தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

மத்திய அரசு நடத்தும் தேர்வுகளில் முறைகேட்டை தடுக்க புதிய சட்டம் அமலானது!

08:37 AM Jun 23, 2024 IST | admin
Advertisement

யுஜிசி-நெட் 2024 தேர்வுத் தாள் கசிவு தொடர்பாக எழுந்த சர்ச்சையை அடுத்து மத்திய அரசு நடத்தும் போட்டித் தேர்வுகளில் முறைகேடு செய்தால் அதிகபட்சம் 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1 கோடி அபராதமும் விதிக்கக் கூடிய கடுமையான சட்டம் அமலுக்கு வந்துள்ளது. ஜனாதிபதி திரௌபதி முர்மு நான்கு மாதங்களுக்கு முன்பு பொதுத் தேர்வு (நியாயமற்ற வழிமுறைகள் தடுப்பு) சட்டம் 2024க்கு ஒப்புதல் அளித்தார். இந்தச் சட்டத்தை நாட்டில் அமல்படுத்துவதற்கான அறிவிப்பை பணியாளர்கள், பொதுமக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட நிலையில் அமலானது..

Advertisement

மருத்துவ இளங்கலை படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் கடந்த மே 5ம் தேதி நடத்தப்பட்டது. இத்தேர்வை 24 லட்சம் மாணவர்கள் எழுதினர். இத்தேர்வுக்கு முன்பாகவே நீட் வினாத்தாள் கசிந்ததாக பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக பீகார் போலீசார் சிலரை கைது செய்தனர்.அத்துடன் , ஜூன் 4ம் தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியான போது, வழக்கத்திற்கு மாறாக ஒரே தேர்வு மையத்தை சேர்ந்த 6 மாணவர்கள் உட்பட 67 பேர் 100 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதுதவிர, பல்வேறு காரணங்களால் தேர்வெழுத முழுமையான நேரம் கிடைக்காத 1500க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டதும் கடும் குழப்பத்தை ஏற்படுத்தியது. இதனால் நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட பல முறைகேடுகள் நடந்திருப்பதாக மாணவர்கள் குற்றம்சாட்டி போராட்டங்களில் ஈடுபட்டனர்.

Advertisement

இந்நிலையில், நீட் தேர்வை நடத்திய தேசிய தேர்வு முகமை கடந்த ஜூன் 19ம் தேதி நடத்திய யுஜிசி நெட் தேர்வு வினாத்தாள் கசிந்ததால் பிரச்னை பூதாகரமானது. நெட் தேர்வை 11 லட்சம் மாணவர்கள் எழுதிய நிலையில் உடனடியாக அத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. இது தொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரிக்கிறது. இவ்வாறு அடுத்தடுத்து நீட், நெட் தேர்வு வினாத்தாள்கள் கசிவு விவகாரம் தேசிய தேர்வு முகமை மீதான நம்பகத்தன்மை மீது சந்தேகத்தை ஏற்படுத்திய நிலையில், நாடு முழுவதும் போராட்டங்கள் வலுத்துள்ளன. உச்ச நீதிமன்றத்திலும் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்நிலையில், நாடு முழுவதும் நடைபெறும் நீட் உள்ளிட்ட பொதுத் தேர்வுகள் மற்றும் நுழைவுத் தேர்வுகளில் நடக்கும் முறைகேடுகளை தடுக்க புதிய சட்டம் ஒன்றை ஒன்றிய அரசு அமல்படுத்தியுள்ளது.

பொதுத் தேர்வுகளில் முறைகேடுகள் தடுத்தல் சட்டம் 2024 அமலுக்கு வந்திருப்பதாக ஒன்றிய அரசு அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது. இந்த சட்ட மசோதா கடந்த பிப்ரவரி 5ம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு அடுத்த நாள் நிறைவேற்றப்பட்டது. மாநிலங்களவையில் பிப்ரவரி 9ம் தேதி நிறைவேற்றப்பட்டது, பிப்ரவரி 13ம் தேதி ஜனாதிபதி முர்மு ஒப்புதல் அளித்தார். அதன் பிறகு சுமார் 4 மாதங்களுக்குப் பிறகு கடும் சர்ச்சைகளுக்கு மத்தியில் இந்த சட்டத்தை ஒன்றிய அரசு நேற்று முன்தினம் இரவு முறைப்படி அமல்படுத்தி உள்ளது.

இந்த சட்டத்தின் முக்கிய அம்சங்கள்:

* இந்த சட்டம் ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி), ரயில்வே, தேசிய தேர்வு முகமை (என்டிஏ), எஸ்எஸ்சி, பொதுத்துறை வங்கி ஊழியர் தேர்வுகள் மற்றும் ஒன்றிய அரசின் பல்வேறு துறைகளுக்கான போட்டித் தேர்வுகளுக்கு பொருந்தும்.

* தேர்வுக்கு முன்பாக வினாத்தாள் பெறுதல், வினாத்தாள் கசியவிடுதல், ஆள் மாறாட்டம், கம்ப்யூட்டர் நெட்வொர்க்கில் சட்டவிரோதமாக நுழைந்து தேர்வு ஆவணங்கள் மற்றும் ரேங்க் பட்டியலை எடுத்தல், போலி அடையாள அட்டை தயாரித்தல், தேர்வு தொடர்பான பாதுகாக்கப்பட்ட தகவல்களை வெளியிடுதல், தேர்வு மையத்தில் சம்மந்தமில்லாத நபர்களை அனுமதித்தல் போன்றவை அனைத்தும் முறைகேடுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

* முறைகேட்டில் ஈடுபடும் தனிநபர்களுக்கு 3 முதல் 5 ஆண்டு வரை சிறை தண்டனையும் அதிகபட்சம் ரூ.10 லட்சம் அபராதமும் விதிக்கப்படும்.

* கூட்டாக முறைகேடுகளில் ஈடுபட்டால் அதிகபட்சம் 5 முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ரூ.1 கோடி அபராதமும் விதிக்கப்படும்.

* நிறுவனங்கள் முறைகேடுகளில் ஈடுபட்டால், அவற்றின் சொத்துக்கள் முடக்கப்பட்டு, அவற்றின் மூலம் மறுதேர்வுக்கான செலவுகள் ஈடுகட்டப்படும்.

* இந்த சட்டத்தின் கீழ் நடக்கும் முறைகேடுகள் ஜாமீனில் வெளி வர முடியாதவை. இச்சட்டம் தற்போது அமலுக்கு வந்துள்ளது.

Tags :
A new lawcentral government examseffect to preventmalpracticeneetucgநீட்நெட்யுசிஜி
Advertisement
Next Article