For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

லால் பகதூர் சாஸ்திரி என்னும் எளிய வலிய தலைவரின் கடைசி நிமிடங்களின் ரிப்போர்ட்!

06:01 AM Jan 11, 2024 IST | admin
லால் பகதூர் சாஸ்திரி என்னும் எளிய வலிய தலைவரின் கடைசி நிமிடங்களின் ரிப்போர்ட்
Advertisement

ம்மைச் சுற்றி வாழ்பவர்களில் மிக எளிய நிலையிலிருந்து வாழ்க்கையைத் தொடங்கி நாட்டின் மிக உயர்ந்த பதவியை அடைந்தவர்கள் மிகச் சிலரே. அவர்களில் முதன்மையானவர் இந்தியாவின் முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி. ரயில் விபத்துக்கு பொறுப்பேற்று பதவி விலகியதாக இருந்தாலும் சரி, 1965இல் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போரில் பிரதமராக அவர் ஆற்றிய பணியாக இருந்தாலும்சரி, அவரால் முழங்கப்பட்ட 'ஜெய் ஜவான், ஜெய் கிசான்' என்ற முழக்கமாக இருந்தாலும் சரி, வாழ்க்கையில் தலைமைப்பண்பையும், நிர்வாகப் பண்பையும் சரியாக வெளிப்படுத்தி தனது ஆளுமையை நிரூபித்த நாயகர்களின் உதாரணங்கள் சரித்திரத்தில் மிகக் குறைவே.

Advertisement

இவரின் எளிமை குறித்து அறிந்து கொள்ள சில தகவல்கள் :

Advertisement

விடுதலைப் போராட்டம் நடைபெற்ற காலகட்டத்தில், ஏழை எளிய பின்னணியில் இருந்து வந்து பங்கேற்கும் சுதந்திர போராட்ட வீரர்களுக்கு நிதி உதவி அளிப்பதற்காக, லாலா லஜ்பத் ராய், இந்திய சமூக ஊழியர்கள் அமைப்பை (Servants of India Society) ஏற்படுத்தினார். இந்த உதவித்தொகையை பெற்றவர் லால் பகதூர் சாஸ்திரி என்ற தகவலில் இருந்து அவரது ஏழ்மையான குடும்பச்சூழலை தெரிந்துக்கொள்ளலாம். சாஸ்திரியின் குடும்பச் செலவுகளுக்காக மாதந்தோறும் 50 ரூபாய் வழங்கப்பட்டது. சிறையில் இருந்த சாஸ்திரி தனது மனைவிக்கு எழுதிய கடிதத்தில், உதவித்தொகை சரியான நேரத்தில் கிடைக்கிறதா? 50 ரூபாயைக் கொண்டு குடும்பச் செலவுகளை பராமரிக்க முடிகிறதா என்று கேட்டிருந்தார்.கணவரின் கடிதத்திற்கு உடனடியாக பதில் எழுதிய லலிதா சாஸ்திரி, 50 ரூபாய் குடும்பச்செலவுக்கு போதுமானதாக இருப்பதாகவும், 40 ரூபாய்க்குள் செலவுகளை முடித்துக் கொண்டு மாதம் 10 ரூபாய் சேமிப்பதாகவும் தெரிவித்தார்.மனைவியின் கடிதத்தை படித்த சாஸ்திரி என்ன செய்தார் தெரியுமா? உடனே இந்திய சமூக ஊழியர்கள் அமைப்புக்கு கடிதம் எழுதிய அவர், தனது குடும்பத்தின் செலவுகளுக்கு 40 ரூபாய் போதும், மீதமுள்ள 10 ரூபாயை தேவைப்படும் பிறருக்கு வழங்குமாறு கேட்டுக்கொண்டார்!

