ரஷ்யா இசைக் கச்சேரியில் நடந்த தாக்குதலில் 60 பேர் பலி; ஐ.எஸ். பொறுப்பேற்பு!
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நேற்று நடைபெற்ற இசைநிகழ்ச்சி ஒன்றின்போது அரங்கினுள் நுழைந்த பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டும், வெடிகுண்டுகளை வீசியும் கோரத்தாண்டவம் ஆடினர். இந்த தாக்குதலில் 60 அப்பாவி ரஷ்யர்கள் பலியானது உறுதியானது. இந்த தாக்குதல் நடந்ததுமே, ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜாகரோவா,``கொடூரமான இந்தக் குற்றச்சம்பவத்தை உலக நாடுகள் கண்டிக்க வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டார். மேலும் பலரின் சுட்டுவிரல் உக்ரைன் நோக்கியே நீண்டது. ஆனால் உக்ரைன் தரப்பில் இதற்கு கடுமையான மறுப்பு வந்தது. போர்க்களத்துக்கு அப்பால் அப்பாவி ரஷ்யர்களுடன் எங்களுக்கு எந்த விரோதமும் இல்லை என தெளிவுபடுத்தியது.இதனிடைய அமெரிக்க உளவு நிறுவனங்கள் மாஸ்கோ இசைக் கச்சேரி தாக்குதலின் பின்னணியில் ஐஎஸ்ஐஎஸ்-கே பயங்கரவாத அமைப்பு இருப்பதாக கண்டறிந்துள்ளது
ரஷிய தலைநகர் மாஸ்கோவில் கிரோகஸ் சிட்டி அரங்கு உள்ளது. இந்த அரங்கில் நேற்று இரவு பிரபல பிகினிக் இசைக்குழுவின் இசை நிகழ்ச்சி நடந்தது. இந்த இசை நிகழ்ச்சியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். அப்போது அங்கு வந்த சில மர்ம நபர்கள், இசை நிகழ்ச்சி அரங்கிற்குள் நுழைந்து அங்கிருந்த பார்வையாளர்கள் கூட்டத்தின் மீது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். வெடிகுண்டுகள் வீசப்பட்டது. தீ வைப்பு சம்பவங்களும் நடந்தது. இதில், இசை நிகழ்ச்சி நடந்த அரங்கு முழுவதும் தீப்பற்றி எரிந்தது. தாக்குதல் சம்பவத்தை அறிந்த போலீசார், மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.
சமீபத்தில் நடந்த தேர்தலில் புதின் வெற்றிபெற்று மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் ரஷியாவில் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.சிரியாவை மையமாக கொண்டு செயல்படும் ஐஎஸ் அமைப்பின் பல்வேறு கிளை அமைப்புகள் உலகம் முழுமைக்கும் செயல்பட்டு வருகின்றன. நேற்று முன்தினம்கூட, ’ஐஎஸ்ஐஎஸ் - இந்தியா’ தலைவரான ஹரிஸ் ஃபரூக்கி மற்றும் அவரது சகாவான ரெஹான் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். வங்கதேசத்தில் பயிற்சி பெற்று இந்திய எல்லைக்குள் நுழைந்தவர்கள் குறித்து, இந்திய உளவுத்துறைக்கு கிடைத்த ரகசியத் தகவலை அடுத்து அசாமில் அவர்கள் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்ககது.
அதே சமயம் உக்ரைனில் ரஷ்யா போர் மூன்றாவது ஆண்டாக இன்னும் தொடரும் நிலையில், இந்த தாக்குதல் நிகழ்ந்துள்ளது. மாஸ்கோவின் மேற்கு எல்லையில் 6,200 பேர் தங்கக்கூடிய பெரிய இசை அரங்கான குரோகஸ் சிட்டி ஹாலில் தாக்குதல் நடத்திய சில நிமிடங்களுக்குப் பிறகு புடினுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது என்று கிரெம்ளின் கூறியது. மாநில குற்றப் புலனாய்வு அமைப்பான புலனாய்வுக் குழு சனிக்கிழமை அதிகாலையில் 60க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக அறிவித்தது.
காயமடைந்த 145 பேரின் பட்டியலை சுகாதார அதிகாரிகள் வெளியிட்டனர் - அவர்களில் ஐந்து குழந்தைகள் உட்பட 115 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாக்குதல் நடத்தியவர்கள் வெடிகுண்டுகளை வீசிய பிறகு ஏற்பட்ட தீயில் மேலும் பல பேர் சிக்கியிருக்கலாம் என சில ரஷ்ய செய்திகள் தெரிவிக்கின்றன.