தமிழ்நாட்டில் 69.72% வாக்குகள் பதிவாம் - இந்திய தேர்தல் ஆணையம் மாறி மாறி அறிவிப்பு!
பாராளுமன்ற முதற் கட்டத் தேர்தல் நேற்று 21 மாநிலத்தில் 102 தொகுதிகளில் நடைபெற்று முடிந்தது. அந்த வகையில் தமிழ்நாட்டிலும் 39 தொகுதிகளிலும் நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு ஆரம்பித்து மாலை 6 மணிக்கு நிறைவு பெற்றது. 6 மணிக்குள் வாக்குச்சாவடிக்குள் வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு இரவு 8 மணியை தாண்டியும் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனால் துல்லியமான வாக்குப்பதிவு நிலவரம் அறிவிக்கப்படாமல் இருந்து வந்தது. இப்படியான சமயத்தில் தான் நேற்று இரவு தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யப்பிரதா சாகு தமிழகத்தில் 72.09 சதவீத வாக்குகள் பதிவானதாக அறிவித்தார். மேலும் தபால் வாக்குகள் எண்ணப்படவில்லை என்றும் அதில் குறிப்பிட்டு இருந்தார். இருந்தாலும் உறுதியான நிலவரம் இன்று வெளியிடப்படும் என அறிவித்தார்.
இதனை தொடர்ந்து இன்று காலை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட தகவலின் படி, தமிழகத்தில் 69.46 சதவீதம் வாக்குகள் பதிவானதாக குறிப்பிடப்பட்டிருந்தது. தமிழக தேர்தல் ஆணையர் சொல்லியதற்கும் இதற்கும் 2.63 சதவீத வாக்குகள் வித்தியாசம் இருந்தது. இதனால் உறுதியான வாக்குப்பதிவு நிலவரம் என்ன என்பதில் குழப்பமான நிலை இருந்தது. இந்நிலையில் உறுதியாக தமிழகத்தின் துல்லியமான வாக்குப்பதி நிலவரம் குறித்து தமிழக தலைமை தேர்தல் ஆணையர் செய்தியாளர் சந்திப்பில் அறிவிப்பார் என்று தகவல்கள் அவ்வப்போது வெளியாகின. ஆனால் இறுதி வரை அப்படி எந்தஒரு செய்தியாளர்கள் சந்திப்பும் நடைபெறவில்லை.
இப்படியான சமயத்தில் சில மணி நேரங்களுக்கு முன்பு இந்திய தேர்தல் ஆணையம் மீண்டும் மாநில வாரியாக வாக்கு பதிவு விவரங்களை வெளியிட்டு இருந்தது. அதில் ஏற்கனவே குறிப்பிட்டு இருந்தபடி தமிழகத்தில் 69.46 சதவீத வாக்குகள் பதிவானதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. அதை அடுத்து தற்போது மீண்டும் புதிய வாக்கு எண்ணிக்கை சதவீதத்தை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன்படி, தமிழ்நாட்டில் 69.72 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இது முன்பு அறிவிக்கப்பட்ட சதவீதத்தை காட்டிலும் 0.26 சதவீதம் அதிகம் ஆகும். இதே போல் அனைத்து மக்களவைத் தொகுதிகளில் வாக்கு சதவீதத்தில் சிறிய அளவிலான மாற்றம் பதிவாகியுள்ளது. உதாரணமாக கோவையில் 64.81 சதவீதம் வாக்குகள் பதிவானதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது 0.08 சதவீதம் அதிகரித்து 64.89 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் 72.47 வாக்குகள் பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது வெளியான அறிவிப்பில் தொகுதி வாரியாக பார்த்தால் அதிகபட்சமாக தர்மபுரியில் 81.20 சதவீத ஓட்டு பதிவாகி உள்ளது. குறைந்தபட்சம் என்றால் மத்திய சென்னையில் 53.96 சதவீத ஓட்டு பதிவாகி உள்ளது. மேலும் திருவள்ளூர் தொகுதியில் 68.59 சதவீதம், வடசென்னையில் 60.11 சதவீதம், தென்சென்னையில் 54.17 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் 60.25 சதவீதம், காஞ்சிபுரத்தில் 71.68 சதவீதம், அரக்கோணத்தில் 74.19 சதவீதம், வேலூரில் 73.53 சதவீதம், கிருஷ்ணகிரியில் 71.50 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளது.
அத்துடன் திருவண்ணாமலையில் 74.24 சதவீதம் ஆரணியில் 75.76 சதவீதம், விழுப்புரத்தில் 76.52 சதவீதம், கள்ளக்குறிச்சியில் 79.21 சதவீதம், சேலத்தில் 78.16 சதவீதம், நாமக்கல்லில் 78.21 சதவீதம், ஈரோட்டில் 70.59 சதவீதம், திருப்பூரில் 70.62 சதவீதம், நீலகிரியில் 70.95 சதவீதம், கோவையில் 64.89 சதவீதம், பொள்ளாச்சியி்ல 70.41 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளது.
அதோடு திண்டுக்கல்லில் 71.41 சதவீதம், கரூரில் 78.70 சதவீதம், திருச்சியில் 67.51 சதவீதம், பெரம்பலூரில் 77.43 சதவீதம், கடலூரில் 72.57 சதவீதம், சிதம்பரத்தில் 76.37 சதவீதம், மயிலாடுதுறையில் 70.09 சதவீதம், நாகப்பட்டினத்தில் 71.94 சதவீதம், தஞ்சாவூரில் 68.27 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளது.
மேலும் சிவகங்கையில் 64.26 சதவீதம், மதுரையில் 62.04 சதவீதம், தேனியில் 69.84 சதவீதம், விருதுநகரில் 70.22 சதவீதம், ராமநாதபுரத்தில் 68.19 சதவீதம், தூத்துக்குடியில் 66.88 சதவீதம், தென்காசியில் 67.65 சதவீதம், திருநெல்வேலியில் 64.10 சதவீதம், கன்னியாகுமரியில் 65.44 சதவீதம் என மொத்தம் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் 69.72 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுளது.