For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

அடுத்த ஒரு சில வாரங்களில் பல கார்கள் செகண்ட் ஹேண்ட் மார்க்கெட்டில் விற்பனைக்கு வர வாய்ப்பு!

10:05 PM Dec 05, 2023 IST | admin
அடுத்த ஒரு சில வாரங்களில் பல கார்கள் செகண்ட் ஹேண்ட் மார்க்கெட்டில் விற்பனைக்கு வர வாய்ப்பு
Advertisement

மிரட்டி, புரட்டிப் போட்டு விட்டு போன மிக்ஜாம் புயல் காரணமாக கன மழை பெய்து இதனால் சென்னை மாநகர தற்போது மழை வெள்ள நீரில் தத்தளித்து வருகிறது. பல இடங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் நேற்று சாலையில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் எல்லாம் தண்ணீரில் அடித்துப் போன வீடியோக்களை எல்லாம் நாம் சமூக வலைதளங்களில் காண முடிந்தது. பல வாகனங்கள் தற்போது வரை தண்ணீரில் மூழ்கியுள்ளன.ஒரு வாகனத்தின் எஞ்சின் தண்ணீரில் மூழ்கியிருந்தால், மேலும் சேதத்தைத் தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். இயந்திரத்தைத் தொடங்க முயற்சிப்பது கடுமையான இயந்திரச் சிக்கல்களுக்கு வழிவகுக்கும் மற்றும் வாகனத்தை செயலிழக்கச் செய்யலாம். இதை அடுத்து மெக்கானிக்கிடம் போக வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்தும் நிஜம். அப்படி மழை வெள்ளம் ஏற்பட்டு தண்ணீரில் மூழ்கிய வாகனங்களை மெக்கானிக்குகள் மூன்று வகையாக பிரிப்பார்கள். கேட்டகிரி ஏ,பி,சி என அவை பிரிக்கப்படும். அதற்கு ஏற்றார் போல ரிப்பேர் செலவினங்களும் மதிப்பிடப்படும். அதன்படி கேட்டகிரி ஏ பிரிவு என்றால் வாகனத்தின் டயர் பகுதி மற்றும் கதவுக்கு கீழ் உள்ள பகுதி வரை மட்டும் நீருக்குள் மூழ்கி இருத்தல். இந்த பிரிவில் நீரில் மூழ்கிய வாகனங்களை ரிப்பேர் செய்வது மிகவும் சுலபமான விஷயமாக இருக்கும்.கேட்டகிரி பி வாகனம் என்பது அப்படி அல்ல இதன் செலவு மதிப்பீடு என்பதை சரியாக இவ்வளவுதான் இருக்கும் என சொல்லிவிட முடியாது. பாதி மூழ்கி இருக்கும் கார்களுக்குள் தண்ணீர் புகுந்து இருக்கலாம். காரின் இன்ஜின் உள்ளே தண்ணீர் சென்றிருக்கலாம். இதனால் மெக்கானிக் காரின் ஒவ்வொரு பாகமாக ஆய்வு செய்து எவ்வளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளன என்பதை மதிப்பீடு செய்து அதை வைத்து தான் எவ்வளவு செலவாகும் என முடிவு செய்வார்கள்.கேட்டகிரி சி பிரிவு என்பது முழுமையாக கார் தண்ணீருக்குள் மூழ்கி இருக்கும் விஷயமாகும். இந்த பிரிவில் கார்களை சரி செய்ய நிச்சயம் லட்சக்கணக்கில் பணம் செலவாகும். காரின் உட்புறம் முதல் இன்ஜின் வரை பல இடங்கள் பாதிப்பு உள்ளாகி இருக்க அதிகமான வாய்ப்புகள் உள்ளன. இந்த பிரிவில் உள்ள கார்களை பெரும்பாலும் மக்கள் பயன்படுத்தாமல் அதை விற்பனையே செய்ய வாய்ப்புள்ளது.

