42 பெண்களை கொடூரமாக கொன்று புதைத்த சீரியல் கில்லர்!
கடந்த ஜூலை 11 ஆம் தேதி, கென்யாவின் தலைநகரான நைரோபியில் உள்ள குப்பை கிடங்கு ஒன்றில், பிளாஸ்டிக் பைகளில் வெட்டப்பட்டும் சிதைக்கப்பட்டும் 9 உடல்கள் கண்டெக்கப்பட்டுள்ளது. இந்த கோர சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இதையடுத்து, இந்த கொடூர கொலை குறித்து காவல்துறையினர் தொடர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, பாதிக்கப்பட்ட ஒருவரிடமிருந்து எடுக்கப்பட்ட செல்போனை சோதனை செய்ததில் காலின்ஸ் ஜூமைசி கலுஷா என்ற 33 வயது நபர் ஒருவரின் மீது சந்தேகம் எழுந்துள்ளது. இந்நிலையில், இவரிடம் விசாரணை மேற்கொள்வதற்காக, இந்த நபரை தேடி சென்றுள்ளனர். அவர் கலிசியாவில் ஒரு மதுக்கடையில் இருப்பது தெரியவரவே, கடந்த திங்கள்கிழமை அதிகாலையில் அவரை அதிரடியாக கைது செய்துள்ளனர். தொடர்ந்து கொலைகள் குறித்து, அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், குப்பை கிடங்கில் கிடந்த 9 பெண்களை கொடூரமாக கொன்றது தான்தான் என்று ஒப்பு கொண்டுள்ளார்.
அதுமட்டுமல்ல, இவரை தொடர் விசாரணை செய்ததில் பல திடுக்கிடும் சம்பவங்கள் குறித்த தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. அதில், கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை கிட்டதட்ட 42 பெண்களை இவர் கொன்று புதைத்ததாகவும், அதில் தான் முதலாவது கொலை செய்தது தன் மனைவியைதான் என்றும் தெரிவித்துள்ளார். எதற்காக இத்தனை பெண்களை கொன்றார் என்று தெரியவரவில்லை. ஆகவே போலீசார் தற்போது தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து அந்நாட்டின் குற்றவியல் புலனாய்வு இயக்குநரகத்தின் தலைவர் முகமது அமீன் தெரிவிக்கையில், “இந்த நபர் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் தனது மனைவி உட்பட 42 பெண்களை கொடூரமாக உடல்களை சிதைத்து கொன்று புதைத்ததாக தெரிவித்துள்ளார். மேலும், எங்களது விசாரணையில் கொலை செய்யப்பட்ட அனைத்து நபர்களும் ஒரே பாணியில் கொல்லப்பட்டுள்ளனர். இதன் மூலம் இவர் ஒரு சீரியல் கில்லர் என்பதை நாங்கள் தெரிந்து கொண்டோம். மேலும், இந்த குப்பை கிடங்களிலிருந்து சுமார் 100 மீட்டர் தொலையில் இருந்த இந்த நபரின் வீட்டை சோதனை செய்தோம். அங்கு நைலான் சாக்குகள், கயிறு, ஒரே ஜோடி ரப்பர் கையுறைகள், 10 தொலைபேசிகள், மடிக்கணினி, கத்தி, அடையாள அட்டைகள், பெண்களின் உள்ளாடைகள், ஆடைகள் உள்ளிட்ட ஆதாரங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன” என்று தெரிவித்துள்ளார்.
வாக்குமூலம் அடிப்படையில், இவர் கொன்று புதைத்த 16 உடல்கள் சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மேலும், இறந்த 42 பெண்கள் 18-30 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. 5 1/2 கோடி மக்கள் தொகை கொண்ட கென்யாவில் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது, அங்குள்ள மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.