சம்பவம் 2

பிரதமராகும் வரை லால் பகதூர் சாஸ்திரிக்கு சொந்த வீடு மட்டுமல்ல, சொந்தக் கார் கூட கிடையாது. நாட்டின் பிரதமரான பிறகு, அப்பாவிடம் கார் இருக்கவேண்டும் என்று பிள்ளைகள் சொன்னதால் கார் வாங்க முடிவெடுத்தார் பிரதமர் சாஸ்திரி. அந்த காலகட்டத்தில் பியட் கார் 12 ஆயிரம் ரூபாய்க்கு விற்றது. அவரது வங்கிக்கணக்கில் இருந்ததோ ஏழாயிரம் ரூபாய் மட்டுமே! தந்தையிடம் கார் வாங்க போதுமான பணம் இல்லை என்பதை தெரிந்துக் கொண்ட பிள்ளைகள் கார் வாங்காவிட்டால் பரவாயில்லை என்று சொன்னார்கள்.பரவாயில்லை என்று சொன்ன சாஸ்திரி, பற்றாக்குறையான பணத்திற்கு வங்கியில் இருந்து கடன் வாங்கலாம் என்று சொன்னார்.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ஐந்தாயிரம் ரூபாய் கடன் வாங்கி, கார் வாங்கினார். வாங்கிய கடனை திருப்பி செலுத்துவதற்கு முன்பே இயற்கை எய்திவிட்டார் பிரதமர் சாஸ்திரி. சாஸ்திரியின் மறைவுக்கு பின் பிரதமராக பதவியேற்ற இந்திரா காந்தி, லால் பகதூர் சாஸ்திரியின் வங்கிக் கடனை தள்ளுபடி செய்வதாக அறிவித்தார். ஆனால் அதை மறுதளித்த லலிதா சாஸ்திரி தனது ஓய்வூதியத்தில் இருந்து கடனை அடைத்தார். சாஸ்திரி இறந்த நான்கு ஆண்டுகளுக்கு பிறகே அவரது காருக்கான கடன் அடைக்கப்பட்டது.அந்தக் கார் தற்போதும் டெல்லி லால் பகதூர் சாஸ்திரி நினைவகத்தில் வைக்கப்பட்டுள்ளது

இப்பேர்பட்டவர் வரலாற்று சிறப்பு மிக்க தாஷ்கண்ட் ஒப்பந்தம் கையெழுத்தான சில மணி நேரத்தில், லால்பகதூர் சாஸ்திரி மாரடைப்பால் திடீரென்று காலமானார்.

அந்த எளிய வலிய தலைவரின் கடைசி நிமிடங்களின் நேரடி ரிப்போர்ட் இதோ:

ரஷியாவில் உள்ள தாஷ்கண்ட் நகரில், பிரதமர் சாஸ்திரியும், பாகிஸ்தான் அதிபர் அயூப்கானும் நடத்திய பேச்சுவார்த்தை வெற்றி பெற்று, 1966 ஜனவரி 10ந்தேதி இரவு சமரச ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு, டெல்லியில் இருந்த மூத்த மந்திரி நந்தாவுக்கு டெலிபோன் செய்து சாஸ்திரி பேசினார். இருவரும் மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டனர்.

பின்னர் டெல்லியில் இருந்த தன் மனைவி லலிதா தேவியுடன் டெலிபோனில் பேசினார். "பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிந்தது. நாளை டெல்லி திரும்புகிறேன்" என்று தெரிவித்தார். நள்ளிரவு 3 மணிக்கு (அப்போது இந்தியாவில் நேரம் இரவு 2 மணி) சாஸ்திரிக்கு திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டது. டாக்டர் வந்து பரிசோதித்தார். சாஸ்திரியின் நாடித்துடிப்பு தளர்ந்திருந்தது. டாக்டர் ஊசி போட்டார். மற்றும் பல டாக்டர்கள் வந்து சிகிச்சை அளித்தனர். எனினும் பலன் இல்லை. சாஸ்திரி மரணம் அடைந்தார். உயிர் பிரிவதற்கு முன் அவர் உதடுகள் "ஹரே ராம்" என்ற வார்த்தையை முணுமுணுத்தன. சாஸ்திரி மரணம் அடைந்ததை அறிந்து, பாகிஸ்தான் அதிபர் அயூப்கான், ரஷிய பிரதமர் கோசிஜின் ஆகியோர் அதிர்ச்சி அடைந்தனர். விரைந்து சென்று சாஸ்திரி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அப்போது அயூப்கானும், ஜோசி ஜின்னும் கண் கலங்கினார்கள்.

11ந்தேதி காலை, தாஷ்கண்டில் இருந்து சாஸ்திரி உடல் விமானம் மூலமாக டெல்லிக்குக் கொண்டு வரப்பட்டது. சாஸ்திரி உடல் தாஷ்கண்ட் நகரில் இருந்து டெல்லிக்கு அனுப்பப்பட்ட காட்சி உள்ளத்தை உருக்குவதாக இருந்தது. சாஸ்திரியின் உடல் அவர் தங்கியிருந்த மாளிகையில், மூவர்ணக் கொடியால் போர்த்தப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. ரஷியப் பிரதமர் கோசிஜின் கண்ணீர் ததும்ப இறுதி மரியாதை செலுத்தினார். பின்னர் சாஸ்திரி உடல், ஒரு பீரங்கி வண்டியில் வைக்கப்பட்டு, தாஷ்கண்ட் விமான நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. வழி நெடுக சுமார் 10 லட்சம் பேர், சோகத்துடன் நின்று அஞ்சலி செலுத்தினார்கள்.

தாஷ்கண்ட் விமான நிலையத்துக்கு சாஸ்திரி உடல் கொண்டு செல்லப்பட்டதும், 21 பீரங்கி குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது. சாஸ்திரி உடல் வைக்கப்பட்டு இருந்த சவப்பெட்டி, விமானத்துக்கு கொண்டு செல்லப்பட்டபோது, அயூப்கானும், கோசி ஜின்னும் தோள் கொடுத்து சுமந்தனர். சாஸ்திரியுடன் தாஷ்கண்ட் சென்றிருந்த மந்திரிகள் ஒய்.பி.சவான், சுவரண்சிங் ஆகியோரும் சவப்பெட்டியை சுமந்தனர். சாஸ்திரி உடலைப் பெற்றுக்கொள்வதற்காக, டெல்லி விமான நிலையத்தில் ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் கையில் மலர் வளையத்துடன் காத்திருந்தார்.

சாஸ்திரி மரணச் செய்தியை அறிந்ததும், காங்கிரஸ் தலைவர் காமராஜர் விமானம் மூலம் டெல்லிக்கு விரைந்தார். சாஸ்திரி உடல் வந்து சேருவதற்கு முன்பே டெல்லியை அடைந்து, விமான நிலையத்தில் காத்திருந்தார்.மத்திய அமைச்சர்கள், தலைவர்கள், வெளிநாடுகளின் தூதர்கள், சாஸ்திரி குடும்பத்தினர் ஆகியோரும் விமான நிலையத்திற்கு வந்திருந்தனர். சாஸ்திரி உடலுடன் தனி விமானம் பிற்பகல் 2.31 மணிக்கு டெல்லி வந்து சேர்ந்தது. சாஸ்திரியின் உடலை இறக்க, 6 ராணுவ அதிகாரிகள் விமானத்துக்குள் சென்றனர். சாஸ்திரியின் மகன் அரிகிஷணை மந்திரி சவான், விமானத்துக்குள் அழைத்துச்சென்றார். சாஸ்திரியின் உடலைப் பார்த்து, அரிகிஷண் கதறி அழுதார்.

சாஸ்திரி உடல், பீரங்கி வண்டியில் ஏற்றப்பட்டு அவர் வீட்டுக்கு கொண்டு போகப்பட்டது. கணவரின் உடலைப் பார்த்து லலிதா சாஸ்திரி கதறி அழுதார். பல லட்சக்கணக்கான மக்கள் இறுதி மரியாதை செலுத்தினர். மறுநாள், யமுனை நதிக்கரையில் நேரு சமாதி அருகே சாஸ்திரியின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. "சிதை"க்கு, சாஸ்திரியின் மூத்த மகன் அரிகிஷண் தீ மூட்டினார். இறுதிச் சடங்குக்கு ரஷிய பிரதமர் கோசிஜின், அமெரிக்க துணை ஜனாதிபதி அம்ப்ரே, அமெரிக்க வெளிவிவகார மந்திரி டீன்ரஸ்க், ராணி எலிசபெத்தின் தூதராக மவுண்ட்பேட்டன் பிரபு, இங்கிலாந்து உதவிப்பிரதமர் பிரவ்ன், பாகிஸ்தான் வர்த்தக அமைச்சர் பரூக் மற்றும் பல அயல்நாட்டுத் தலைவர்கள் வந்திருந்தனர். இறுதி ஊர்வலத்தில் சுமார் 15 லட்சம் பேர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்.'

நிலவளாம் ரெங்கராஜன்

Tags :
Advertisement