Advertisement

அதே சமயம் இப்படி நீரில் முழுக்க மிதந்த கார் மற்றும் இருசக்கர வாகனங்களை மெக்கானிக் ஷெட்டுக்கு எடுத்துச்சென்று அவற்றை முதலில் உட்புகுந்துள்ள நீரை சுத்தம் செய்து மற்றும் இதர பாகங்களையும் சுத்தம் செய்த பிறகே வண்டியை ஸ்டார்ட் செய்ய வேண்டும் என்று எச்சரித்துள்ளனர். அது மட்டுமின்றி தேங்கி இருக்கும் நீரில் செல்வது குறித்தும் அறிவுறுத்தல்கள் வழங்கியுள்ளனர். கார்களைப் பொறுத்தவரை ரெனால்ட் க்விட், மாருதி ஸ்விஃப்ட், வெர்னா, ஐ10 போன்ற வாகனங்களில் அரை அடி முதல் முக்கால் அடி ஆழம் வரை உள்ள தண்ணீரில் செல்லலாம். அதுவே, எஸ்யூவி-களான ஹுண்டாய் கிரெட்டா, டாடா நெக்சான், ஸ்கார்பியோ, பொலேரோ போன்ற பெரிய வாகனம் என்றால் அதிகபட்சம் ஒரு அடி ஆழம் வரை செல்லலாம்.அப்படி செல்லும்போது மணிக்கு 10-20 கி.மீட்டருக்கு மிகாமல் செல்ல வேண்டும். தண்ணீரை குடைந்து கொண்டு வேகமாக செல்லக் கூடாது. அப்படி சென்றால், 'ஏர் ஃபில்டர்' வழியாக தண்ணீர் வாகன எஞ்சினுக்குள்ளே இழுத்துக் கொள்ளப்படும். ஆகவே வேகத்தை கட்டாயமாகத் தவிர்க்க வேண்டும்.

Advertisement

சக்கர உயரத்தில் பாதியளவு வரை மூழ்கி விடும் அளவுக்கான தண்ணீரில் சென்று வந்தபிறகு, பிரேக்குகளில் சேறு சகதிகள் சேர்ந்துவிடக்கூடும் என்பதால் முன், பின் என இரண்டு பக்கமும் பிரேக் சரியாக வேலை செய்கிறதா எனப் பார்க்க வேண்டும். கனமழையில் தண்ணீர் நிரம்பி நிற்கும் சாலையில் சென்று வந்த பிறகு, அடுத்த நாளில் மீண்டும் வாகனத்தை எடுக்கும் முன்பாக கீழே குனிந்து பார்க்க வேண்டும். ஒருவேளை கூலன்ட் தண்ணீரோ, இன்ஜின் ஆயிலோ கசிந்திருந்தால் நிச்சயமாக அதைக் கவனிக்க வேண்டும். அதேபோல், பேனெட்டை திறந்து, எஞ்சின் ஆயில் அளவை சோதிக்க வேண்டும். அதோடு தண்ணீர் கலந்திருந்தால், எஞ்சின் ஆயிலின் நிறம் பால் போன்ற வெள்ளை நிறத்திற்கு மாறியிருக்கும். அப்படி ஆகியிருந்தால், அதையும் கவனிக்க வேண்டும்.

மூன்றாவதாக, பிரேக்கில் அசாதாரணமான சத்தம் கேட்டாலும் வாகனத்தை பழுது பார்க்க கொண்டு செல்ல வேண்டும். அதைத் தொடர்ந்து வாகனத்தை எடுக்கும்போது எந்த இடைஞ்சலும் இன்றி ஸ்டார்ட் ஆகிவிட்டால் எந்தப் பிரச்னையுமில்லை. அப்படியில்லாமல், இவற்றில் ஏதேனும் பிரச்னை இருந்தாலும் பழுது பார்த்தாக வேண்டும்.

இருசக்கர வாகனங்களை பொருத்தவரை மழை நேரங்களில் ஆக்டிவா, ஸ்கூட்டி போன்ற ஸ்கூட்டர் வகை வாகனங்களை எடுப்பதைத் தவிர்த்துவிட வேண்டும். இரு சக்கர வாகனங்களில் தண்ணீர் தேங்கியிருக்கும் பகுதிகளில் சைலென்சர் நனையாத வகையில் செல்லும்போது வாகனத்திற்கு எந்த பாதிப்பும் கிடையாது. அது மூழ்கிவிட்டால், வண்டி எந்த நிலையில் சென்று கொண்டிருக்கிறதோ அதே நிலையில் ஆக்சிலேட்டரை சீராக கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்.

