For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

முட்டுக்காடு படகு குழாமில் மிதவை உணவக கப்பல் வந்தாச்சு!

04:55 PM Jan 09, 2025 IST | admin
முட்டுக்காடு படகு குழாமில் மிதவை உணவக கப்பல் வந்தாச்சு
Advertisement

செங்கல்பட்டு மாவட்டம் முட்டுக்காடு படகு இல்லத்தில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக சென்னையில் புதுமையான அனுபவத்தை அளிக்க தனியார் நிறுவனத்தின் பங்களிப்புடன் மிதவை படகு உணவகத்தை பொது மக்களின் பயன்பாட்டுக்காக அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், ஆர். ராஜேந்திரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.இம்மிதவை படகு உணவகம் 3,000 சதுர அடி பரப்பளவுடன் இரண்டு அடுக்குகள் கொண்ட 100 நபர்கள் அமர்ந்து உணவருந்தும் வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், கருத்தரங்குகள், அலுவலக கூட்டங்கள். பிறந்தநாள் கொண்டாட்டங்கள், கேளிக்கை விருந்துகள் போன்ற நிகழ்ச்சிகள் நடத்த ஏதுவாக இப்படகு உணவகம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Advertisement

செங்கல்பட்டு மாவட்டம், முட்டுக்காடு பகுதியில் அதிகமான சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் விதமாக இரண்டடுக்கு உணவகக் கப்பலுக்கான கட்டுமானப்பணியை கொச்சியை சேர்ந்த தனியார் நிறுவனம் மேற்கொண்டது. அந்த கப்பல் சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டிற்கு நேற்று கொண்டு வரப்பட்டது. இதன் தொடக்க நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், சிறு, குறு தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் ஆகியோர் சொகுசு மிதக்கும் உணவக கப்பலை இயக்கி, சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர். பின்னர் சுற்றுலா பயணிகளுடன் அந்த உணவக கப்பலில் முட்டுக்காடு படகு துறையில் உள்ள பக்கிங்காம் கால்வாய் நீரில் வலம் வந்தனர்.

Advertisement

தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுக் கழகம் மற்றும் கொச்சியைச் சேர்ந்த தனியார் நிறுவனமும் இணைந்து, தமிழகத்திலேயே முதல் முறையாக இப்படியொரு புதிய முயற்சியை முன்னெடுத்துள்ளன. வாரம் முழுக்க அனைத்து நாட்களிலும் இந்த கப்பல் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. “சீன்ஸ் க்ரூஸ்” என பெயரிடப்பட்டுள்ள இந்த கப்பலில் அமைந்துள்ள ஒட்டுமொத்த உணவகமும் குளிர்சாதன வசதி கொண்டது.

இந்த சொகுசு உணவக கப்பலில் பயணித்து உணவருந்த தனி நபர் கட்டணம், குழு கட்டணம், பார்ட்டி கட்டணம், ஐ.டி. ஊழியர்கள் குழு கட்டணம் உள்ளிட்ட கட்டண விபரங்களின் பட்டியலை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் இறுதி செய்து இன்று அறிவித்துள்ளது. மேலும் முட்டுக்காடு படகுக் குழாமில், இந்த கப்பலுக்கென சிறப்பு இடம் அமைக்கப்பட்டு, அங்கிருந்து விருந்தினர்கள் 1.5 கிலோ மீட்டர் தொலைவுக்கு கடலுக்குள் கப்பலில் சென்று திரும்பும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. முதல் தளம், தொலைக்காட்சித் திரை, இசை நிகழ்ச்சி போன்றவற்றுடன் அமைந்துள்ளது.

அலுவலக கூட்டங்கள், சிறிய விருந்து அல்லது பிறந்தநாள் கொண்டாட்டங்கள் போன்றவற்றை மக்கள் இங்கே நடத்திக்கொள்ளலாம். இங்கு 100 பேர் வரை இருக்கலாம். இரண்டாவது தளம் உணவு சாப்பிடும் இடமாகவும், பப்பே முறையில் உணவு வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. சர்வதேச விருந்தினர்கள் பங்கேற்கும் விருந்துகளில் அதற்கேற்ப உணவுகள் மாறும் என்றும் கூறப்படுகிறது.

மீட்புப் படகுகள், தீயணைப்புக் கருவிகள் உள்ளிட்ட அனைத்து விதமான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் காலை 7.30 மணி முதல் இங்கு உணவகம் இயங்கும். குழுவாகச் சென்று உணவருந்த விரும்பினால் முன்பதிவின் பேரில் செய்துகொடுக்கப்படும் என்றும் முட்டுக்காடு படகு குழாம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags :
Advertisement