சாதாரணப் பொது ஜனம் ரயில் கொள்ளையர்களாக மாற வாய்ப்பு!
கடந்த சில மாதங்களாக இந்திய ரயில்வேயில் ஒரு விஷயம் அதிகம் நடக்கிறது. பலரும் கவனித்திருக்கலாம். நம்முடைய ரயில்களில் கூட்டம் கட்டுக்கடங்காமல் போய்க் கொண்டிருக்கிறது. அடிமாடுகளை கேரளாவுக்குக் கொண்டு போகிற லாரிகளை விடவும் நெரிசலாக ரயில் பெட்டிகள் மாறிவிட்டன. முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் மக்கள் கூட்டம் கூட்டமாக ஏறுவதும், அதில் எந்தத் தயக்கமும் இல்லாமல் பிறருடைய சீட்டுகளில் அமர்ந்துகொள்வது, அதில் தூளி கட்டித் தூங்குவது, பாதைகளில் கூட உட்கார்ந்துகொள்வது என்பது சகஜமாகிவிட்டது. ஸ்லீப்பரில் ஆரம்பித்து இப்போது ஏசி இரண்டாம் வகுப்பு, முதல் வகுப்புப் பெட்டி வரையிலும் மக்கள் கூட்டம் கூட்டமாகப் பயணிக்கிறார்கள்.
தினந்தோறும் ட்விட்டரிலும் பேஸ்புக்கிலும் இப்படி மாட்டிக்கொண்டு அவதிப்பட்ட அபலைகளின் கண்ணீர்க் கதைகளும் குமுறல் வீடியோக்களும் ஆயிரக்கணக்கில் பதிவேற்றப் படுகின்றன. எல்லோரும் தவறாமல் ரயில்வே மந்திரியிடம், 'சாப் இதர் தேக்கோ...பொகூத் முஸ்கில் ஹே' என முறையிடுகிறார்கள். தவறாமல் மந்திரி சார்ந்த கட்சியினர் இதெல்லாம் அரசின் மீது அவதூறு பரப்ப, செய்யப்பட்ட பொய் பரப்புரை, ரயில்கள் சொர்க்கமாகி விட்டன என முட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்! இப்படி முட்டுக்கொடுக்கத்தானே இந்த டாமி ஜிம்மிகளைச் சோறு போட்டு வளர்க்கிறார்கள்! ஆனால் உண்மை நிலை என்பதை ரயில்களில் தொடர்ந்து பயணிக்கிறவர்களால் எளிதில் கண்டுபிடித்து விட முடியும்!
இந்தக் கும்பல் ஆக்கிரமிப்பாளர்களால் முன்பதிவு செய்த மக்களால் நிம்மதியாகப் பயணிக்க முடிவதில்லை. கழிப்பறைகளைப் பயன்படுத்த முடிவதில்லை. வயதானவர்கள், கைக்குழந்தை வைத்திருப்போருக்கெல்லாம் சிரமம். தென்னிந்தியாவில் நிலைமை இன்னும் இந்த அபாய அளவை எட்டவில்லை. இப்போதைக்குப் பகல் நேர வட இந்திய ரயில்களில் மட்டும்தான் யம்மா யம்மா என்று நம்மைக் கதறவிடுகிறார்கள். இரவு ரயில்களில் கூட்டமில்லை. நம் மாநிலத்திற்குள் வளைய வரும் டிரெயின்களில் அவ்வளவு மோசமில்லை. ஆனால் தமிழ்நாட்டைத் தாண்டிவிட்டால் உங்களால் பகலில் முன்பதிவு செய்த பெட்டிகளில் பயணிக்கவே முடியாது. அன் ரிசர்வ்ட் காம்பர்ட்மென்ட்டை விட மோசமாக நெருக்கியடித்துக்கொண்டு அமர்ந்திருப்பார்கள். உங்களுடைய ஸ்டேஷன் வரும்போது இறங்கக்கூட கதவைத் திறக்க மறுப்பார்கள். அல்லது உங்களுடைய ஸ்டேஷனில் ரயிலில் ஏறக் கூட விட மறுப்பார்கள். (தமிழ் நாட்டிலிருந்து வடக்கு நோக்கிச் செல்லுகிற ரயில்களிலும் இதுதான் இன்றைய நிலை.)
இது ஒரு பக்கம் என்றால், முன்பதிவு செய்தவர்களின் நிலையும் அப்படி ஒன்றும் சிலாக்கியமானதாக இல்லை. சாதாரண முன்பதிவில் ஒரு மாதம் முன்பே டிக்கட் போடுகிறீர்கள். வெயிட்டிங் லிஸ்ட் வருகிறது என்றால், பெரும்பாலான நேரங்களில் ஆர்.ஏ.சி தான் (இருக்கை மட்டும்) ஒதுக்கப்படுகிறது. முன்பெல்லாம் ரயில்களில் அதிலும் ஸ்லீப்பர், ஏசி மூன்றாம் வகுப்புப் பெட்டிகளில் இத்தனை ஆர்.ஏ.சி.களைப் பார்க்க முடியாது. ஆனால் இப்போதெல்லாம் முதியவர்களுக்குக் கூட ஆர்.ஏ.சி அதிகம் போடப்படுகிறது. வரிசையாக இரவு நேரத்தில் அமர்ந்து கொண்டே போகிறவர்களை நிறையப் பார்க்க முடிகிறது.
