மும்பையில் டி20 கோப்பையுடன் வந்த வீரர்களை வரவேற்ற ரசிகர்கள் வெள்ளம்- இதுவரை உலகமே கண்டிராத அதிசயம்!
டி-20 உலகக்கோப்பையை 13 ஆண்டுகளுக்கு பின்னர் வென்று நேற்று தாயகம் திரும்பிய இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுடன் பிரதமர் மோடி சந்தித்து அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். அதன் பிறகு மும்பையில் நடைபெற்ற பிரம்மாண்ட வரவேற்பில் இந்திய வீரர்கள் டி-20 உலகக்கோப்பையுடன் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் மத்தியில் ஊர்வலமாக சென்ற நிகழ்வு அகில இந்திய அளவில் ஹாட் டாபிக் ஆகி விட்டது. தில் கடலென திரண்ட ரசிகர்களுக்கு மத்தியில் உலகக் கோப்பையுடன் இந்திய அணி வீரர்கள் வெற்றிப் பெருமிதத்துடன் திறந்த பஸ்சில் ஊர்வலமாக சென்றனர். சாதித்த வீரர்களுக்கு பிசிசிஐ சார்பில் ரூ.125 கோடி ரொக்கப்பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது.
இந்திய கிரிக்கெட் அணி வெற்றி கோப்பையுடன் தனது வெற்றி அணிவகுப்பை மும்பையில் தொடங்கியது. டி20 உலகக் கோப்பை சாம்பியன்களைக் காணத் திரண்டிருந்த கிரிக்கெட் ரசிகர்களின் கடல் அலைகளுக்கு இடையே இந்த அணிவகுப்பு பேருந்து சென்றது. இந்திய கிரிக்கெட் அணியின் வருகைக்காக மும்பை மரைன் டிரைவில் மக்கள் மற்றும் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. இந்திய அணியின் வெற்றி அணிவகுப்பு மரைன் டிரைவிலிருந்து வான்கடே மைதானம் வரை நடைபெற்றது. எங்கு பார்த்தாலும் மனித தலைகளுடன் இந்திய அணிக்கு வரலாறு காணாத வரவேற்பு அளிக்கப்பட்டது. கடலென திரண்ட ரசிகர்கள் வீரர்களை வாழ்த்தி கோஷமிட்டனர். அவர்களிடம் இந்திய வீரர்கள் உலகக் கோப்பை காட்டி, ரசிகர்களின் ஆரவாரத்திற்கு மத்தியில் நடனமாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்த வெற்றி ஊர்வலத்தால் மும்பையே அதிர்ந்தது.
https://x.com/BCCI/status/1808924161747681755
இரவு 7.30 மணிக்கு தொடங்கிய வெற்றி ஊர்வலம், இரவு 9 மணி அளவில் வான்கடே ஸ்டேடியத்தை சென்றடைந்தது. அங்கு நடந்த வெற்றி விழாவில், பிசிசிஐ ஏற்கனவே அறிவித்தபடி, ரோகித் அண்ட் கோவுக்கு ரூ.125 கோடி ரொக்கப்பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது. இந்த வெற்றியுடன் கேப்டன் ரோகித் சர்மா, ரன் மெஷின் விராட் கோஹ்லி, சுழற்பந்துவீச்சாளர் ஜடேஜா ஆகியோர் டி20ல் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளனர். பயிற்சியாளராக டிராவிட் தனது பணியை நிறைவு செய்துள்ளார். வெற்றிக் கோப்பை வெல்ல முக்கிய காரணமாக அவர்களுக்கும் ஒட்டுமொத்த இந்திய அணிக்கும் பிரமாண்ட வெற்றி விழா மூலம் ரசிகர்கள் பதில் மரியாதை செய்துள்ளனர்.
பேரணி முடிந்து வான்கடே மைதானத்திற்கு சென்ற இந்திய அணி வீரர்களுக்கு பாராட்டு விழாவில் விராட் கோலி பேசியது:
உலகக்கோப்பையின் ஒவ்வொரு போட்டியிலும் எங்களை சரிவிலிருந்து மீட்டவர் பும்ரா; இறுதிப்போட்டிக்கு உயிர் கொடுத்து வெற்றிக்கு காரணமான பும்ராவை மீண்டும் மீண்டும் பாராட்டுகிறேன் என கூறினார்.
இந்திய கேப்டன் ரோஹித் சர்மா பேசியது:
இந்திய அணி ஒரு ஸ்பெஷலான அணி. இப்படி ஒரு அணி கிடைக்கப்பெற்றதை அதிர்ஷ்டமாக நினைக்கிறேன்; இது ஒட்டுமொத்த தேசத்துக்கான வெற்றிக்கோப்பை என்றார்.
இந்திய கிரிக்கெட் வீரர் பும்ரா பேசியது:
கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதில் இருந்து தற்போதைக்கு ஓய்வு பெறப்போவது இல்லை. எனது கெரியர் தற்போது தான் ஆரம்பித்துள்ளது; கிரிக்கெட் போட்டியில் தொடர்ந்து விளையாடுவதற்கு ஆர்வமாக உள்ளேன். என்றார்.
பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பேசியது:
இந்திய அணி என்னுடைய குடும்பத்தைப் போன்றது. கடின உழைப்பிற்கு கிடைத்த வெற்றியாகும்; இந்த அணிக்கு பயிற்சி அளித்ததில் பெருமை கொள்கிறேன் என்றார்.
உலகில் பல நாடுகளிலும் உலக கோப்பை வென்ற அணியை பாராட்ட வெற்றி ஊர்வலங்கள் நடத்தப்படுவது வழக்கம். ஆனால் மும்பையில் குவிந்ததை போன்ற ரசிகர்கள் வெள்ளம் இதுவரை உலகமே கண்டிராத அதிசயம்.