இல்லையென்றால், சைலென்சர் வழியாக தண்ணீர் புகுந்து இன்ஜினுக்குள் சென்றுவிடும். எஞ்சினுக்குள் சென்றுவிட்டால், வாகனம் மொத்தமாக நின்றுவிடும். சராசரியாக ஒரு அடிக்கு மேல் தண்ணீர் இருந்தாலே சைலென்சருக்குள் போய்விடும். ஆகவே ஓட்டும்போதும் நிறுத்தி வைக்கும்போதும் தண்ணீரின் அளவு சைலென்சரை எட்டுகிறதா என்பதைக் கவனிக்க வேண்டும். ஒருவேளை தண்ணீர் உள்ளே புகுந்து வாகனம் நின்றுவிட்டால், உடனே அதை ஸ்டார்ட் செய்யக் கூடாது. மெக்கானிக் கடைக்கு கொண்டு சென்று, சைலென்சர் போன்ற பாகங்களை கழட்டி காய வைக்க வேண்டும். தண்ணீர் உள்ளே சென்ற பிறகு ஸ்டார்ட் செய்துவிட்டால், ஆயிலோடு தண்ணீர் கலந்துவிடும். அது இன்ஜினில் இருக்கும் பிஸ்டன் வரைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். ஏர் ஃபில்டரில் காற்று புக முடியாமல் கார்பரேட்டர் அடைத்துவிடும். ஆகவே, வண்டி நின்றுவிட்டால், இயன்றவரை அதை ஸ்டார்ட் செய்யாமல் இருப்பதே நல்லது.

தண்ணீரில் நீண்ட நாட்கள் நின்றாலும் இதைச் செய்தால் போதும். அதோடு, தண்ணீர் வடிந்த பிறகு சைலென்சர், ஏர் ஃபில்டருக்குள் தண்ணீர் புகுந்துள்ளதா என்று பார்க்க வேண்டும். அப்படி போயிருந்தால், அதைக் கழட்டி சுத்தம் செய்து பொருத்த வேண்டும். மற்றபடி எந்தப் பிரச்னையும் வராது. வாகனம் மழையிலேயே நீண்ட நாள் நின்றாலும், தினமும் 30 நிமிடமாவது ஸ்டார்ட் செய்து நின்ற இடத்திலேயே ஓடவிடுவது நல்லது. அப்படிச் செய்தால், வண்டி பாகங்கள் சூடாகிக் கொள்ளும், பெரிய பிரச்னைகள் எதுவும் இருக்காது. இருப்பினும், தண்ணீர் வடிந்து வண்டியை எடுக்கும்போது ஒரு மெக்கானிக்கிடம் வண்டியை விட்டு ஒரு பரிசோதனை செய்துகொள்வது நல்லது.

இதனிடையே இப்படி நீரில் மிதந்த காரின் ரிப்பேர் செலவு குறைவாக இருந்தால் அவர்கள் சொந்த செலவிலேயே இந்த ரிப்பேர் செய்து விடுவார்கள் எனவும் அதிகமாக இருந்தால் இன்சூரன்ஸ் கிளைம் பெற்று இந்த ரிப்பேர் செய்வார்கள் எனவும் சில பல மெக்கானிக்குகள் கூறும் நிலையில் மற்றொரு தகவல் ஒன்றையும் கூறியுள்ளனர். அதன்படி அதிகமான செலவு வந்துவிட்டால் அதை இன்சூரன்ஸ் மூலம் கிளைம் பெற்று அந்த காரை சரி செய்யும் வாடிக்கையாளர்கள் உடனடியாக அந்த காரை செகண்ட் ஹேண்ட் மார்க்கெட்டில் விற்றுவிட்டு வேறு ஒரு புதிய காரை வாங்க தான் முடிவு செய்வதாகவும் தெரிவித்துள்ளனர். இதனால் சென்னையில் இப்போது வெள்ளம் வந்து போன காரணமாக நீரில் மூழ்கிய கார்கள் அடுத்த ஒரு சில வாரங்களில் செகண்ட் ஹேண்ட் மார்க்கெட்டில் விற்பனைக்கு வர அதிகமான வாய்ப்புகள் உள்ளன. இப்படியாக வரும் கார்கள் சென்னையில் அல்லாமல் வெளியூர்களுக்கு கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறதாம்.

நிலவளம் ரெங்கராஜன்

Tags :
Advertisement