சென்னை விமான நிலையத்தில் பயணிகளுக்காக அமலுக்கு வந்த புதிய திட்டம் !
சென்னை உள்நாட்டு முனையத்தின் டெர்மினல் 4 புறப்பாடு பகுதியில், தற்போது ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ், விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமான பயணிகளுக்கு பாஸ்ட் டிராக் திட்டம் விரிவுபடுத்தி செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் ஏர்இந்தியா ஏர்லைன்ஸ் விமான பயணிகளுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படுகிறது. இதன்மூலம் விமான நிலையத்தில் பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்க தேவையில்லை என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை உள்நாட்டு விமான நிலையத்தின் டெர்மினல் 4 -லிருந்து புறப்படும், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானங்களின் பயணிகளுக்கு, சென்னை விமான நிலையத்தில் தற்போது பாஸ்ட் ட்ராக் எனப்படும், self package drop (SBD) என்ற புதிய திட்டம் செயல்பாட்டிற்கு வந்துள்ளது.இதன்படி ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமான பயணிகள், தங்களுடைய உடமைகளை, பயணிகளே தானியங்கி இயந்திரங்கள் மூலம், ஸ்கேன் செய்து பரிசோதித்து, கண்வெயர் பெல்ட் மூலம், விமானத்தில் ஏற்றுவதற்கு அனுப்பி வைக்கலாம்.இதற்காக சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில், புறப்பாடு பகுதி டெர்மினல் 4 இல்,8 பாதுகாப்பு சோதனை தானியங்கி கவுண்டர்கள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன. இந்த கவுண்டர்களில், ஊழியர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். இயந்திரங்கள் மட்டும் இருக்கும்.பயணிகள் அந்த இயந்திரத்தில் தங்களுடைய உடைமைகளை வைத்து விட்டு, தங்களின் பயண டிக்கெட்டின் பி.என்.ஆர் எண்ணை பதிவு செய்ய வேண்டும். தானியங்கி முறையில், பயணிகளுக்கு போர்டிங் பாஸ் வந்த பின்னர், பயணி அந்த போர்டிங் பாஸை அங்குள்ள மற்றொரு இயந்திரத்தில் ஸ்கேன் செய்ய வேண்டும்.
அதன்பின்னர் உடனடியாக அந்த உடைமைகளில், பாதுகாப்பு காரணங்களுக்காக, என்னென்ன பொருட்கள் எடுத்துச் செல்லக்கூடாது என்ற விவரங்கள், இயந்திரத்தின் டிஸ்ப்ளேவில் தெரியும். அதைப் பார்த்துவிட்டு, பயணி, அந்த இயந்திரத்தில் உள்ள பட்டன் மூலம் ஓகே கொடுத்து, தான் எடுத்துச் செல்லும் உடைமைகளின் எண்ணிக்கை குறித்தும் பதிவு செய்ய வேண்டும். அந்த தானியங்கி இயந்திரம், பயணியின் உடமைகளின் எடையை ஸ்கிரீனில் காட்டும்.இதை அடுத்து பயணிகள் உடைமைகளில் ஒட்டுவதற்கான டேக்குகள், இயந்திரத்தில் இருந்து வெளியே வரும். பயணி அந்த டேக்குகளை எடுத்து தங்கள் உடைமைகளில் ஒட்டுவதோடு, அதன்பின்பு உடமைகளை, அருகே உள்ள கன்வயர் பெல்டில் வைத்துவிட்டால், பயணியின் உடைமைகள் விமானத்தில் ஏற்றுவதற்கு, தானாகவே கொண்டு செல்லப்படும்.
இந்த புதிய முறை மூலம், பயணிகள் போர்டிங் பாஸ் வாங்குவது, மற்றும் தங்கள் உடமைகளை பாதுகாப்பு சோதனைகள் நடத்தி, விமானத்தில் ஏற்றுவதற்கு, அனுப்பி வைப்பது போன்றவைகளுக்காக, நீண்ட வரிசையில், நீண்ட நேரம் காத்து நிற்க வேண்டிய அவசியம் இல்லை. அதிக சீக்கிரத்தில் அப்பணிகளை முடித்துவிட்டு, பயணிகள் விமானங்களில் ஏறுவதற்கு தயாராகி விடலாம்.
இந்த புதிய திட்டத்திற்கு பாஸ்ட் ட்ராக் செல்ஃப் பேக்கேஜ் ட்ராப்ட் (எஸ் பி டி) என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. மேலும் டெர்மினல் 4 உள்நாட்டு முனையத்தில், தற்போது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ,விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானங்களுக்கு மட்டும் இந்த புதிய முறை அமுல் படுத்தப்பட்டிருந்தாலும், அடுத்த சில தினங்களில் ஏர் இந்தியா பயணிகள் விமானத்துக்கும் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது.இதனால் பயணிகள் நீண்ட நேரம் விமான நிலையத்தில் காத்திருக்க வேண்டியதில்லை என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.