For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

மணிப்பூரில் மெய்தி போராளி 4 அமைப்புகளுக்கு 5 ஆண்டுகள் தடை!

06:05 PM Nov 13, 2023 IST | admin
மணிப்பூரில் மெய்தி போராளி 4 அமைப்புகளுக்கு 5 ஆண்டுகள் தடை
Advertisement

மணிப்பூர் மாநிலத்தில் ஆதிக்கம் செலுத்தும் பெரும்பான்மை மெய்தி மற்றும் சிறுபான்மை பழங்குடி குக்கி சமூகங்களுக்கு இடையே, கடந்த மே 3 முதல் வன்முறை தலைவிரித்தாடி வருகிறது. இதில் அந்த மாநிலத்தில் குறைந்தது 178 பேர் கொல்லப்பட்டுள்ளனர்; 50,000 பேர் இடம்பெயர்ந்துள்ளது நாட்டையே அதிரவைத்தது. தற்போது வரையில் மணிப்பூர் மாநில கலவரம் பற்றிய பேச்சுக்கள் நாடாளுமன்றம் மட்டுமல்லாது சாமானிய மக்கள் வரையில் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

Advertisement

இந்த கலவரமானது, மைத்தேயி இன மக்கள் தங்களை பழங்குடி இன பிரிவில் சேர்க்க கோரியபோது, அதற்கு ஐகோர்ட் அனுமதி அளித்ததில் இருந்து துவங்கியது. அந்த உத்தரவுக்கு எதிராக பழங்குடியின மக்களான குக்கி இன மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் களமிறங்கியதில் இருந்து தொடங்கியது. இதில் இரு பக்கமும் உயிர்சேதங்கள் ஏற்பட்டாலும் குக்கி இன பழங்குடியின மக்களுக்கு அதிக அளவில் உயிர்சேதங்கள் ஏற்பட்டன. 170-க்கும் அதிகமானோர் இந்த கலவரத்தில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

Advertisement

இந்நிலையில், மணிப்பூரில் குக்கி, மெய்தி இன மக்களுக்கு இடையே வன்முறை நடைபெற்று வரும் நிலையில் 4 அமைப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி மக்கள் விடுதலை இராணுவம் (PLA), அதன் அரசியல் பிரிவான புரட்சிகர மக்கள் முன்னணி (RPF), ஐக்கிய தேசிய விடுதலை முன்னணி (UNLF) மற்றும் அதன் ஆயுதப் பிரிவான மணிப்பூர் மக்கள் இராணுவம் ஆகிய 4 அமைப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த 4 அமைப்புகளுக்கும் இந்தியாவின் இறையாண்மையை பின்பற்றவில்லை என்பதால் 5 ஆண்டுகள் தடை விதித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தியாவின் இறையாண்மைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் கேடு விளைவித்ததை அடுத்து இந்த தடை விதிக்கப்படுவதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.இந்த அமைப்புகள், ’ஆயுதப் போராட்டத்தின் மூலம் இந்தியாவிலிருந்து மணிப்பூரைப் பிரித்து ஒரு சுதந்திர தேசத்தை நிறுவுவதையும், மணிப்பூரின் பழங்குடியினரை அத்தகைய பிரிவினைக்கு தூண்டுவதையும்’ நோக்கமாக கொண்டிருப்பதாக உள்துறை அமைச்சகத்தின் தடை அறிவிப்பில் விளக்கப்பட்டுள்ளது.

மணிப்பூரில் பாதுகாப்புப் படையினர், காவல்துறை மற்றும் பொதுமக்கள் மீதான தாக்குதல்கள், கொலைகள், இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு பாதகமான நடவடிக்கைகளில் இந்த அமைப்புகள் ஈடுபடுவதாக அரசாங்கம் கருதுவதால் தடை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. சர்வதேச எல்லைக்கு அப்பால் இருந்து சட்டவிரோத ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை இந்த அமைப்புகள் பெறுவதாகவும், தங்களின் சட்டவிரோத நடவடிக்கைகளுக்காக பொதுமக்களிடம் இருந்து பெரும்நிதியை மிரட்டி வசூலிப்பதாகவும் உள்துறை அமைச்சகத்தின் தடை உத்தரவு விவரிக்கிறது.

மத்திய , மாநில அரசுகள் மெய்தி குழுவிற்கு ஆதரவாக உள்ளதாக குக்கி தரப்பினர் கூறி வரும் நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement