'தனிமனித வாழ்க்கையில் மதத்தின் குறுக்கீட்டைப் பற்றிப் பேசும் படம் - 'அஞ்சாம் வேதம்!
அறிமுக இயக்குநர் முஜீப் டி முகமது எழுதி இயக்கிய மலையாளத் திரைப்படமான 'அஞ்சாம் 'வேதம் பிப்ரவரி 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தை ஹபீப் அபூபக்கர் தயாரித்துள்ளார், அஞ்சாம் வேதத்தின் வசனம் மற்றும் இணை இயக்கம் பினேஷ் ராஜ். சாகர் அய்யப்பன் ஒளிப்பதிவு இயக்குநர். அஞ்சாம் வேதம் பல வகைமையான திரை அம்சங்கள் அடங்கிய படமாகும்.இது அதன் கதைக்களத்தில் பல்வேறு மர்மமான முடிச்சுகளையும், புதிர்களையும், திருப்பங்களையும் கடந்து செல்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு கேரளாவின் மலைப்பாங்கான பகுதிகளில் நடந்து முடிந்துள்ளது. குருசுமலை என்ற கற்பனைக் கிராமத்தில் கதை விரிகிறது.
இந்தப் படம் ஒரு குடும்பத்தில் மதம் நுழைந்து ஏற்படுத்தும் தாக்கத்தைப் பற்றி பேசுகிறது. மதம் சார்ந்த சித்தாந்தம் , நம்பிக்கைகள்,அடிப்படைவாதம், வன்முறை போன்றவை குடும்ப வாழ்க்கையில் நுழைந்து அவை ஏற்படுத்தும் விளைவுகள் என்னென்ன என்பதைப் பற்றியும் பேசுகிறது.அதனால் அந்தக் குடும்பத்தில் குழப்பங்கள், விவாகரத்து, கொலை வரை விரும்பத்தகாதவை பலவும் நிகழ்கின்றன. ஒரு குடும்பத்தில் மதம் நுழைந்து அதன் இயல்பில் ஏற்படுத்தும் எதிர்மறையான விளைவுகளைப் பற்றித் துணிவாக இப்படம் பேசுகிறது.
இந்த திரைப்படத்தின் ஒவ்வொரு காட்சியும் ஒரு சஸ்பென்ஸ் மற்றும் சிலிர்ப்பான நிகழ்வுகளின் வழியாகச் செல்லும் ரோலர்கோஸ்டர் காட்சி அனுபவமாக மாறும். அஞ்சாம் வேதம் திரைப்படம், சமுதாயத்தில நிலவும் சாதி, மத, அரசியல் சூழலை நகைச்சுவையுடன் தொட்டு நையாண்டி படமாகவும் அமைந்திருக்கிறது. உடை, மொழி, சித்தாந்தம், வழிபாடு என நாம் வேறுபட்டாலும் சாதி, மதம், அரசியல் நம்பிக்கைகள் அனைத்தையும் தாண்டி மனிதர்கள் ஒருவரையொருவர் நேசிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற செய்தியை இப்படம் உணர்த்துகிறது.
புதுமுகம் விஹான் விஷ்ணு நாயகன். நயன்தாராவின் அறம் படத்தின் மூலம் தமிழில் பிரபலமான சுனு லட்சுமி மலையாளத்தில் இப்படம் மூலம் அறிமுகமாகிறார். மாதவி, கேம்பஸ் போன்ற பல படங்களின் மூலம் தமிழில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்த சஜித்ராஜ் மற்றொரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். கல்லூரி நாட்கள், பிரமுகன் போன்ற சில படங்கள் மூலம் மலையாளிகளுக்கும் அறிமுகமானவர் சஜித்ராஜ். தமிழில் இலை மற்றும் சாத்தான் படத்தின் மூலம் இயக்குநராகவும், திரைக்கதை எழுத்தாளராகவும் அறிமுகமான பினீஷ் ராஜ் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.சிறிய பட்ஜெட் படங்களுக்கு விஷுவல் எஃபெக்ட்ஸ் என்பது நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று என்ற பொதுவான மாயையை மாற்றி எழுதும் சிறப்பும் அஞ்சாம் வேதத்துக்கு உண்டு.
படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை பல காட்சிகளில் காணப்படும் சில அழகான இடங்கள் முழுக்க முழுக்க VFX மூலம் உருவாக்கப்பட்டுள்ளன. உதாரணமாக இயற்கையை விவரிக்கும் ரஃபிக் அகமதுவின் வரிகளை ஜியா-உல்-ஹக் பாடும் பாடல் காட்சிகள் முழுக்க முழுக்க விஷுவல் எஃபெக்ட்ஸ் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டிருப்பது ஆச்சரியமான உண்மை. 2017 ஆம் ஆண்டு சிறிய பட்ஜெட் தமிழ்த் திரைப்படமான இலையில் தொடக்கம் முதல் இறுதி வரை பிரமாண்டமான VFX காட்சிகளை உருவாக்கி தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் திரையுலகினரை ஆச்சரியத்தில் ஆழ்த்திய பினீஷ் ராஜ் ,இந்தப் பாடலில் விஷுவல் எஃபெக்ட்ஸ் காட்சிகள் மூலம் மலையாளத்தில் அறிமுகமாகிறார்.மலையாளத்தில் பினீஷ் ராஜின் அறிமுகமானது செயற்கை நுண்ணறிவின் மேம்பட்ட சாத்தியங்களைப் பயன்படுத்துவதன் மூலம் கவனம் பெறுகிறது. தமிழில் இரண்டு படங்களுக்குக் கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ள பினீஷ் ராஜ், அஞ்சாம் வேதம் படத்திற்கு வசனம் எழுதியதோடு, இப்படத்திற்கு இணை இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.இந்த அஞ்சாம் வேதம் விரைவில் தமிழிலும் வெளியாகிறது.