தட்கலில் பதிவு செய்தால் மட்டும்தான் இடம் உறுதி இல்லையென்றால் உட்காரத்தான் முடியும்! ப்ளாக்கில் டிக்கட் விற்பது போல இப்போது புதிதாக ப்ரீமியம் தட்கல் என பல ஆயிரத்திற்கு டிக்கட்டுகளை விற்கிறது ரயில்வே. அதுவும் கூடக் கிடைப்பதில்லை. அப்படியே ஏறினாலும் ரயில்களின் தரமும் பெருமளவில் குறைந்துவிட்டன. ரயிலில் தரப்படுகிற உணவு முன்பு எப்போதையும் விட மிக மோசமாகிவிட்டது. 'வந்தே பாரத்' களில் கூட நல்ல சோறு கொடுப்பதில்லை. சரியான பரமாரிப்பு இல்லை.மக்கள் அதிகமாகிவிட்டார்களா…? அல்லது ரயில்கள் குறைந்துவிட்டனவா? ஏன் இப்படி ஒரு அல்லாட்டம் என்று தோண்டிப் பார்த்தால், சில விஷயங்கள் தெரிந்தது.
ரயில்வே பங்குச்சந்தையில் நுழைந்து தனியார் முதலீடுகளைப் பெறத் தொடங்கிய பிறகுதான் இந்த நிலை என்பது கண்கூடாகத் தெரியும். ரயில்வே மக்களுக்குச் சேவை செய்யும் நிறுவனம் என்கிற இடத்திலிருந்து இன்று லாபத்தை ஈட்டித் தன்னுடைய முதலீட்டாளர்களை மகிழ்ச்சிப் படுத்துகிற இடத்திற்கு நகர்ந்துவிட்டது. இந்த செமி தனியார் மயம் என்பதாலேயே பணத்தை மிச்சப்படுத்தும், லாபத்தைப் பெருக்கும் நடவடிக்கைகளை அதிகப்படுத்தி இருக்கிறது ரயில்வே!
அதனால்தான் முன்பு இருந்ததைவிட ஏசி பெட்டிகள் அதிகமாகவும், ஸ்லீப்பர் மற்றும் அன்ரிசர்வ்ட் பெட்டிகளையும் வெகுவாகக் குறைத்துவிட்டார்கள். இன்று எந்த ரயிலில் பார்த்தாலும் ஏசி பெட்டிகள்தான் அதிகம் இருக்கின்றன. அதோடு வட மாநிலங்களில் அதிகம் லாபம் ஈட்டித் தராத பாசஞ்சர் வண்டிகளையும் பெருமளவில் குறைத்து விட்டதாகச் சொல்கிறார்கள். பேருந்து வசதிகளில் இன்னும் பிரிட்டிஷ் காலத்தில் இருக்கிற வட மாநிலங்களுக்கு ரயில் ஒன்றே கதி மோட்சம். ரயில்களின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்புக்கான நிதியும் வெகுவாகக் குறைக்கப்பட்டிருக்கிறது. முன்பெல்லாம் ரயில்களில் எத்தனை காவல்துறை ஆட்களைப் பார்க்க முடியும். இப்போதெல்லாம் யாரையும் பார்க்க முடிவதில்லை. ஏசி பெட்டிகள் தவிர மற்ற பெட்டிகளில் பராமரிப்பு என்பது பேருக்குத்தான் செய்யப்படுகிறது!
இப்படி ஒரு பக்கம் ஏழைகள் பயணிக்க முடியாதபடி பெட்டிகளைக் குறைத்திருக்கிறார்கள், அவர்கள் எல்லாம் எப்படி ஊர்களுக்குச் செல்ல முடியும். அதனால்தான் இந்தக் கும்பல் ஆக்கிரமிப்புகளில் ஈடுபடுகிறார்கள். இன்னொரு பக்கம் வந்தே பாரத் ரயில்களின் மேல் அதிகக் கவனத்தையும் மற்ற ரயில்களின் மீதான கவனத்தையும் குறைத்துக் கொண்டிருக்கிறார்கள். வந்தே பாரத் ரயிலுக்காக மற்ற ரயில்களின் நேரம் மாற்றப்படுகிறது. அவற்றின் வேகம் குறைக்கப்படுகிறது. பராமரிப்புக்கும் பாதுகாப்புக்கும் செய்யப்படுகிற நிதியில் பெரும்பான்மை இந்த வந்தேபாரத் ஜிகினாவுக்கும் ரயில் நிலைய தாடி பொம்மை செல்ஃபி பாய்ன்ட்களுக்கும் போகிறது!
இது ரயில்வேயைத் தனியார் மயம் ஆக்குவதற்கான ஏற்பாடாக இருக்கலாம். அல்லது முடிந்தவரை இதிலிருந்து லாபம் பார்க்கிற வேலையாகவும் இருக்கலாம். அல்லது ஊழலாக இருக்கலாம். ஆனால் ஒன்று மட்டும் உறுதி, இப்படியே போனால் இந்தியா முழுக்கவே சாதாரணப் பொது ஜனம் ரயில் கொள்ளையர்களாக மாறி ரயில்களை ஹைஜாக் செய்யத் தொடங்கிவிடவும் வாய்ப்பிருக்கிறது!